ஸாகிட்: ‘பிஎன் போன்ற’ புதிய கூட்டணி அமைக்க வேண்டும்

பிஎன் போன்ற ஒரு புதிய பல்லின கூட்டணியை அமைக்க வேண்டும் என்று பிஎன் இடைக்காலத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து முன்னாள் ஆளுங்கூட்டணி சிதறிப் போய் விட்டதால் இவ்வாறு கூறப்படுகிறது.

பல அரசியல் கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணி அமைப்பது, அதன் உறுப்பினர்கள் மற்றும் அதன் பெயர் ஆகியவை குறித்து ஆய்வதற்கு நமக்கு அம்னோ உச்சமன்றத்திலிருந்து அதிகாரம் கிடைக்கும் என்று தெரிவித்த ஸாகிட், ஒவ்வொரு கட்சியும் அதன் தனித்தன்மையுடன் இருக்கும், ஆனால் பிஎன் போல அவை கூட்டணி அமைத்து, புதிய அரசாங்கம் அமைக்க இணைந்து செயல்பட முடியும் என்று அம்னோ தலைமையகத்தில் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸாகிட், மலாய் உரிமைகளுக்கான கட்சி இதர அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது என்றும் கூறினார்.

நாம் பல்லின சமுதாயத்தில் வாழ்கிறோம். அம்னோ மலாய்க்காரர்களுக்கான கட்சி என்ற போதிலும், நாம் மற்ற இனங்களைக் கொண்ட கட்சிகளுடனும், இனச் சார்பற்ற கட்சிகளுடனும் சேர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது என்று மேலும் கூறிய அவர், நாம் ஒரே சக்தியாக இணைந்து உழைக்க வேண்டும், அப்போதுதான் அனைத்து இனங்களும், சமயங்களும், பின்னனிகளும், கலாச்சாரங்களும் தேச நிர்மானிப்பில் இடம் பெற முடியும் என்றார்.