மலேசியா அவர்கள் நாடு, நாம் “பாலே இந்தியா”

கோவிந்தசாமி: ம.இ.கா-விலிருந்து நீக்கப்பட்டு, பக்காத்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, மீண்டும் ம.இ.கா-வில் இணைந்து பாக்காத்தான் அரசாங்கம் வாக்கு கொடுத்ததை செய்யவில்லை என்று கிள்ளான் வட்டாரத்தில் ஒருவர் கலையோடு சாமி ஆடுகிறாரே?
 
கோமாளி: சாமி ஆடுபவர்கள், அருள் போகும்போது மலையேறிவிடுவார்கள். மீண்டும் அருள் வந்ததும் ஆடுவார்கள். அவரின் ஆட்டத்தில் உண்மையும் உள்ளது.
 
தேசிய முன்னணியின் 54 ஆண்டுகால ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்தியர்கள் சார்புடைய வகையில் பல புதிய நகர்வுகள் உண்டாகியுள்ளன. இதற்கு காரணம் அரசியல் வழி ஆட்சி நடத்த இந்தியர்களின் வாக்குகள் தேவை என்பது உணரப்பட்டதால் வந்ததாகும். இதற்கும் ம.இ.கா-வுக்கும் சம்பந்தம் கிடையாது. அம்னோ தலைமையில் மீண்டும் ஆள வேண்டும் என்ற தே.மு.வின் வேட்கை!

வரவிருக்கும் தேர்தலில் இந்தியர்கள் தங்களது வாக்குகளை தேசிய முன்னணிக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த பக்கத்தான் அரசை குறை கூற வேண்டும். அதன் மீது குற்றங்களை சாட்ட வேண்டும். அதோடு மக்களை ஈர்க்க அதிரடி நடடிவக்கைகளில் ஈடுபட வேண்டும். பணம், உணவு, உடனடி உதவிகள் போன்ற பரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவற்றை செய்தால் இந்தியர்கள் தங்களது வாக்குகளை மீண்டும் தேசிய முன்னணிக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறார்கள் இவர்கள்.

ஆனால் கோவிந்தசாமி, இந்தியர்களின் இந்த புதிய அரசியல் விழிப்புணர்ச்சிக்குத் தீர்வாக தேசிய முன்னணியோ, பக்காத்தான் ரக்யாட் என்ற மக்கள் கூட்டணியோ தற்போதைக்கு அதிகமாக கொள்கை அளவில் எதையும் செய்ய இயலாது.

இந்தியர்-சீனர் சார்புடைய அரசியல்-சமூக-பண்பாட்டு உரிமைகளை தேசிய வகைக் கொள்கைகளோடு ஒருங்கிணைக்க புரிந்துணர்வு கொண்ட வலுவான மத்திய அரசு வேண்டும். அவ்வளவு வலிமை தேசிய முன்னணியிடம் 54 ஆண்டுகள் இருந்தன. ஆனால் அதைக் கொண்டு நம்மை முற்றாக அடக்கி ஒடிக்கி மலாய்காரர்களின் ஆதிக்கத்திற்குள் அனைத்தையும் கொண்டு வந்தனர். மலேசியா, அவர்கள் நாடு என்கிறார்கள், நம்மை “பாலே இந்தியா” என்கிறார்கள்.

நடைமுறையில் இனவாதத்தை முதுகெலும்பாக கொண்டுள்ள அரசாங்க அமைப்பு முறைகளை உடனடியாக அகற்றவும் இயலாது. எனவே, தற்போது நாம் எடுக்கும் முடிவுகள் மிக மிக முக்கியமானவை. அந்த முடிவுகள்தான் நாம் இந்த நாட்டில் எந்த அளவிற்கு முக்கியமானவர்கள் என்பதை நிர்ணயிக்கும். அதற்கான கால கட்டம் இதுதான். இதை விட்டால், கோவிந்தாதான்!

மாற்றம் தேவை என்பதை மறுப்பவர்கள், ஒன்று அறியாமையில் உள்ளவர் அல்லது சுயநலனுக்காக, போரடிப்பெற்ற மூச்சு விடும் அளவுக்கான உரிமையை, அடமானம் செய்யும் வியாபாரி. தேசிய முன்னணிக்கு சாமி ஆடுபவர்கள், நமக்கான் உரிமைகளை விவாதிக்க வேண்டும். உதாரணமாக, பாக்காத்தான் அரசாங்கம் இதை செய்ய வில்லை- அதைச்செய்யவிலை என்று குறைபடுவது நல்லது; அதே மூச்சில் தேசிய முன்னணி ஜோகூர், நெகிரி, பகாங், பேரக், கோலாலம்பூர், புத்ரஜெயா ஆகிய இடங்களிலும், மத்திய அரசின் அனைத்து துறைகளிளும் நாம் இன்னும் ஏன் இளிச்ச வாயர்களாக உள்ளோம் என வாயைத் திறந்து பேச வேண்டும்.

உதாரணமாக ஏன் மாராவில் நமக்கு இடமில்லை? அரசாங்க வேலைகளில் ஏன் ஓரவஞ்சனை? எம்.ஆர்.டி ரிம 8,000 கோடி குத்தகையில்   நமக்கு ஒரு ரிம 80 கோடி? 40,000 தமிழர்களுக்கு குடியுரிமை!  சம உரிமையில் வறுமையில் உள்ளவர்களுக்கு மட்டும் புதிய பொருளாதார சார்புடைய கொள்கை, தமிழ்ப் பள்ளிகள், கோயில்கள் போன்றவைகளுக்கு அரசு மாணியம் முழுமையாக வேண்டும், வங்கி, காப்புரிதி, கட்டுமானம், அல்லது டோல் சாவடி சாலைகள் ஏன் இந்தியர்களுக்கு இல்லை,   இப்படி விலாவாரியாக குரல் எழுப்ப வேண்டும்.

அட அதை விடுங்க, புத்ரா ஜெயா கட்டும் போது துரத்தப்பட்ட 8 தோட்டங்களின் மக்கள் இன்னமும் தாமான் பெர்மாத்தா மலம் ஒழுகும் மலிவு அடுக்கு மாடி வீடுகளில் அவதிப்படுகின்றனர், அதற்கு பாதுகாப்பானது-சுகாதாரமானது என்ற சான்றிதல் (Certificate of Fitness) கூட இல்லையாம். இதையாவது போய் பாருங்கள். அது தூரமாக இருந்தால் இந்த கிள்ளான் சாமிகள் – கிள்ளான் என்பது பல பகுதிகளில் கடல் மட்டத்திற்கு தாழ்வான நிலையில் உள்ளது, துறைமுக கேந்திர முக்கியத்துவம் கொண்ட இதன்வழி கோடிக்கணக்கில் பணம் மத்திய அரசுக்கு வரும் போது, ஏன் வெள்ளப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்று 1 மலேசியா பிரதரை கேட்கலாமே!