அமைதிப் பேரணி மசோதாவும் கழுதை கட்டெறும்பானதும்

ஆர்த்தி: கோமாளி, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்றால் என்ன?

கோமாளி: கழுதை எறும்பாக மாறினால் எளிதாக நசுக்கிவிடலாம், கழுதையாகவே இருந்தால் எட்டி உதைக்கும் என்ற நினைப்பில் நமது பிரதமர் நஜிப் தாக்கல் செய்துள்ள அமைதிப் பேரணி மசோதாதான் நினைவுக்கு வருகிறது ஆர்த்தி.

ஆர்த்தி, மனிதகுலம் அடிமைத்தனத்திலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுதலைப் பெற்று, ஒவ்வொரு மனிதனும் சுயநிர்ணய உரிமைகளோடு உலகத்தை உலாவ, ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை அர்ப்பணித்து மனிதக்குல விடுதலையை நமக்கு கொடுத்துள்ளனர்.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு மலேசியர்களான நமக்கு கிடைத்த விடுதலை மக்களாட்சியாகும். நாட்டு மக்கள் தேர்வு செய்பவர்களே, நாட்டின் மேம்பாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பயன் தரும் வகையிலும் நாட்டின் நிர்வாகத்தை நடத்த வேண்டும்.

மக்களால் தேர்வு செய்யப்படுபவர்களே, நாட்டின் நிர்வாகத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து. அதைக்கொண்டே தங்களை தேர்வு செய்யும் நாட்டு மக்களின் வழிமுறைகளை கட்டுப்படுத்தி, தங்களின் ஆதிக்கத்தை வலிமையாக்கி கொள்கிறார்கள். இதனால், நாட்டு மக்கள் தேர்வு செய்யும் தலைவர்களுக்கு, அவர்கள் தேர்வு செய்யும் நாட்டு மக்களே அடிமையாக வாழ்வார்கள்.

இது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா, ஆர்த்தி. நமது நாட்டிலும் இந்நிலைமைதான்.

ஆனால் மக்களாட்சியை அமைக்கும் மாபெரும் பொறுப்பு மக்களிடமே உள்ளது. மலேசியாவின் இந்த மக்களாட்சி அமைக்கும் வழிமுறையைதான் அரசமைப்பு சட்டம் என்கிறோம். இந்த அரசமைப்பு (Constitution) மக்களுடையது. இதை தற்காப்பதும் பாதுகாப்பதும் மக்களுடைய தலையாய கடமை, முதன்மையான பொறுப்பு.

மக்களாட்சி சர்வதிகார ஆட்சியாக மாறும்போது மக்களால் என்ன செய்ய இயலும் என்பதையும் இந்த அரசமைப்பு விவரித்துள்ளது. அவைகளில் ஒன்றுதான் ஆயுதம்ற்ற அமைதிப் பேரணியாகும். மக்களுக்கு அப்படி கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை மாற்றம் செய்வதன் வழி ஓர் அரசாங்கம், மக்களின் உரிமைகளை பறிக்க முடியும்.

நமது நாடளுமன்றம், விடுதலையடைந்த 1957-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை நமது அரசமைப்பு சட்டத்தில் 670-க்கும் குறையாத மாற்றங்களை செய்துள்ளது. அதோடு நாடாளுமன்றமும் மக்களின் அடிப்படை மக்களாட்சியை நடைமுறைக்கு முரணான சட்டங்களையும் இயற்றிவுள்ளது. இவை அனைத்தும் யாருக்கு பயன் அளிக்கும், எதற்காக செய்யப்பட்டது என்பதை கோமாளி சொல்லத் தேவையில்லை.

இந்த மாதம் 22ஆம் தேதி அமைதிப் பேரணி மசோதா ஒன்றை பிரதமர் இலாகா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், அரசமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அமைதிப் பேரணி சார்புடைய உரிமைகள் முழுமையாக பறிக்கப்படும் அபாயம் உள்ளது. அரசாங்கம் எதற்காக இதை செய்கிறார்கள் என்பதும் கழுதைகளாக இல்லாத மக்களுக்கு புரியும்.

கடந்த 54 ஆண்டுகளாக கழுதைகள் அளவுக்கு மக்களை வசப்படுத்தி அவர்களின் மக்களாட்சி உரிமைகளை அபகரித்து வந்துள்ளது நடைறை அரசாங்கம். இந்த மசோதாவை முன்வைப்பதன்வழி இன்னமும் மக்களை அப்படியே கருதுகிறது.

மக்களை கழுதைகளாக கருதுவதால், மக்களால் ஒன்று மட்டுமே செய்ய இயலும். ஆர்த்தி, அதை நீயே சொல்!