தனிக்கட்சி ஆரம்பிப்பாரா வடக்கு முதல்வர்? பதில் இதுதான்!!

தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவரிடம் தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன் இன்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பானது சுமார் 1 மணி நேரம் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

எனது அரசியல் எதிர்காலத்தினைப் பற்றியும், புதிய கட்சி உருவாக்கப் போகின்றீர்கள் என பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன எனவும் டேவிட் மைக்கன் என்னிடம் வினவினார்.

அதற்கு நான், எனது கட்சி என்னை நியமிக்காவிடின், வீட்டிற்குச் செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணையலாம், இல்லாவிடின், ஒரு கட்சியை ஆரம்பிக்க முடியும் என கூறியிருந்தேன்.

ஆனால், ஊடகங்கள் நான் கூறிய இரு விடயங்களையும் விட்டு, மூன்றாவதாக கூறிய விடயத்தை மட்டும் பெரிதாக கூறிவிட்டன. தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவருக்கு தெரிவித்துள்ளேன்.

அத்துடன் அவர் காணாமல்போனோர்களின் அலுவலகம் தொடர்பாகவும், வடமாகாணத்தில் சட்டமும் ஒழுங்கும் மீறப்படுகின்றதாக தெரிவிக்கப்படுவதாகவும் என்னிடம் வினவினார்.

புத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின்றன. ஆனால், பொலிஸார் தமது புள்ளி விபரத்தின் பிரகாரம் அவ்வாறு சட்ட ஒழுங்குகளை சீர் குலைக்கும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறவில்லை என கூறுகின்றார்கள்.

இருந்தும், ஒரு சில சம்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றினை மறுக்க முடியாது என்பதை அவரும் ஏற்றுக்கொண்டார். இதேபோன்று தான் தென்பகுதியிலும் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

-http://eelamnews.co.uk

TAGS: