முன்னாள் சிஐடி தலைவர்: குற்றச் செயல்களை முறியடிக்க சிறப்புப் பிரிவையும் (SB) கலகத் தடுப்புப் போலீசையும் (FRU) பயன்படுத்துங்கள்

சிறப்புப் பிரிவு (SB), கலகத் தடுப்புப் போலீஸ் (FRU) உட்பட சில துறைகளில் ஊழியர்களைக் குறைத்து அவர்களை சிஐடி என்ற குற்றப் புலனாய்வுத் துறை குற்றங்களைத் தீர்ப்பதில் உதவுவதற்கு போலீஸ் படை அனுப்ப வேண்டும். 
  
இவ்வாறு ஒய்வு பெற்ற புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் பாவ்சி ஷாரி ஆலோசனை கூறியுள்ளார்.

சிஐடி பிரிவின் வேலைச் சுமை பெருகியுள்ளதால் குற்றச் செயல்களை முறியடிப்பதில் அதற்கு உள்ள திறமை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“போலீஸ் படையில் பொறுப்பு வகிப்பவர்கள் ஊழியர்களை இடம் மாற்ற வேண்டும். மிக அதிகமான புலனாய்வுகளை சிஐடி பிரிவு மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அதனால் அவற்றைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.”

“ஆகவே நாம் ஏன் FRU, கடல் போலீஸ் போன்ற பிரிவுகளில் ஊழியர் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது,” என அவர் மலேசியாகினிக்கு கடந்த வெள்ளிக் கிழமை அளித்த பேட்டியில் வினவினார்.

குறிப்பாக FRU ஊழியர் எண்ணிக்கை குறைக்கப்படலாம். காரணம் அவர்கள் கோப்புக்களைத் திறக்கவும் அதிகாரத்துவ அறிக்கைகளை எழுதவும் புலனாய்வுகளை நடத்தவும் வேண்டிய அவசியமில்லை.

2011ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி, சிறப்புப் பிரிவில் (SB) 5050 போலீஸ் அதிகாரிகளும் FRU உட்பட தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்குப் பிரிவில் 32,656 அதிகாரிகளும் சிஐடி பிரிவில் 9,346 அதிகாரிகளும் வேலை செய்தனர்.

பாவ்சி கடந்த மே மாதம் பாஸ் கட்சியில் இணைந்தார். போலீஸ் படை, குற்றச் செயல்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தனது ஊழியர்களை விநியோகம் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

 

TAGS: