மெட்ரிக்குலேசனில் 1,000 இடங்களும்; கொக்கு பிடிக்க வெண்ணெய்யும்!


மெட்ரிக்குலேசனில் 1,000 இடங்களும்; கொக்கு பிடிக்க வெண்ணெய்யும்!

சுப்பையா: பிரதமர் அறிவித்த மெட்ரிக்குலேசனில் 1,000 இடங்கள் பற்றி கோமாளியின் கருத்து?

கோமாளி: சுப்பையா, கொக்கு பிடிக்க வெண்ணெய் வைத்த கதை மாதிரி இது. முதலில் ஒரு கொக்கை தேடி அதன் தலையில் வெண்ணெய்யை வைத்துவிட வேண்டும். கொக்கு ஒரே இடத்தில் அப்படியே நிற்கும். வெயில் சூடேற வெண்ணெய் உருகி கொக்கின் கண்களை மூடிவிடும். அப்போது அதனால் பார்க்க இயலாது – அந்த தருணத்தில் கொக்கை பிடித்து விடலாம். வாயில் விரல் வைத்து சப்பும் குழந்தைகள் கூட இக்கதையை கேற்கும் போது “கொக்கு தலையில் எப்படி வெண்ணெய் வைப்பது?” எனக் கேட்பார்கள்.

அறிவாற்றல் உள்ள சமூகமாக மலேசியா உருவாக வேண்டும். அதுதான் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக அடித்தளம் என்ற வகையில் மலேசியாவின் தொழில் திறன் மற்றும் உயர்நிலைக் கல்விக் கொள்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக  பலத்த மாற்றத்தை கண்டுள்ளது. இதனால் அடிப்படையில் திறனற்ற வேலைகளுக்கு அயல் நாட்டவர்களை பயன்படுத்தும் கொள்கையும் ஆழமானது.

மலேசியக் கொள்கையின்படி மலேசியர்களாக உள்ள இந்தியர்களும் திறன் மற்றும் உயர்கல்வி பெற்று தங்களின் நிலையை உயர்த்த வேண்டும். அதற்கான தளத்தை அரசாங்கம்தான் உருவாக்க வேண்டும்.

ஆனால், அப்படிப்பட்ட தளத்தை அரசாங்கம் மலாய்காரர்களுக்கு மட்டுமே உருவாக்கி உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கணி. அதேவேளை இந்தியர்களுக்கான அரசாங்க உயர்கல்வி இடங்கள் கானல் நீராகவே காட்சியளிக்கின்றது சுப்பையா!

இதன் தாக்கம் திறன்கள் அற்ற வேலைகளுக்கு குறைந்த சம்பளத்தில் பணிபுரிய கொண்டுவரப்படும் அயல்நாட்டு தொழிலாளர்களோடு நாமும் போட்டிப்போட்டு குறைந்த சம்பளத்திலேயே வேலை செய்யும் நிலை உருவாக்கப்படுகிறது. சம்பள நிலை விலையேற்றத்தை தாக்குபிடிக்க இயலாத நிலையில் அடிச்சிபிடிச்சி ஓவர் டைம், இரண்டு வேலைகள் அல்லது கடன் வாங்கி பிழைப்பு நடத்தும் நாம்.

உண்மை இப்படி இருக்க அதிகாலை வானொலியில் ஆனந்தா-உதயாவோடு பிரதமர் தமக்கு ‘கொலைவெறி’ பிடித்தது என்று கூறியபோது, யாரால்தான் மறுக்க இயலும்?

இந்தியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வாக உறுதியான அரசாங்க கொள்கை வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்களிடையே உயர்கல்வி மற்றும் திறன் கற்றவர்களின் எண்ணிக்கை மலாய்காரர்கள் சீனர்கள் அளவிற்கு அதிகரிக்க உருப்படியான செயலாக்க வழிமுறைகள் தேவை.

அந்நிலையை அடைய ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 இடங்கள் இந்தியர்களுக்கு தேவை. ஏன் 20,000 என்பதை பிறகு விளக்குகிறேன் சுப்பையா!

அதைவிடுத்து, பிரதமர் அறிவித்த 1,000 மெட்ரிக்குலேசன் இடங்களை வியாபார நோக்கத்தோடு ஏற்றுக்கொண்ட ம.இ.கா-வினர் இப்போது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க போராடுகின்றனர்.

கொக்கு என்பது கொள்கை அளவில் நமது கல்விப் பிரச்னைக்கான தீர்வாக கொண்டால் வெண்ணெய் என்பது 1,000-க்கும் அதிகமான பிரதமர் அறிவித்த மெட்ரிக்குலேசன் இடங்களாகும்.

இப்போ நாம் கெஞ்சுவது, கொக்கும் வேணாம் வெங்காயமும் வேண்டாம் அந்த வெண்ணெய்யையாவது கொடுங்கள் என்பதுதான். ஏதோ 1,000-க்கும் அதிகமான நல்ல நிலையில் தேர்வு பெற்ற நமது குழந்தைகளாவது பயன் அடையட்டும்.

அதிலும் இப்போ பிரச்னை; வெண்ணெய்யை கண்ணன் திருடினானா? கோகுலத்தில் ஒரே காமெடியாம், சுப்பையா!

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: