மெட்டிரிகுலேஷன் மீதான முறையீட்டில் ஏன் இந்த மௌனம்?

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்.

2011ம் ஆண்டில் எஸ்.பி.எம்.தேர்வில் 7 ஏ’க்களுக்கு மேல் பெற்றிருந்தும் 2012ல் மெட்டிரிகுலேஷன் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளப்படாத இந்திய மாணவர்கள், கல்வி அமைச்சிடம் முறையிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மறுவிண்ணப்பம் செய்திருந்த பல மாணவர்கள் அதற்குரிய பதிலை, கல்வி அமைச்சிடமிருந்து பெற்றிருந்தார்கள். எனினும், சாதகமான பதில் பெறாத பல மாணவர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். மெட்டிரிகுலேஷன் கல்லூரிகளில் தங்களுக்கு எப்படியாவது இடம் பெற்றுத்தருமாறு ம.இ.கா.விடம் அவர்கள் உதவி கோருகின்றனர்.

கல்வி அமைச்சிடம் நாம் வேண்டிக்கொள்வது இதுதான். அதாவது எத்தகைய ஒளிவு மறைவும் இன்றி, எத்தனை இந்திய மாணவர்கள் மெட்டிரிகுலேஷனுக்கு மறுவிண்ணப்பம் செய்திருந்தனர், எத்தனை பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பது குறித்த புள்ளி விவரங்களை வெளிப்படையாக பொது மக்கள் அறியும்- படி செய்ய வேண்டும்.

மெட்டிரிகுலேஷன் கல்லூரிகளில் இந்திய மாணவர்களுக்கென 1500 இடங்கள் ஒதுக்கப்படும் என இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் அறிவித்திருந்தார். எனினும் 700 மாணவர்களுக்கு மட்டுமே அவ்வாய்ப்பு கிட்டியது. 7எ’க்களுக்கு மேல் வைத்திருக்கும் இன்னும் 400க்கும் மேற்பட்ட மாணவர்களின்  விண்ணப் பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சிறந்த தேர்ச்சி நிலையைப் பல இந்திய மாணவர்கள் பெற்றிருந்தும் எஞ்சியுள்ள 800 இடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை என்பதை பிரதமர் அவர்கள் விளக்க வேண்டும். ஏன் இந்த இரட்டைப் போக்கு? இதுதான் ஒரே மலேசியா தன்மையா?

தேசிய முன்னணி வேட்பாளர்கள் வாக்குகளுக்காக தங்களை நாடி வரும் போது இக்கேள்வியை இந்திய சமூகம் கட்டாயம் முன் வைக்க வேண்டும்.

மெட்டிரிகுலேஷன் என்பது பல்கலைக்கழக நுழைவுக்கு மாணவர்களைத் தயார் படுத்தும் பிரத்தியேகக் கல்விப் பயிற்சியாகும். இதில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேரும் பொழுது அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றிருக்கும் துறைகளைக் தேர்ந்தெடுக்கலாம்.

பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்வதற்கான மற்றொரு வழி எஸ்.டி.பி.எம்.  பரீட்சையில் சிறந்த தேர்ச்சி பெறுவதாகும். எஸ்.டி.பி.எம் என்பது தேசிய நிலை யிலான ஒரு பொதுத் தேர்வு. அதற்காக ஒன்றரை ஆண்டு காலம் படிக்க வேண்டும். ஆனல் மெட்டிரிகுலேஷன் என்பது 5ம் படிவ எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒராண்டுக் கால பிரத்தியேகக் பயிற்சியாகும். இதற்கான பரீட்சையை சம்பந்தப்பட்ட விரிவுரையாளரே நடத்துவார்.

எஸ்.டி.பி.எம் படிப்பின் போது பாடங்கள் மாட்டுமே கற்பிக்கப்படும் ஆனால் மெட்டிரிகுலேஷன் பயிற்சியில் வெளிப்புற ஆய்வு, வினாவிடை அரங்கம், இடைக்கால பரீட்சைகள், இறுதி நிலை தேர்வு போன்றவை உள்ளிட்டிருக்கும்.

இவை ஒன்றொன்றுக்கும் தனித்தனியே கொடுக்கப்படும் மதிப்பெண்கள் பிறகு ஒட்டு மொத்தமாகப் பரிசீலிக்கப்பட்டு கிரேட் கணிகப்பட்டும்.

அத்துடன் மெட்ரிகுலேஷன் வகுப்பில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடத் திட்டங்களில் ஆயத்தப் பயிற்சி பெறுவதால் பல்கலைகழகத்தில் அவர்கள் தொடர்ந்து அத்துறையிலேயே படித்துப் பட்டம் பெறலாம். ஆனால் எஸ்.டி.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களோ, அவர்கள் விரும்பி விண்ணப்பிக்கும் துறைகள் கிடைப்பதற்கான உத்திரவாதம் கிடையாது.

எனினும் உள்நாட்டுப் பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர் சேர்ப்பில் மெட்டிரிகுலேஷன் முடிவுக்கும் எஸ்.டி.பி.எம் முடிவுக்கும் இடையே தரத்தில் பேதமில்லை. உதாரணத்துக்கு மெட்டிரிகுலேஷனில் கிடைத்த 4ஏ, எஸ்.டி.பி.எம் தேர்வில் கிடைக்கும் 4ஏ’க்கு சமமான மதிப்பைக் கொண்டுள்ளன. இதனால் மெட்டிரிகுலேஷன் மாணவர்கள் பெரும் பயன் அடைவர்.

 

ஆனால் இன்றைய நிலை என்ன?

திறமை இருந்தும் இத்தகைய பயனான மெட்டிரிகுலேஷன் கல்விமுறை கிடைக்காமல் இந்திய மாணவர்கள் அல்லல்படுகின்றனர். இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் வழி, தேசிய முன்னணி அரசாங்கம் அவர்களை எஸ்.டி.பி.எம் தேர்வு எழுதும் படி திசை திருப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஆகவே, மக்கள் தம்மீது ‘நம்பிக்கை’ வைக்க வேண்டுமெனில் பிரதமர் அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். நான் இதற்கு முன் பலமுறை குறிப்பிட்டுள்ளது போல், இந்தியர்களுக்கு பிரதமர் கொடுக்கும் வாக்குறுதிகளை பாரிசன் நிர்வாகம் கண்டுகொள்வதும் இல்லை, செயற்படுத்துவதும் இல்லை.

கல்வி அமைச்சு நிர்வாகிகளே, உங்கள் மௌனம் எப்போது கலையும்? மிகுந்த எதிர்ப்பார்ப்போடு ஏக்கத்தோடு காத்திருக்கும் இந்திய மாணவர்களுக்கு உங்கள் பதில்தான் என்ன?