வேலைச் சட்டம் 1955 திருத்தம்: தொழிற்சங்கங்களைக் கருவறுக்கும் திட்டம்

ஜீவி காத்தையா,

மலேசிய அரசாங்கம் கடந்த அக்டோபர் மாதம் நடப்பிலிருக்கும் வேலைச் சட்டம் 1955 க்கு இருபதுக்கு மேற்பட்ட சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. அவை எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மேலவை அத்திருத்தங்களை டிசம்பர் 22 இல் ஏற்றுக்கொண்டது.

இச்சட்டத் திருத்தத்தினால் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தின் அரணாக விளங்கம் தொழிற்சங்கம் குத்தகைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் வழி தோன்ற விடாமல் தடுக்கப்படும். ஆகவே, குத்தகைத் தொழிலாளர் முறை தடை செய்யப்பட வேண்டும்.

அத்திருத்தங்களுக்கான அறிவிக்கப்பட்ட அடிப்படை நோக்கம் நான்காகும். முதலாவது, வீட்டுப் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் இடுவதற்கு வகை செய்வதாகும். இரண்டாவது, குத்தகையாளர் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் பதிவு செய்வதற்கு வகை செய்வதாகும். மூன்றாவது, வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது பற்றிய அறிவித்தல் மற்றும் அத்தொழிலாளர்கள் பற்றிய விபரங்கள் தாக்கல் செய்யப்படுவதைக் கோருவதாகும். நான்காவது, பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்களைக் கையாள்வது மற்றும் அப்புகார்கள் மீதான விசாரணை ஆகியவற்றுக்கான வழிமுறையை வரையறுத்தலாகும்.

இவற்றோடு சட்டத்தில் காணப்படும் இலக்கணப் பிழைகளுக்கான திருத்தங்கள், சொற்களுக்கான விளக்கங்கள், எடுத்துக் காட்டு: இச்சட்டத்தில் அமைச்சர் என்றால் யார்?, ஆகியவற்றோடு “contractor for labour”என்ற சொற்றொடருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதோடு “எஜமானர்” (“employer”)  என்ற சொல்லுக்கு நடப்பில் இருக்கும் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தோடு தொழிலாளர்களை விநியோகம் செய்பவர், “குத்தகையாளர்” (“contractor”) என்ற சொல் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள இச்சட்டத் திருத்தங்களில் 6 புதிய பிரிவுகள் (sections) மற்றும் இரண்டு பகுதிகள் (parts) சேர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைத்தும் நடப்பிலுள்ள சட்டத்தை அழகுபடுத்துவதற்காகச் செய்யப்பட்டதாகும். அந்த அழகுப்படுத்தும் திருத்தங்களில் தொழிலாளர்களின் உரிமை காக்கும் அரண்களான தொழிற்சங்களைக் கருவறுக்கும் அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத உள்நோக்கம் அடங்கியுள்ளது.

வேலைச் சட்டம் 1955-க்கு செய்யப்பட்டுள்ள இத்திருத்தங்களால் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா?

இச்சட்டத் திருத்தங்கள் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் என்று மனிதவள அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, இரு பெரிய பாதுகாப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. முதலாவது, தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தும் குத்தகையாளர்களைப் பதிவு செய்யும் அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுள்ளது. இரண்டாவது, குத்தகையாளர்கள் பட்டியல் அரசாங்கத்திடம் இருப்பதால், அக்குத்தகையாளர்கள் அவர்களுடையத் தொழிலாளர்களுக்கு இபிஎப் மற்றும் சொக்சோ சந்தாக்களைச் செலுத்தாமல் தப்பிக்க முடியாது. அச்சந்தாக்களைச் செலுத்தாத “முதலாளிகள்” மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

இச்சட்டத் திருத்தத்திற்கு முன்னர், “இவை யாவும் சாத்தியமில்லை” என்று அமைச்சர் மேலும் விவரித்தார்.

இச்சட்டத் திருத்தங்களை குறிப்பாக யாருக்காக அரசாங்கம் செய்தது?  தேய்ந்து, சீரழிந்து நிற்கும் தோட்டத் தொழிலாளர்களைக் கவனத்தில் கொண்டு, தோட்டத் தொழிலாளர்களின் “அரணாக விளங்கும் தேசிய தோட்டத் தொழிற்சங்கத்தின் நீண்ட கால கோரிக்கையைக் கருத்தில் கொண்டு” இச்சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொழிற்சங்கத்தின் மீதான அவரது ஈடுபாட்டை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், “தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்டவும்,. குத்தகை தொழில் முறையை மறுசீரமைக்கவும், நெறிபடுத்தவும் பல சவால்களுக்கு மத்தியில் வேலைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்”, அமைச்சர் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறை, அவர்களுக்காக அரசாங்கம் நடத்தி வரும் போராட்டம் ஆகியவற்றை புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கிறார்களே என்று அவர் வருத்தம் தெரிவித்தார். “நாட்டிலுள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களின் நலனுக்காக பல்லாண்டுகளாகப் போராடி வரும் அரசாங்கத்தின் முயற்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும்” நடவடிக்கைகள் குறித்து அவர் வருத்தப்பட்டுக் கொண்டார்.

இருப்பதை இல்லை என்கிறார் அமைச்சர்

குத்தகைத் தொழிலாளர்களுக்கு இபிஎப் மற்றும் சொக்சோ சந்தாக்களை செலுத்தாமல் இருக்கும் “முதலாளிகள்” மீது நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியம் இச்சட்டத் திருத்தங்களுக்கு முன்னர் கிடையாது என்று அமைச்சர் கூறுவது உண்மையல்ல.

இபிஎப் மற்றும் சோக்சோ சந்தாக்கள் மட்டுமல்ல. சம்பளமே கொடுக்காத முதலாளிகளையும், குத்தகை அடிப்படையில் வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளையும் இரு கோணங்களிலிருந்து தாக்குகிறது தற்போது நடப்பில் இருக்கும் வேலைச் சட்டம் 1955, பிரிவு 2(A) மற்றும் 33(1).

Section 2A. Minister may prohibit employment other than under contract of service. இப்பிரிவின் கீழ் அமைச்சர் அரசாங்கத்துறையோ தனியார்துறையோ பணி ஒப்பந்தம் (contract of service) தவிர வேறு எந்த அடிப்படையிலும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார். இப்பிரிவின் கீழ் விடுக்கப்பட்ட உத்தரவை மீறுபவர் குற்றம் புரிந்தவராவார்.

Section 33(1). Liability of principals and contractors for wages. இப்பிரிவின் கீழ் முதலாளியுடன் சேர்ந்து குத்தகையாளர் மற்றும் துணைக் குத்தகையாளர் ஆகியோர் முதலாளிகளாகக் கருதப்படுவதோடு அவர்களின் குத்தகைத் தொழிலாளர்களுக்குரிய சம்பளத்தை வழங்கும் கூட்டான பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

பிரிவு 2A ஐயைக் கையில் வைத்துக்கொண்டு நாட்டின் ஒட்டு மொத்த தொழிலாளர்களுக்காக ஏன் அரசாங்கம் பல்லாண்டு காலமாகப் போராட வேண்டும்? அமைச்சர் பேனாவை எடுத்து கையெழித்திட்டிருந்தால், இந்நாட்டில் குத்தகைத் தொழிலாளர் வாசமே இல்லாமல் செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? ஏன் இந்த கரிசணை நாடகம், அமைச்சரே?

பிரிவு 33(1) இருக்கையில், குத்தகைத் தொழிலாளர்களுக்கு உரிய இபிஎப் மற்றும் சொக்சே சந்தாக்களை முதலாளிகள் செலுத்துவதை உறுதி செய்வதற்காக சட்டம் திருத்தப்பட்டது என்று கூறும் அமைச்சரைப் பற்றி என்ன கூறுவது?

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அம்சம்: பிரிவு 2(A) திருத்தத்திற்கு உட்படுத்தப்படவில்லை. அது அப்படியே இருக்கிறது. அப்பிரிவின் கீழ் முதலாளிகள் குத்தகை அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்று இன்றே உத்தரவிடலாம். அமைச்சர் தயாரா? அம்னோ அமைச்சரை வீட்டுக்கு அனுப்பி விடும்!

 

தொழிற்சங்கங்களை அழிப்பது சட்டத் திருத்தத்தின் உள்நோக்கம்

ஒரு குத்தகையாளர் ஒரு குறிப்பிட்ட வேலையை இன்னொருவருக்காக (முதலாளிக்காக) செய்வதும் அவ்வேலையைச் செய்வதற்கு அக்குத்தகையாளர் தொழிலாளர்களைக் குத்தகை அடிப்படையில் வேலைக்கமர்த்துவதும் இந்நாட்டில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவ்வாறே தொழிலாளர்களை குத்தகை அடிப்படையில் ஒரு முதாலாளியிடம் வேலைக்கு அனுப்பும் முறையும் இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிக்கும் குத்தகையாளரும், ஒரு முதலாளிக்கு வேலை செய்ய தொழிலாளர்களை விநியோகம் செய்யும் குத்தகையாளரும் வேலைச் சட்டம் 1955 இல் முதலாளியாகவே கருதப்படுகின்றனர். ஆனால், அது சுற்றிவளைத்து கூறப்படுகிறது.

ஆனால், மக்களவை ஏற்றுக்கொண்டுள்ள வேலைச் சட்டம் 1955 திருத்தங்களில் “தொழிலாளர்களுக்கான குத்தகையாளர்” (contractor for labour) என்றால் தொழிலாளர்களை தேவைப்படும் முதலாளிகளுக்கு விநியோகம் செய்பவர் என்று வர்ணிக்கிறது.

அவ்வாறே, முதலாளி (employer) என்று வர்ணிக்கப்படுபவர்களில் தேவைப்படுவோருக்கு தொழிலாளர்களை விநியோகிக்கும் குத்தகையாளரும் முதலாளி என்று சட்ட திருத்தத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தம் நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்கள் அவற்றுக்குத் தேவைப்படும் தொழிலாளர்களை அந்நிறுவனங்களே நேரடியாக வேலைக்கு அமர்த்தாமல் தொழிலாளர்களை குத்தகைக்கு விநியோகம் செய்யும் குத்தகையாளர் மூலம் பெறுவதற்கு வகை செய்கிறது. இதுதான் இச்சட்டத் திருத்தத்தின் மிக முக்கிய ஆனால் அறிவிக்கப்படாத நோக்கமாகும்.

தற்போது நடப்பில் இருக்கும் பிரிவு 2A குத்தகை அடிப்படையில் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதைத் தடை செய்யும் அதிகாரத்தை அமைச்சருக்கு அளித்துள்ளது. அப்பிரிவு இன்னும் சட்டமாக இருக்கையில், அதற்கு முரணாக வெளிப்படையாக தொழிலாளர்களை இதர தொழில் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யும் குத்தகை முதலாளிகளை அமைச்சர் உருவாக்கியுள்ளார். இதன் நோக்கம் என்ன?

தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொழில் நிறுவனத்தில் நேரடியான தொழிலாளர்களாக அமர்த்தப்படுவதைத் தவிர்ப்பதும், தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக  தொழிற்சங்கம் அமைப்பதைத் தடுப்பதும் இச்சட்டத் திருத்தங்களின் உண்மையான இறுதிக் குறிக்கோளாகும்.

வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதற்காக மலேசிய அரசாங்கம் 1980 களிலிருந்து வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்கள் கட்டுப்பாடின்றி நாட்டுக்குள் வர அனுமதித்தோடு குறிப்பிட்ட தொழில்களில் தொழிற்சங்கம் தோன்றுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரசாங்கத்தின் இக்கொள்கைகளால் ஏற்படப்போகும் கடும் விளைவுகள் குறித்து 1993 ஆம் ஆண்டிலேயே மலாயா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் முகமட் அரிப் அரசாங்கத்தையும் மலேசிய தொழிற்சங்க இயக்கத்தையும் எச்சரித்திருந்தார்.

எதனையும் பொருட்படுத்தாமல் இலட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்குள் நுழைவதை அரசாங்கம் அனுமதித்தது. 2007 ஆம் ஆண்டிலிருந்து, வேலைகள் குத்தகைக்கு விடும் முறை (outsourcing) வேறூன்ற தொடங்கி இன்று அம்முறை சட்டப்பூர்வமாக்கப்படும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

எடுத்துக்காட்டு: முதலை ரசாக் தொழிலாளர் விநியோகம் செண்ட். பெர்ஹாட் என்ற நிறுவனன் 10,000 தொழிலாளர்களை தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு விநியோகிப்பதற்காக வேலைக்கு வைத்துள்ளது (engaged). வங்கிகள் A,B,C, மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் D,E,F, பொறியியல் தொழில் நிறுவனங்கள் G,H,I, மின்சார உற்பத்தி நிறுவனங்கள் J,K,L, மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் M,N,O ஆகியவற்றுக்கு தொழிலாளர்களை முதலை ரசாக் விநியோகம் செய்துள்ளது.

முதலை ரசாக் தொழிலாளர் விநியோக நிறுவனம் வங்கிகள் A, B மற்றும் C க்கு விநியோகித்த தொழிலாளர்களின் முதலாளி யார்? அந்த வங்கிகளா அல்லது முதலை ரசாக்கா? இதே கேள்வி இதர நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் முதலாளிகள் யார் என்பது குறித்தும் எழுகிறது.

அடுத்து, முதலை ரசாக் நிறுவனம் A, B, மற்றும் C  வங்கிகளுக்கு    விநியோகம் செய்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சம்பளம் மற்றும் உரிமைகள் போன்ற பிரச்னைகளைக் கையாள வேண்டிய முதலாளி யார்? முதலை ரசாக் நிறுவனமா? அல்லது A, B மற்றும் C வங்கிகளா?

அடுத்த மிக முக்கியமான கேள்வி: முதலை ரசாக் தொழிலாளர் விநியோகம் செண்ட். பெர்ஹாட்டால் வேலைக்கு அமர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் A லிருந்து O வரையில் விநியோகிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளைத் தற்காத்துப் போராடுவதற்கு தொழிற்சங்கம் அமைக்க நடவடிக்கை எடுத்தால், அத்தொழிற்சங்கம் எந்த அடிப்படையில் அமையும்?

அத்தொழிற்சங்கம் “முதலை ரசாக் தொழிலாளர் விநியோகம் செண்ட். பெர்ஹாட் தொழிலாளர் சங்கம்” என்ற அடிப்படையைக் கொண்டிருக்குமா? அல்லது A,B,C வங்கி தொழிலாளர் சங்கம் என்றிருக்குமா? அல்லது அந்தந்த தொழில் நிறுவனத்தின் அடிப்படையில் அமையுமா?

இக்கேள்விகள் கற்பனையானதல்ல. முதலை ரசாக் நிறுவனம் வங்கித் தொழிலிலோ மோட்டார் வாகன உற்பத்தி தொழிலிலோ பொறியியல் தொழிலிலோ அல்லது இதரத் தொழில்களிலோ ஈடுபட்டிருக்கவில்லை.  அந்நிறுவனத்தின் தொழில் தொழிலாளர்கள் விநியோகம் மட்டுமே.  வங்கிகளுக்கும், இதர தொழில் நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்பட்ட தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட அந்தந்தத் தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களே தவிர அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் அல்ல. ஆகவே, அத்தொழிலாளர்கள் முதலை ரசாக் தொழிலாளர் தொழிற்சங்கம் அமைக்க முடியாது என்பது முதலை ரசாக் நிறுவனத்தின் நிலைப்பாடாகும்.

முதலை ராசாக் நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களைப் பெற்றுக்கொண்ட வங்கிகள் மற்றும் இதரத் தொழில் நிறுவனங்களைப் பொறுத்த வரையில் அத்தொழிலாளர்கள் அந்நிறுவனங்களின் தொழிலாளர்கள் அல்ல. அவர்கள் முதலை ரசாக் தொழிலாளர்கள் விநியோகம் செண்ட். பெர்ஹாட்டின் தொழிலாளர்கள். இச்சூழ்நிலையில் தொழிலாளர்களின் கதி என்னவாகும்?

 

குத்தகை தொழிலாளர் முறை தடை செய்யப்பட வேண்டும்

இச்சூழ்நிலை இன்று இந்நாட்டின் பல்வேறு தொழில்களில் பெரும் பிரச்னையாக உருவாகியுள்ளது. வங்கித் தொழிலைப் பொறுத்த வரையில், தேசிய வங்கி பணியாளர் சங்கம் (NUBE) இப்பிரச்னையைக் கடுமையானதாகக் கருதுகிறது. சமீபத்தில், ஒரு ஜப்பானிய நிறுவனம் அந்நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அதன் தொழிலாளர்கள் அல்ல என்று அறிவித்தது.

வேலைகள் குத்தகைக்கு விடும் முறை (outsourcing) வேறூன்றிய காலத்திலிருந்து நூற்றுக்கணக்கான புகார்களை வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து மலேசிய தொழிற்சங்க காங்கரஸ் பெற்றுள்ளதென்று அதன் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி. இராஜசேகரன் நவம்பர் 2011 இல் கூறினார்.

மேலும், வேலைகள் குத்தகைக்கு விடும் முறை வெளிநாட்டு தொழிலாளர்களை மட்டும் பாதிப்பதாக கருதக் கூடாது. மலேசிய தொழிலாளர்களையும் அது பாதிக்கிறது. தொழிலாளர்களை நேரடியாக பணி ஒப்பந்தத்தின் (contract of service) கீழ் அமர்த்தும் முறையில் தொழில் நிறுவனங்கள் மாற்றத்தை அமலாக்கி வருகின்றன.

தொழிலாளர் இனத்தின் உயிர்நாடியான தொழிற்சங்க இயக்கத்தை வேறோடு அழிக்க முதலாளிகள் இனம் மிகக் கடுமையாகச் செயல்பட்டு வந்துள்ளது; இன்றும் செயல்பட்டு வருகிறது. இது உலகளவில் நடந்து வருகிறது. தொழிற்சங்க இயக்கத்தை அழிக்கும் முதலாளிகளின் திட்டத்திற்கு உறுதுணையாக இருப்பது அரசாங்கம். இதுவும் உலகளவினானத் தன்மையே.

தொழிற்சங்க எதிர்ப்பு பிரிட்டீஷ் அரசாங்க காலத்திலிருந்து மலேசியாவில் இன்றையப் பாரிசான் அரசாங்கம் வரையில் வெற்றிகரமாக அமலாக்கப்பட்டு வருகிறது.

மலிவான வெளிநாட்டு தொழிலாளர்களைப் பெறுவது, வேலைகளைக் குத்தகைக்கு விடுவது, அவற்றின் அடிப்படையில் வெளிநாட்டு மூலதானத்தைக் கவர்வது மலேசிய அரசாங்கத்தின் கொள்கையாகும். இவற்றின் மூலம் தொழிற்சங்கம் தோன்றுவதை கருவிலேயே அழிப்பது அரசாங்கத்தின் ஆழ்ந்த ஈடுபாடாகும்.

மலேசிய அரசாங்கத்தின் இக்கொள்கைகளை அமலாக்கம் செய்ய வேண்டிய கடப்பாடுடைய அரசாங்கத்துறைகளில் ஒன்றான மலேசிய குடிநுழைவுத்துறை அமலாக்க இயக்குனர் இசாக் முகமட் இக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஜூலை 20, 2008 ஆம் ஆண்டில், நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், “வேலைகள் குத்தகைக்கு விடப்படுவதைத் தடை செய்யக்கூடாது, ஏனென்றால் குத்தகைக்கு விடுவதுதான் வெளிநாட்டு தொழிலாளர்களை அரசாங்கம் சமாளிப்பதற்கான சிறந்த தீர்வாகும்”, என்று இசாக் முகமட் கூறினார்.

“நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்து பெரிதாகும் போது அவற்ருக்கு கூடுதல் ஆள்பலம் தேவைப்படும். வேலையை குத்தகைக்கு விடுவதால் அவை தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தப்பட்ட வழியில் பெற இயலும்”, என்றும் அவர் கூறினார்.

“வேலைகளை குத்தகைக்கு விடுவது நல்லது. ஏனென்றால் அது வெளிநாட்டு நேரடி மூலதனத்தை ஈர்க்கும். முதலீட்டாளர்கள் அவர்களுடைய நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதை விரும்பமாட்டார்கள்”, என்று இசாக் முதலாளிகளின் விருப்பத்தை வெளியிட்டார்.

“வேலைகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் தொழிற்சங்கங்கள் அமைப்பது சிரமமாகும், ஏனெனில் வேலைகளைக் குத்தகைக்கு எடுக்கும் நிறுவனம்தான் முதலாளியாவார், தொழிற்சாலை அல்ல”, (“Through outsourcing, it would be difficult for unions to be formed as the outsourcing company, and not the factory, would be employer.”) என்று தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் அமைப்பதைத் தடுப்பதற்கான அடிப்படைத் திட்டத்தை இசாக் வெளியிட்டார்.

தொழிற்சங்கம் அமைக்கப்படுவதைத் தடுப்பது மலேசிய அரசமைப்புச் சட்டப் பிரிவு 10 மற்றும் மலேசிய அரசாங்கம் அங்கீகரித்துள்ள அனைத்துலக தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) Fundamental Principles and Rights at Work பிரகடனம் ஆகியவற்றை மீறியச் செயலாகும். மலேசிய அரசாங்கம் இக்கோட்பாடுகள் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

முதலாளிகளின் முகவர்களாக செயல்படுவது அரசாங்கத்தின் தலையாயக் கடமை. அக்கடமைகளில் மிக மிக முக்கியமானது தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதிக்கூடாது என்பதாகும். அமைக்கப்பட்டு விட்டால், அது பல்லில்லாத காகிதப் புலியாக இருக்க வேண்டும். அதன் தலைவர்கள் அரசாங்கத்திற்குத் தலையாட்டும் பொம்மைகளாக இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் தொழிற்சங்கம் அமைக்கப்படுவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதற்கான சிறந்த ஒரே வழி முதலாளிகள் தொழிலாளர்களை நேரடியாக பணி ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தாமல் தொழிலாளர்களை விநியோகம் செய்யும் குத்தகையாளர் நிறுவனங்கள் மூலம் பெறுவதே. இத்திட்டத்திற்கு வழிவகுக்கும் சட்ட திருத்தங்களை தற்போதைய மனிதவள அமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி விட்டார்.

225 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டீஷ் அறிஞர் ஆடம் ஸ்மித் கூறினார், “Whenever the legislature attempts to regulate the differences between masters and their servants, its counsellors are always the masters.”

இன்று, நமது நாட்டில் தொழிலாளர்கள் தங்களுடைய நலன்களுக்குப் பாதுகாப்பு கோரும் வேளையில், முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மனிதவள அமைச்சர் தாக்கல் செய்த தொழிற்சங்க இயக்கத்தை அழிக்க வகை செய்யும் சட்டத் திருத்தங்களை மலேசிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இச்சட்டத் திருத்தங்களுக்கு தொழிற்சங்கங்களும் இதர சமூக ஆர்வலர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அத்திருத்தங்கள் மீட்டுகொள்ளப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும். இக்கோரிக்கை தவறான அடிப்படையைக் கொண்டிருக்கிறது. இச்சட்டத் திருத்தங்களை அவர்களின் விருப்பத்திற்கேற்ப அரசாங்கம் மீட்டுக்கொண்டாலும், வேலைகள் குத்தகைக்கு விடப்படுவது, குத்தகைக்கு தொழிலாளர் விநியோகம் செய்யும் குத்தகையாளர்கள் மூலம் குத்தகைத் தொழிலாளர்களிடம் வேலை வாங்கும் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய பொறுப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்வது மற்றும் தொழிற்சங்கள் தோன்றாதிருப்பதை உறுதி செய்வது போன்றவற்றை தற்போது அமலில் இருக்கும் வேலைச் சட்டம் 1955 இன் கீழ் சாதிக்க முடியும். அது நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர்.

வேலைகள் குத்தகைக்கு விடப்படுவதன் மூலம் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கும், தொழிற்சங்கள் உருவாக்கப்படுவதை தடுப்பதற்கான அரசாங்க-முதலாளிகளின் கூட்டு திட்டத்தை  தகர்ப்பதற்கும்,  இந்நாட்டு தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இருக்கும் ஒரே வழி குத்தகை ஒப்பந்த தொழிலாளர் முறையைத் தடை செய்வதுதான்.

 

பத்து மில்லியன் தொழிலாளர்களின் வாக்குகள்

அத்தடையை இன்றைய பாரிசான் நிச்சயமாக கொண்டு வராது என்று உறுதியாகக் கூறலாம். தங்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதை உறுதி செய்துகொள்வது தொழிலாளர்களின் பொறுப்பாகும். அப்பொறுப்பை அரசாங்கத்திடமிருந்தோ ஆண்டவனிடமிருந்தோ எதிர்பார்க்கும் தொழிலாளர்கள் நரக வாழ்க்கைதான் வாழ வேண்டியிருக்கும்.

தொழிலாளர்களின் பரம விரோதிகளான முதலாளிகளையும் அவர்களின் பாரம்பரிய பாதுகாவலர்களான அரசாங்கத் தலைவர்களையும் அடக்கி வைப்பதற்கான வலுமை தொழிலாளர்களின் கையில் இருக்கிறது. பத்து மில்லியன் தொழிலாளர்களின் வாக்குகள் அவர்களுடைய எதிரிகளைக் கைகட்டி நிற்க வைக்கும்.

ஆனால், அந்த பத்து மில்லியன் வாக்குகளும் அவர்களுக்கு எதிராக ஒருமுகப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு முதலாளிகளும் அரசாங்கமும் தொழிலாளர்களின் தலைவர்களை, தொழிற்சங்க தலைவர்களை தங்கள் பக்கம் வைத்துள்ளனர் என்ற பகிரங்கமான உண்மையை இந்நாட்டு தொழிலாளர்கள் முதலில் உணர வேண்டும்.

இருப்பினும், தொழிற்சங்க தலைவர்களுக்கு பாடம் புகட்டுவதற்கு முன்பு, தொழிலாளர்களை ஆடுமாடுகளைப்போல் விநியோகம் செய்வதை அனுமதிக்கும் இன்றைய அரசாங்கத் தலைவர்களை, அவர்கள் யாராக இருந்தாலும் சரி, தங்களுடைய வாக்குகளின் மூலம் வதம் செய்ய மலேசிய தொழிலாளர் இனம் களம் இறங்க வேண்டும்.

TAGS: