எதிர்காலத்தில் நாம் சிறந்தவர்களாக வாழவேண்டும் என்றால் மாற்றம் தேவை!

அண்மையில் (12.8.2012 – ஞாயிறு) மிட்லண்ட் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில்  ‘நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன்’ எனும் தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது.

இது போன்ற நிகழ்வுகள் நடப்பது அபூர்வம். வெவ்வேறு தளத்தில் இயங்கும் சக்திவாய்ந்த ஊடகங்கள் இன நலனுக்காக ஒன்றிணையும் ஒரு தருணத்தை செம்பருத்தி இணையத்தளம் ஆதரவுடன் அரசு சார்பற்ற சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு  ஏற்பாடு செய்திருந்தது.

திரு.குணராஜ் அவர்களின் வரவேற்பு உரைக்குப் பின்னர், ‘சுவாராம்’ அமைப்பின் தலைவர் கா.ஆறுமுகம் அவர்களின் அறிமுக உரை தொடங்கியது. [காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும் ]

உணர்வைத் தூண்டச் செய்யும் உரையின் தொகுக்கப்பட்ட பகுதி :

ஒரு கும்பல் நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்க இன்னொரு வர்க்கம் வறுமையில் வாடும் அவலத்தை இன்னமும் இந்நாடு அனுபவித்து வருகின்ற ஒரு சூழலில் நாம் இங்கு கூடியுள்ளோம் . இந்நாட்டின் செல்வம் முறையாகப் பங்கிடப்படப்படாத ஒரு நிலையில் இன்னமும் வறுமையில் உள்ளவர்களின் வாழ்வை இந்நாடு ஏந்தியுள்ளது. இந்நிலையில் நாம் அனைவரும் இந்தியர் என்ற முத்திரைக் குத்தப்பட்டு புறந்தள்ளப் பட்டுள்ளோம். இந்நாடு நமக்குச் சொந்தமென்றால் தூய தேர்தலின் வழி சனநாயகத்தையும் சமத்துவத்தையும் நம்மால் இந்நாட்டில் நாம் வாழும் காலக்கட்டத்திலேயே கொண்டுவர முடியும் என்றால் நாம் மிகப்பெரிய சாதனையாளர்களாக இருப்போம் என்பது உறுதி.

அதை செய்ய முடியுமா என்பதுதான் இன்றைய தலையாயக் கேள்வி.

இந்த நாட்டின் வளத்தை யார் கைகளில் வைத்துள்ளார்கள். மிகப்பெரிய இனம் என்ற பெயரிலும் , மதம் என்ற பெயரிலும் அரசியல் பலத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு மலேசியாவின் வளத்தை பங்கீடு செய்வதற்கான அதிகாரத்தை அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்கள். அதன் பிரதிபளிப்பாக  பெரிய இயந்திரங்களாகிவிட்ட அரசாங்க அமைப்புக்குள் இந்தியர் என்ற அடையாளம் தாங்கி நுழையும் எதுவும் மீண்டும் வெளிவருவதில்லை. அதனால்தான் நமது மெட்ரிகுலேஷன் படிவங்கள் உள் நுழைந்தால் அங்கேயே முடங்கிவிடுகின்றது. பூமிபுத்திராக்கள் அல்லது மலாய்க்காரர்கள் என்று போட்டால் மட்டுமே அந்த அரசு இயந்திரங்கள் சுறுசுறுப்பாகும்.

அந்த இயந்திரத்தை யார் பழுதுபார்ப்பது? யார் மாற்றுவது?

இன்று பலவற்றையும் தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் நிகழ்த்திவருகிறது. நாம் நமது பணத்தைக் கூடுதலாக செலவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நாம் மேலும் வறுமையாக்கப்படும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். திட்டமிட்டு நாம் கடனாளியாக்கப்படுகிறோம். உங்களின் ஒரு குழந்தை கல்லூரி படிக்கும் வயதை எட்டும்போது நீங்கள் கடனாளியாக்கப்படுவீர்கள். ஆனால் இதற்கு எதிர்மாறான நிலையில் இந்நாட்டின் வளம் நம் கண்முன்பே குவிந்துகிடக்கின்றது. நாம் சொந்தம் கொண்டாட முடியாத நமது சொத்துகள் அவை.

அதை நமது உடமையாக யார் கொண்டுவருவது?

அதிகார வர்க்கங்கள் இன்று சட்டத்தை மாற்றிவைக்கிறார்கள்.  பொறுப்பான வேலைக்குச் செல்லும் ஒருவனின் சம்பளம் இன்றைய வாழ்வை சிரமமின்றி எதிர்நோக்கும் சக்தியைக் கொண்டுள்ளதா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும் . அந்நிய தொழிளாலர்களின் வருகை இதற்கு ஒரு முக்கியக் காரணம். வெளிநாட்டிலுள்ள நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய இந்தத் தொழிலாளர்கள் குத்தகை முறையில் இங்கு அழைத்துவரப்பட்டு குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இங்கு நமக்கான வேலை வாய்ப்பும் சம்பளத்தொகையும் இதனால் பாதிக்கப்படுகின்றது. இது முற்றிலுமாக அகற்றப்பட்டால்தான் இங்குள்ள தொழில் திறன் வளரும். சம்பளம் உயரும்.

இன்று நார்வே , சுவிஸ்லாந்து போன்ற வளர்ந்த நாடுகளுக்குச் சென்று பார்த்தால், சாதாரண தொழிலாளிக்குக் கிடைக்கும் சம்பளமும் உயர் அதிகாரிகளுக்குக் கிடைக்கும் சம்பளமும் நான்கு அல்லது ஐந்து மடங்கே வித்தியாசப்பட்டிருக்கும். ஆனால், நமக்கு அந்த நிலையா? ‘சபாஷ்’ நிர்வாகிக்குக் கிடைக்கும் ஒரு மாத சம்பளத்தைப் பெற அங்கு வேலை செய்யும் எளிய பணியாளன் ஐந்து ஆண்டுகள் உழைக்க வேண்டியுள்ளது. இதுதான் எல்லா நிர்வாகத்திலும் நடக்கின்றது. ஆக ஒட்டு மொத்தமாக தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படும் ஒரு சூழலில்தான் வாழ்கிறோம்.

இந்த நிலை மாற வேண்டுமானால், நம் எண்ணங்கள் ஒன்றை நோக்கியே குவிக்கப்பட வேண்டும். அதன் மூலமே மாற்றம் நிச்சயம். நீங்கள் எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள் என்பது பெரிதல்ல. எதிர்க்காலத்தில் இந்நாட்டில் நாம் சிறந்தவர்களாக வாழ வேண்டும் என்றால் மாற்றம் என்பதை உருவாக்க நாம் தயாராக வேண்டும்.

இன்று நாம் முக்கியமான தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். பல்வேறு ஊழல்களால் நிரம்பி வழிந்த தேர்தலுக்கு எதிராக டத்தோ அம்பிகா சீனிவாசன் அவர்கள் தலைமையில் தூய தேர்தலை நடத்தக்கோரி போராட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்தப் போராட்டங்கள் குறித்தும் அதன் அடிப்படை தார்மீகம் குறித்தும் எளிய மக்களிடம் ஏற்றிச் செல்லும் அற்புத வாகனமாகவே தமிழ் நாளிதள்கள் உள்ளன. இன்று அந்த நான்கு நாளிதழ்களின் ஆசிரியர்களுடன் இங்கு டத்தோ அம்பிகா சீனிவாசன் அவர்கள் உரையாடுவார். இந்த உரையாடல் மூலம் சமுதாயத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் தமிழ் நாளிதழ்கள் மக்கள் சிந்தனையையும் எண்ணத்தையும் ஒருமுகப்படுத்தும் என பெரிதும் நம்புகிறோம்.

பதிவு : www.vallinam.com.my

TAGS: