அம்னோ தொகுதி குறைந்த விலைக்கு நிலம் வாங்கியது

தஞ்சோங் காராங் அம்னோ தலைவர்கள், தங்கள் பதவியைப் பயன்படுத்தி முந்தைய அம்னோ மாநில அரசிடமிருந்து மிகவும் மலிவான விலைக்கு நிலம் வாங்கியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவீ லிம்,  0.437 ஹெக்டர் நிலம், ஒரு சதுர அடிக்கு ஒரு ரிங்கிட் என்ற விலையில் அந்த அம்னோ தொகுதிக்கு 2001 நவம்பரில் விற்கப்பட்டதை விவரிக்கும் ஆவணங்களை இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் காண்பித்தார்.

“நிலத்தின் அசல் விலை 1மில்லியன் ரிங்கிட்டுக்குமேல் இருக்கும்.ஆனால், முடிவில் ரிம47,039-க்கு விற்கப்பட்டது”.

அதன் அசல் விலை என்று பார்த்தால் ஒரு சதுர அடி ரிம24-க்குமேல் பெறும்.

விவசாய அமைச்சர் நோ ஒமார், அந்த நிலத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லது மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என அந்த சிக்கிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

அம்னோ தொகுதி விலையைக் குறைக்குமாறு மாநில அரசைக் கேட்டுக்கொண்டு கடிதம் எழுதியிருந்ததாகவும் அவர்  விளக்கினார்.

“வழக்கமாக 20% குறைக்கப்படும், அதிகப் பட்சமாக 50% தள்ளுபடி கொடுக்கப்படுவதும் உண்டு.

“ஆனால், இங்கு 90விழுக்காட்டுக்குமேல் குறைக்கப்பட்டுள்ளது”, என்றாரவர்.

அந்நிலத்தில் 12-மாடி தங்கும் விடுதி கட்டத் திட்டமிடப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத வதந்தி ஒன்று உலவுவதாகவும் இங் குறிப்பிட்டார்.

இப்போதைக்கு அங்கு ஒரு சமூக மண்டபம் மட்டுமே இருக்கிறது.

TAGS: