மின்னல் எப்எம் சமூகத்துக்கு நற்பணி ஆற்றுகிறதா?

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 2, 2012.

 

மலேசிய இந்தியர்கள் தற்போது கௌரவப் பிரச்னையை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் பற்றி ஒரு தப்பான கண்ணோட்டம் இப்போது பிற இனத்தாரிடையே நிலவுகிறது.

ஏன் இந்த நிலை? 

சில கும்பல்களின் வக்கிர செயல்களும், வன்முறை ஈடுபாடுகளும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கு மாசு வண்ணம் பூசியுள்ளன. இந்தியரின் தன்மானத்தையும் அது பெரிதும் பாதித்துள்ளது. இந்தியர் என்றால் கொலை, கொள்ளை, கள்ளத்தனம் எனும் அபிப்பிராயம் பரவலாக உள்ளது.   

இந்தியர் பற்றிய எதிர்மறையான செய்திகள் நாளிதழ்களில் முதலிடம் வகிக்கின்றன.
ஐந்தடியில் ஓர் இந்தியர் உடல்நலம் குன்றி விழுந்து கிடந்தாலும் “இந்தியா மாபுக்” (India mabuk) எனும் குறீயிடுதான்! இந்த அடையாள அச்சு அனைத்து இந்தியர்கள் மீதும் குத்தப்படுவதால், வேலை வாய்ப்பு தேடுதலிலும் வியாபார ஈடுபாட்டிலும், குறிப்பாக நம் இளைஞர்கள், இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

எனினும் இந்தத் தவறன கண்ணோட்டத்தை ஒழிக்க அல்லது துடைக்க நமக்குப் போதுமான அரசியல் பலமோ பொருளாதார பலமோ கிடையாது. சமூக அமைப்புகளும் இதில் அதிக கரிசணம் காட்டுவதில்லை. எல்லோரும் அவரவர் காரியத்திலேயே மும்முரமாக மூழ்கிவிடுகின்றனர்.

ஏழ்மை நிலையில் உள்ள வர்க்கத்தை மேல் நிலைக்கு கொண்டு வருவது எளிதான காரியமல்ல. தேசிய பொருளாதார நீரோட்டத்திலிருந்தும் பரிதாபத்துக்குரிய இவர்கள் இன்னமும் பின்தள்ளியே வைக்கப்பட்டுள்ளனர். குறைந்த விலை அடுக்குமாடி வீடுகள் அல்லது புறம்போக்குப் பகுதிகளில் வாழும் இளைஞர்களே பெரும்பாலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களைத் திருத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசாங்கத்தால் மட்டுமே முடியும். ஆனால் லஞ்ச ஊழலாலும், பாரபட்சம் பார்க்கும் போலீஸ் போன்ற தரப்பினரின் போக்காலும் இதற்குத் தீர்வு ஏற்படவில்லை. மாறாக அவை அக்குற்றச் செயல்களுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.                  
          
நன்நெறிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நற்சிந்தனைகளைப் பதிய வைப்பதற்கும் ஒரு சிறந்த களமாகக் கருதப்படுவது மின்னல் எப்எம் வானொலி ஒலிபரப்பு!! இந்திய சமூகத்தைப் பாதிக்கக்கூடிய அம்சங்களை ஒளிபரப்பி, மாற்று தீர்வுக்கான நல்வழிகளை அறிவூட்டுவதற்கு மின்னல் எப்எம் நயம்பட கடமையாற்ற முடியும்.

ஆனால் தற்போது மின்னல் எப்எம் எப்படி செயற்படுகிறது? உல்லாச நிலையமாகவும், மனமகிழ்வு ஒலியாகவும், திரைப்பட விமர்சன நிறுவனமாகவும், குறிப்பிட்ட அரசியல் கொள்கைகளுக்கான பிரச்சார ஊடகமாகவும் மட்டுமே அது விளங்குகிறது. இந்தியர்களை என்னென்றும் அப்பாவிகளாக, தனக்கு விசுவாசிகளாக இருந்திட, மின்னல் எப்எம்மை அரசாங்கம் தனக்கு சாதகமான சாதனமாக பயன்படுத்திக்கொள்கிறது.

மின்னல் எப்எம் வழி செய்திகளைக் கேட்கும் நேயர்கள், நடப்பு விவகாரங்கள் குறித்து சிறந்த மதிப்பீடு அல்லது தர ஆய்வு செய்ய இயலாது. ஏனெனில் அது  உண்மை நிவரங்களை அல்லது தகவல்களை அப்படியே ஒலிபரப்புவதில்லை.

தகவல் அளிப்பில் அல்லது நடுநிலை கருத்தில் மின்னல் எப்எம்மை விட   பிஎப்எம் (BFM) ஒலிபரப்பு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நிமிர்ந்து நிற்கிறது.

இளைஞர் உலகம், அறிவியல் உலகம், அறிவுப் புதிர் போன்ற அக்கால நிகழ்ச்சிகள் தற்போது ஒலிபரப்படுவதில்லை. வெற்றிபெற்ற இந்திய தொழில் அதிபர்கள், அறிஞர்கள், சாதனையாளர்கள், வாகைசூடிய விளையாட்டாளர்கள், இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைந்திட சிறந்த வழிகாட்டுதலை வழங்கக் கூடிய நல்லோரின்   நேர்காணல் இடம்பெறுவதில்லை.

இளைஞர்களுக்கு நன்நெறி புகுட்டக்கூடிய இலக்கிய வரலாற்றுக் கூறுகள் கிடையாது. மாறாக மன இச்சையூட்டும் பாடல்களே அதிகமக இடம்பெறுகின்றன.

அத்துடன் அரசாங்க ஆதிக்கம் வானொலி ஒலிபரபில் ஒருபோதும் இருக்கக் கூடாது. ஒலிபரப்பாளர்கள் தைரியமாக அறிவிப்பு செய்யகூடிய சூழல் இருப்பது அவசியம்.

ஆகவே, தனது ஒலிபரப்புத் தரத்தை மின்னல் எப்எம் அவசியம் மேம்படுத்த வேண்டும். அதற்கான தருணம் வந்துவிட்டது. சினிமா விமர்சனத்தைக் குறைத்து  நேயர்களுக்குப் பொது அறிவை ஊட்டும் கருவியாக அது மாறினால், இந்திய  சமூகத்தின் சீர்திருத்தத்திற்கு உரிய புண்ணியம் அதைச் சாரும்!

இந்தியர்களின் எதிர்கால நலன் நம் கையில்தான் உள்ளது. பிரச்னைகளுக்கான தீர்வை நாமே  தேட வேண்டும். அது இப்போது இல்லையெனில் பின் எப்போது?