மன்னரும்  நான்கு  மனைவிகளும்

  • கி.சீலதாஸ், ஜூலை 2, 2018.

ஒரு நாட்டின் மன்னருக்கு மனைவிகள் நால்வர். நான்காவது மனைவி மீது மன்னருக்கு அளவற்றப்  பாசம், எனவே, அந்த மனைவிக்கு விலை உயர்ந்த ஆபரணங்களையும், உடைகளையும் வாங்கித் தந்து  மகிழ்ந்தார்.

தமது  மூன்றாவது  மனைவியை  அவர்  மிகவும்  நேசித்தார்.  அவளோடு  நேரத்தைக்  கழிப்பதில்  அவருக்கு  மட்டற்ற  மகிழ்ச்சி.  பிற  மன்னர்களிடம்  அவளைக்  காட்டுவார்.  அவரின்  மனதில்  எப்பொழுதும் ஓர்  அச்சம்  இருந்தது.  என்றாவது  ஒருநாள்  அவள்  வேறொரு  அரசனோடு  போய்விடுவாள்  என்பதே  அவரின்  அச்சத்திற்கான  காரணம்.

இரண்டாம் மனைவி மீது மன்னருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவள் அன்புடையவள். தம்மோடு பொறுமையுடனும் பரிவுடனும் நடந்துகொண்டாள். தம்முடைய பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண்பதில் இந்த இரண்டாம் மனைவி வல்லவர்.

முதல் மனைவி தம்மோடு என்றும் விசுவாசமாக இருந்தது மட்டுமல்ல, தமது பொருள்வளத்தையும் நாட்டையும் நன்றாகப் பாதுகாத்தாள்.  அப்படிப்பட்ட முதல் மனைவியை மன்னன் விரும்பவே  இல்லை. முதல் மனைவி மன்னனை அளவற்று நேசித்தப் போதிலும் அதை அவன் கண்டு கொள்ளவே  இல்லை.

ஒருமுறை மன்னன் நோய்வாய்ப்பட்ட போது, தமது மரணம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான். தம்முடைய ஒய்யாரமான வாழ்க்கையை நினைத்துப்பார்த்தான். தாம் இறந்தால் தம்மோடு யார் கூடவே வருவார் என்று எண்ணலானான் மன்னன்.

தமது நான்காவது மனைவியிடம் : “நான் உன்னைத்தான் அதிகமாக  நேசித்தேன். உனக்காக விலை உயர்ந்தப் பொருட்களை வாங்கித்  தந்தேன். உன்னை அக்கறையோடு கவனித்துக் கொண்டேன். இப்பொழுது நான் இறக்கும் நேரம் வந்துவிட்டது. என்னோடு வா”, என்றான்.

அவளோ, “ஒருபோதும் முடியாது” என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விட்டாள். அவளுடைய பதில் மன்னன் இதயத்தைப் பிளந்தாற்போல் இருந்தது.

மூன்றாவது மனைவியைக் கேட்டான் மன்னன். “உன்னை மிகவும் அன்போடு வாழ்நாள் முழுவதும் நேசித்தேன். சாகும் என்னோடு வா?”, என்றான். இதைக் கேட்டதும் மூன்றாம் மனைவி, “முடியாது. வாழ்க்கை மிகவும் அற்புதமானது. நீ இறந்ததும் நான் மறுமணம் செய்துகொள்வேன்!”, என்றாள். வேதனை மிகுந்த இந்தச் சொற்களைக் கேட்டதும் மன்னன் அதிர்ந்து போனான்.

இரண்டாவது மனைவியை அழைத்து, “எனக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் நீ தயங்காமல் உதவினாய். நான் இறந்தால் என்னோடு வருவாயா?”, என்று கேட்டான். அவள், “இம்முறை உதவ இயலாது. மன்னித்து விடுங்கள். உங்களை நல்லவிதமாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வேன்”, என்றாள். இவளின் பதில் மன்னனுக்கு இடி தாக்கியது போலிருந்தது. துக்கம் அவனைத் தாக்கியது. அப்பொழுது ஒரு குரல், “நான் உங்களோடு வருவேன். நீங்கள் எங்குச் செல்கிறீர்களோ அங்கு நானும் வருவேன்”, என்றது.  நிமிர்ந்து பார்த்த மன்னன்  அவ்வாறு  சொன்னது  தன் முதல் மனைவி  என்பதை  உணர்ந்தான். அவள் மெலிந்து காணப்பட்டாள். நெடுங்காலம் புறக்கணிக்கப்பட்டவளைக் காண பரிதாபமாக இருந்தது. “எனக்கு வாய்ப்பு இருந்த போது உன்னை நன்றாகக் கவனித்திருக்க வேண்டும்”, என்றான் மன்னன்.

இந்தத்  துணுக்கு  திபேத்தியத்  தத்துவக்  கதைகளில்  ஒன்று. இதில் மன்னனும்  நான்கு மனைவிகளும்   என்கின்றத்  துணுக்கின் உண்மையான சாராம்சம் என்ன? உண்மையில் நாம் அனைவரும் நான்கு மனைவிகளைப் பெற்றிருக்கிறோம்  என்று  விளக்குகிறது.

நான்காவது மனைவி நம்முடைய உடல். நாம் எவ்வளவு சிரமப்பட்டு நேரத்தையும் பணத்தையும் செலவழித்து சுகாதாரமாகவும் அழகாகவும் வாழ நினைத்தாலும் அது நம் மரணத்தின் போது போய்விடும்.

நமது மூன்றாம் மனைவி நம் உடைமைகள், அந்தஸ்து, சொத்துக்களை குறிக்கின்றன. நம் மரணத்திற்குப் பிறகு அவை பிறரிடம் போய் சேர்ந்துவிடும்.

நம்முடைய இரண்டாம் மனைவி நம் குடும்பத்தையும் நண்பர்களையும் குறிக்கிறது. அவர்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், இடுகாடுவரைதான் அவர்கள் வருவார்கள்.

முதல் மனைவிதான் நமது ஆத்மா. பொருள், அதிகாரம், இன்பம் போன்றன தேடி அலைகிறோம் நமது அகங்காரத்தை நிரப்ப. ஆயினும், நமது ஆத்மா மட்டும்தான் நாம் போகுமிடமெல்லாம் நம்மோடு தொடர்ந்து வருகிறது.  அதை  நாம்  எப்பொழுதும்  பொருட்படுத்துவது  இல்லை எனவே, ஆத்மாவைப் பண்படுத்துங்கள், அதை பலப்படுத்துங்கள். அதை  வாழ்த்துங்கள்.  அதை நெஞ்சார மதியுங்கள்.  நல்வாழ்வில் பயனிக்க நல்ல மனம் உதவும்.

இன்று வையகம் விஞ்ஞானத்தின் வழி பல நன்மைகளைக் கண்டுபிடித்து மனித வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. மனிதன் சுகபோகங்களை  அனுபவிக்கும்  பொருட்டு பல தீய வழிகளில் பொருள் ஈட்ட முயற்சிக்கும் போது ஊழல், மோசடி, கொள்ளை போன்ற நடவடிக்கைகள் மலிந்து காணப்படுகின்றன.

அனுபவம்  கற்பிக்கும்  பாடம்  என்ன?  மோசடித்தனத்தால்  எவ்வளவு  சொத்துக்களைச்   சேர்த்தாலும்  சட்டம்  தன்  கடமையைச்  செய்ய  முயற்சிக்கும்போது  அந்தச்  சொத்துக்கள்  யாவும்  இழக்க  நேரிடும்.  ஆனால்,  நம்மோடு  இருக்கும் ஆத்மா மட்டும்  செய்த  குற்றங்களுக்கு  மன்னிப்பு  கோரும்படி  வலியுறுத்திக்கொண்டே  இருக்கும்.