ஸ்ரீமுருகன் நிலையத்தால் புரட்சியா அல்லது வறட்சியா?


ஸ்ரீமுருகன் நிலையத்தால் புரட்சியா அல்லது வறட்சியா?

கந்தன்: கோமாளி, ஸ்ரீமுருகன் நிலையத்தால் இந்திய சமூகத்திற்கு புரட்சியா அல்லது வறட்சியா?

கோமாளி: கந்தா! என்ன கேள்வி இது, சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா? என்று ஒளவையை கேட்ட மாதிரி உள்ளது உன் கேள்வி! நான் புரட்சி என்றால், அப்புறம் ஏன் இன்ட்ராப் என்பாய், வறட்சி என்றால் உனக்கு கோபம் வரலாம். உன்னை நம்பி யாகம் செய்தவர்கள் அல்லவா!

1982இல் தொடங்கிய இந்த சமூக கல்வி அமைப்பு மிகவும் கட்டு கோப்பான வழிமுறைகளை கொண்டது. முருகப்பெருமான் மீது பக்தி கொண்டு கல்வியில் வெற்றி பெற அதன் சமூக விஞ்ஞானி டாக்டர் எம். தம்பிராஜா (இப்போ டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜா) சமயத்தையும் கல்வியையும் அறிவியல் பூர்வமாக ஒன்றிணைத்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதனால் பயன் பெற்று உயர்கல்வி செல்லும் வாய்ப்பை பெற்றனர் என்பதில் ஐயமில்லை. அதேவேளை, இதுதான் கல்வியா? இதுதான் சமூக புரட்சியா? என்ற வினாவுக்கு விடை தேட வேண்டும் என்கிறேன் கோமாளியான நான்.

ஒரு பலவீனமான மனிதனுக்கு தன்னம்பிகை குறைவாகவே இருக்கும். அதனால் மதியைவிட விதி மீது நம்பிக்கை உண்டாகும். துன்பம், இயலாமை போன்றவை ஒருவனின் தன்னம்பிக்கையை தாக்கும் போது உண்டாகும் பயத்தை பக்தியை கொண்டு நிர்வகிக்கலாம். கடவுள் மீது பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, கடவுள்  வழி காட்டுவார் என்ற திருப்தியில் வாழும் நிலையில் உள்ளவர்கள்தான் நம்மில் பெரும்பான்மையோர். கடவுளை உள்வாங்கி மனிதனே தனது பலவீனங்களை வென்று கடவுளாக மாறும் சித்தாந்தம் இதில் கிடையாது.

அநீதிகளையும், அக்கிரமங்களையும், பொய்களையும், பித்தலாட்டங்களையும், அடிமைத்தனதையும் ஏற்றுக்கொண்டு ஏமாற்றுபவர்களுக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் நம்மை அடிமைப்படுத்துபவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் ஒரு சமூக அமைப்பு முறையில் நமக்கு எவ்வகையான கல்விப்புரட்சி தேவை? அப்படிப்பட்ட கல்விப்புரட்சியை தம்பிராஜா தனது வியூகத்தில் வழங்கினாரா? என்ற வினாக்களுக்கு விடை தேடுவோம்.

பாலோ பிரய்ரே என்ற பிரேசில் நாட்டை சார்ந்த கல்வியாலர் மாற்று கல்வி முறைக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். நடைமுறையில் உள்ள அறிவு சார்ந்த கல்வி ஏமாற்றுத்தனம் கொண்டது. அதில் ஒரு தரப்பினர் (சுரண்டுபவர்) இன்னொரு தரப்பினரை (சுரண்டப்படுபவர்) ஆக்கிரமிப்பு செய்யும் தன்மைதான் மையமாக உள்ளது. ஒரு தரப்பினர்  ஜடப்பொருளாக இன்னொரு பிரிவினருக்கு பயன்தரும் வகையில் வாழ்வதை அது நியாயப்படுத்தும் என்கிறார் பிரய்ரே. சாக்ரடிஸ் சொன்னது போல “உன்னையே நீ அறிவாய்” என்ற வகையில் யதார்தத்தை வரலாற்றுப் பார்வையில் ஆய்வு செய்து அதற்கேற்ற செயலாக்கத்தை சிந்தனை புரட்சி வழி உருவாக்கம் செய்யும் கல்வியே மானுடத்தை மீட்கும் கல்வி முறையாகும். அதன்வழிதான் சுரண்டப்படும் சமூகம் தனது ஆற்றலை உணர்ந்து போராடும் தனது உரிமைகளை பெறும்.

ஆனால் நாம் காண்பது அதுவல்ல. எப்படி வல்லவனாக நெழிவு சுழிவுகளை கற்று முன்னேற்றம் என்ற வகையில் முண்டியடித்துக்கொண்டு ஜடப்பொருட்களாக உள்ள மக்களை திறமையாக மேய்ப்பது என்ற வாணிப சமூக சூழலுக்கு அடி பணிந்து செயல்படுகிறோம். அதைத்தான் கல்வியின் வெற்றி என்கிறோம்.

ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஸ்ரீமுருகன் நிலையம் கையாண்டது. கடந்த 30 ஆண்டுகளில் இதில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியிருக்கலாம். இது ஒரு பெரிய எண்ணிக்கை, இன்று உயர்கல்வி கற்ற வகையில் உள்ள இந்தியர்களில் பெரும்பான்மையோர் இதன்வழி வந்தவர்கள் எனலாம். இவர்களின் பத்திரிக்கை விளம்பரங்கள், இவர்கள் மேற்கொண்ட யாத்திரைகள், இவர்களின் தத்துவம் அனைத்தும் இந்தியர்களை கல்வியிலும் சமூக மேம்பாட்டிலும் பண்பாட்டிலும் எங்கோ அழைத்து சென்று விட்டது போன்ற பிரம்மையை உண்டாக்கும்.

அனைவரும் சமமானவர், அனைவருக்கும் படைக்கப்பட்ட அறிவுத்திறன் சமமானது, கல்வியிலும் வாழ்கையிலும் வெற்றிபெற சமய நம்பிக்கை அத்தியாவசியமானது என்பதுதான் ஸ்ரீமுருகன் நிலையத்தின் மூன்று அடித்தளம் என்கிறது அதன் இணையத்தளம்.

கல்வி என்ற ஒரு மிக முக்கியமான சமூகத்தின் ஆணிவேரை தனது கைக்குள் எடுத்துக்கொண்டு அதன் வழி இந்திய சமூகத்தில் மாபெரும் விழிப்புணர்சியை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கியது ஸ்ரீமுருகன் நிலையம். அந்த மாற்றம் உள்ளதா, உண்மையானதா?

அல்லது மாணவர்களிடம் கட்டுக்கோப்பை உண்டாக்கி, அவர்களிடையே சமயம் என்பதை விற்பனை செய்து, நிதி வசூல் செய்து, அதன்வழி உருவான அந்த நிலையத்தை சுரண்டும் அரசியல் அமைப்புகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்து போராடும் இளைஞர்களுக்கு கழுத்தில் டை கட்டி அவர்களது குரல்களை அடக்கி கடந்த முப்பது ஆண்டுகளாக நம்மை அரசியல் பகடைக்காய்களாக பணையம் வைத்தார்களா?

இவர்கள் நடத்திய போராட்டங்கள் யாவை? சமூக நீதிக்காக எழுப்பிய குரல் என்ன? இந்த செல்வம் கொழிக்கும் நாட்டிலே நாம் அடிமைச் சமூகமாக மூன்றாந்தர மக்களாக வாழும் நிலை இவர்கள் அறியாததா? அனைவரும் சமத்துவம் என்பதை விற்பனை செய்யும் இவர்கள் அது இல்லாத போது அதைப்பெற அந்த முரண்பாட்டை களைய போராடுவதை விட்டுவிட்டு ஏன் ஆயிரக்கணக்கில் நமது இளைய தலைமுறையினரை ஆட்டுமந்தைகள் போல் அடிமைபடுத்தினர்?

உதாரணமாக, ஜுன் 2006இல் முன்னால் தெலுக்கெமாங் நாடாளுமன்ற உறுப்பினரும் அப்போதைய மஇகாவின் பொதுச்செயலாளரும் துணை அமைச்சருமான சோதிநாதன், 581 இந்தியர்கள் மருத்துவ கல்வி பயின்ற கிரிமியா ஸ்டேட் மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தை அரசாங்கம் தடை செய்ததை கண்டனம் செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆட்சேபித்தார். அதனால் அவர் துணை அமைச்சர் பதவியிலிருந்து மூன்று மாதங்கள் நீக்கப்பட்டார். இது சார்பாக நாடாளுமன்றத்தின் முன்பு ஒரு மறியலை நடத்த சிலர் ஏற்பாடு செய்தனர். அதில் கலந்து கொள்ள மருந்திற்கு கூட ஸ்ரீமுருகன் நிலையமோ அதனைச் சார்ந்தவர்களோ வரவில்லை. மாணவர்களை பாதிக்கும் நேரடியான இந்த நிகழ்வு யதார்த்தமானது. அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற உரிமை உணர்வை உருவாக்க இயலாத வறட்சி நிலை எப்படி சமூக பண்பாட்டு புரட்சிக்கு வித்திடும்?

ஸ்ரீமுருகன் நிலையம் என்பது ஒரு மாயை என்பதை நாம் உணர வேண்டும். அதனால் தரமான பிரத்தியேக கல்வி பாடங்களை நடத்த இயலும். அதைக்கூட அவர்கள் வியாபாரமாக தொடர்ந்து செய்வது மேலும் வேடிக்கையாகவே உள்ளது. அந்த நிலையம் உண்மையான சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டுமானால், அது தனது முகமூடியை கழற்ற வேண்டும். கோட்டும் சூட்டும் போட்டு பத்திரிகை செய்தி வழியும் பக்தி என்றும் விரதம் என்றும் உணர்வை மலுங்கடிக்கும் தன்மை அகல வேண்டும்.

அதன் விஞ்ஞானி டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் தம்பிராஜா மேலும் இளைஞர்களை தான் அடிபணியும் அரசியலுக்கு அடமானம் வைக்கக் கூடாது. அவர்கள் இருக்கும் விரதம் உரிமையை கேட்பதாக இருக்க வேண்டும். பிறந்த நாட்டிலேயே ஏன் நாம் இன்னமும் மூன்றாம்தரம் என்ற வினாவை தொடுக்க வேண்டும். உலக அளவில் உருவாக்கம் கண்டு வரும் மாணவர் புரட்சிக்கு அவர்களை தயார் படுத்த வேண்டும். எல்லாம் கிடைத்தும் உணர்வோடு நீதிக்கும் தூயத்தேர்தலுக்கும் போராடும் நமது சக மலாய் கார மாணவர்கள் ஒரு நல்ல எடுத்துகாட்டு.

ஸ்ரீமுருகன் நிலையம் தனது கல்வி வழிமுறைகளை இனாமாக்க வேண்டும். உதாரணமாக கான் அக்கடமி (www.khanacademy.org) என்ற இணையத்தளம் வழியாக சால்மன் கான் என்ற இளைஞர் 2006இல் உண்டாக்கிய காணொளி வழி பல வகையான பாடங்களை இனாமாக தருகிறது. உலக அளவில் சுமார் 17 கோடி முறைகள் அவை பார்வையிடப்பட்டுள்ளன. ஸ்ரீமுருகன் நிலையம் தனது பாடங்களையும், அவை சார்ந்த வழிமுறைகளையும் இணையத்தளம் வழி அனைத்து மாணவர்களும் பயனடைய இனாமாக்க வேண்டும்.

வரலாறு பாடங்களை கற்றறிந்த மேதையான தம்பிராஜா தனது மாயையை விட்டு வெளியேவர வேண்டும். ஸ்ரீமுருகன் நிலையத்தின் தேவை என்பது இனி பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டது. அது இனி ஒரு போரட்டத்தளமாக உருவாக வேண்டும்.

கந்தா, சூரபத்மன்கள் யார் என்பது கூட தமக்குத் தெரியாமல் தவிக்கும் ஸ்ரீமுருகன் நிலையத்தின் நிலை மாற வேண்டும் என்பதே கோமாளியின் கருத்து.

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: