சுஹாக்காம்: புதிய மசோதாக்களை வரையும் போது எங்களுடன் கலந்தாய்வு செய்வதில்லை

அமைதியாக ஒன்று கூடும் மசோதா தொடர்பில் சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்துடன் முழுமையாக கலந்தாய்வு செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு அந்த மசோதாவை சுஹாக்காம் குறை கூறியதைத் தொடர்ந்து அரசாங்கம் புதிய மசோதாக்களை வரையும்  போது அதனுடன் ஆலோசனை நடத்துவதில்லை.

இவ்வாறு சுஹாக்காம் ஆணையர்களில் ஒருவரான ஷானி அப்துல்லா கூறியிருக்கிறார்.

அமைதியாக ஒன்று கூடும் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதனைக் கண்டிக்கும் பத்திரிக்கை அறிக்கை ஒன்றை சுஹாக்காம் வெளியிட்டது. சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் அது குறித்து மகிழ்ச்சி அடையவில்லை. சுஹாக்காமுடன் கலந்தாய்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறிக் கொண்டார் என ஷானி சொன்னார்.

என்றாலும் அந்த விஷயம் மீது சுஹாக்காம் தலைவர் ஹாஸ்மி அகாமுக்கு வாய்மொழியாக மட்டும் விளக்கம் அளிக்கப்பட்டது என்றும் முழு மசோதாவும் காட்டப்படவில்லை என்றும் ஷானி தெரிவித்தார்.

“அதற்குப் பின்னர் எந்த ஒரு மசோதா பற்றியும் வாய்மொழியாகக் கூட கலந்தாய்வு செய்யப்படவில்லை,” என்றார் அவர்.

புதிய சட்டங்களை வரையும் போது அரசாங்கத்துக்கு அறிவுரை கூறுவதற்கான சட்ட அதிகாரம் சுஹாக்காமுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை ஷானி சுட்டிக் காட்டினார்.

“ஆனால் மசோதாக்களை பார்க்க முடியாத சூழ்நிலையில் அது அதனை எப்படிச் செய்ய முடியும் ?”

“அரசாங்கம் மசோதக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் சுஹாக்காம் தவிர மற்ற அரசாங்க அமைப்புக்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறது.”

“நாங்கள் அரசாங்க அமைப்பு இல்லை என்றாலும் அரசு சார்பு அமைப்பாகும். எந்த புதிய சட்டங்கள் அல்லது திருத்தங்கள் மீது அரசாங்கத்துக்கு அறிவுரை கூறும் அதிகாரத்துவ கடமை எங்களுக்கு உள்ளது. ஆனால் எங்களுக்கு மசோதாக்களின் பிரதிகள் கொடுக்கப்படுவது இல்லை,” என அவர் இன்று பொதுக் கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

வழக்குரைஞர் மன்றமும் மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராமும் இணைந்து ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மீது ஏற்பாடு செய்துள்ள அந்தக் கருத்தரங்கில் ஷானி பேசினார்.