அபெட்ஸ்: 2000 ஏக்கர் நில நிர்வாகத்தில் இளங்கோவிற்கு பதில் யார்?; சீர் திருத்தங்கள் தேவை !

 

அண்மைய பத்திரிக்கைச்  செய்தி ஒன்றில்  பேரா சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு  சிவநேசன் அவர்கள் , பேரா அரசால் வழங்கப் பெற்ற 2000 ஏக்கர் நிலம் குறித்த விவரங்களை  கேட்டுள்ளார்.

இந்த நிலம் பேரா  மாநிலத்தில் உள்ள இந்திய மாணவர்களின்   கல்வி வளர்ச்சிக்காக  ஒதுக்கப்பட்ட  ஒன்று  என்று  எல்லோருக்கும் தெரியும்.

அதன் நிர்வாக  முறை குறித்து  ஆரம்ப முதலே பல கேள்விகள் எழுப்பட்டு , இது வரையில்  திருப்திகரமான  பதில்  எதுவும்  சம்பந்தப்படவர்களிடமிருந்து வரவில்லை என்பதுதான் உண்மை.

இது பேரா அரசு கொடுத்த நிலமாதலால் , கொடுக்கப்பட்ட  காலக்கட்டத்தில்  பாரிசான் ஆட்சியில்   இருந்ததனால்  அப்போதைய  மாநில முதல்வரின் ஆலோசகராகவும்  ம.இ.கா பேரா மாநில தலைவராகவும் இருந்த  டான்ஸ்ரீ  வீரசிங்கத்திடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்படிருந்தது. அவர் தலைமையில்  பேரா மாநில கல்வி மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பெற்று  அதில் உறுப்பினர்களாக , அரசுசாரா இயக்கங்கள் , அரசு  பிரதிநிதிகள் , அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் என பலரைச் சேர்த்துக் கொண்டார். தேசிய நில நிதி  கூட்டுறவு சங்கப் பிரதிநிதியாக  டத்தோ சகாதேவனும் ஒருவராக  அதில் இடம் பெற்றார்.

இப்பொழுது ஆட்சி மாறிவிட்ட காரணத்தினால் அதன் விவரங்கள் அனைத்தும்  நடப்பில் இருக்கும் அரசாங்கத்திற்கு  தெரிய வருவது அவசியம் என  மாண்புமிகு சிவநேசன்  கருத்து  தெரிவித்துள்ளார்.

தற்பொழுதுள்ள தலைவர் டான்ஸ்ரீ  வீராசிங்கத்திற்கும் , டத்தோ இளங்கோவிற்கும்  தெரியும் தகவல்கள் அனைத்தும் இப்பொழுது நடப்பு அராசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் இருக்கும் மாண்புமிகு  சிவனேசனுக்கும், மாண்புமிகு சிவகுமாருக்கும்  தெரிய வேண்டிய சூழல்  ஏற்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தில் உள்ள அனைத்து  உறுப்பினர்களும் அங்கு  நிரந்தரமாக  பதவியில் இருப்பது  ஒரு அறவாரியத்தின்  செயல்பாட்டிற்கும்  வளர்ச்சிக்கும் உகந்தது அல்ல என்று பேரா மாநில தமிழ்ப் பள்ளி மேலாளர்  வாரியச் சங்கம்  (அபெட்ஸ்) கருதுகிறது. நியமனம் பெரும்பொழுது அவ்வுறுப்பினர்கள்  தனிப்பட்ட நபர்களாக  தேர்வு  செய்யப்படவில்லை. அவர்கள்  சார்ந்த இயக்கங்களின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த அந்த இயக்கங்களின் தலைமைத்துவத்தில்  மாறுதல்  ஏற்படும் பட்சத்தில்   இந்த அறவாரியத்தின் உறுப்பியத்திலும்  மாறுதல் ஏற்படுவதுதான் முறையும்  வழக்கமும் கூட.  அந்த அடிப்படையில் , புதிய உறுப்பினர்  சுழல் முறையில்  தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று  அபெட்ஸ்  கருதுகிறது. 2011 வருடம் முதல் அபெட்ஸ் இந்த 2000 ஏக்கர் நிலத்திற்கு உண்மையாக போராடி வருகின்றது என்று  தமிழ்ப் பள்ளி வட்டாரங்கள் அறியும்

உதாரணமாக பேரா மாநில அரசு  பிரதிநிதியாக டத்தோ இளங்கோ நியமிக்கப்பட்டர். அவர் தற்பொழுது அந்த பதவில் இல்லை . யார் அவரின் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்கள் ?

பிரதமர் துறையின் பிரதிநிதியாக டத்தோ என் எஸ் ராஜேந்திரன்  முன்பு சேர்த்துக் கொள்ளப்பட்டார். இப்பொழுது அவரும் அந்தப் பதவியில் இல்லை . இப்பொழுது அவரின் இடத்திற்கு யார் வருகிறார்கள்  ?

தலைமை ஆசிரியர்  மன்றத்தை  பிரதிநிதித்து  தேர்ந்தெடுக்கப்பட்டவர்  திரு.முனியாண்டி  .இப்பொழுது  அவர் அதன்  தலைவராக இல்லை. முறைப்படி இப்பொழுதுள்ள தலைமை ஆசிரியர் மன்றத்தலைவர் தான் இந்த  அறவாரியத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது ஏன் இன்னும் நடைபெறவில்லை ?

இயக்க உறுப்பினர்களில்   மாற்றங்கள்  வந்தாலும் மேல் மட்டத்தில்  இருக்கும்  மூவரின் உறுப்பியம் மட்டும் மாறப்போவதில்லை என்று  டான்ஸ்ரீ  வீரசிங்கம்  கூறியதாக அபெட்ஸ் அறிகிறது. இது  சட்ட ரீதியாக  ஆராயாயப்பட வேண்டிய ஒன்று. மேலும் இது எவ்வளவு  ஆரோக்கியமான அணுமுறை என்ற கேள்வியும்  எழுகிறது.  யாயாசான் எனும் வாரியம் ஒரு தனிப்பட்ட  சார்பாருக்கு உடமை ஆகாது.

அதோடு  உறுபினர்களின் பதவி காலமும் வரையறுக்கப்பட வேண்டும். இரண்டு அல்லது மூன்று தவணைக்கு மேல் ஒருவர் ஒரு பதவியில்  நீடிக்கக்கூடாது. உறுப்பினர்களுக்கு வயது  கட்டுப்பாடு இருந்ததால் அது மேலும் அறவாரியத்தின்   ஆரோக்கியமான  நிர்வாகத்திற்கு  வழி வகுக்கும்..

2000  ஏக்கரில்  1800 ஏக்கரில்  பயில் செய்யப்படுள்ளதாக  அறிகிறோம். இது ஒரு சராசரி தோட்டத்தின் பரப்பளவு என்று  கூறலாம். குளருபடிகளும் , நிர்வாக  முறைகேடுகளும் நடை பெற வாய்ப்புகள் இருக்கலாம் . ஆகவே இதனை நிர்வகிக்கும் முறைகள் வெளிப்படையாகவும் , சிறந்த முறையிலும் இருக்க  வேண்டுமென விரும்புகிறோம். இதன் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும்  மற்ற உறுப்பினர்களுக்கும் தெரியும் வண்ணம்  இருத்தல் வேண்டும்.

இந்தியர்களுக்காக  ஆரம்பிக்கப்பட்ட பல நிறுவனங்கள் முறையாக  நிர்வகிக்கப் படாததால், தனி மனித ஆதிக்கத்தின் காரணாமாக அதன் ஆரம்ப இலக்கை அடைய முடியாமல்   சமுதாயத்தை  ஏமாற்றிய காரணத்தினால் ,  இந்த வாரியமும் அந்த நிலைக்கு போகக்கூடாது என்ற ஆதங்கத்தின் பெயரில் சீர்திருத்தங்கள் உடனடியாக  செய்யப்பட வேண்டும் என்று அப்பெட்ஸ் விரும்புகிறது. இது குறித்து அபெட்ஸ் பரிந்துரை ஒன்றை மாண்புமிகு  சிவநேசன் அவர்களுக்கு விரவில்  அனுப்பி வைக்கும்.

முனைவர் டாக்டர் முனியாண்டி நரசிம்மன்

செயலாளர்

பேரா மாநில தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியச் சங்கம்

அபெட்ஸ் ஈப்போ

25.06.18