பிஎன் பினாங்கு நில விற்பனைகளை ஆராய குழு அமைக்கப்பட்டது

பினாங்கு மாநிலத்தில் 2008ம் ஆண்டுக்கு முன்னதாக பிஎன் நிர்வாகத்தில் சந்தை மதிப்புக்கு குறைவாக அல்லது இலவசமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் கேள்விக்குரிய நிலப் பேரங்கள் பற்றி ஆராய சிறப்பு ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தத் தகவலை அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டார்.

ஜாலான் எஸ்பி செல்லையா தாமான் மாங்கிஸில் உள்ள பினாங்கு நகராட்சி மன்ற நிலத்தை விற்குமாறு லிம் ஆணையிட்டதாக பிஎன் குற்றம் சாட்டுவதற்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசாங்கம் தொடங்கியுள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த ஆய்வு அமையும்.

அந்த நிலம் பிஎன் நிர்வாகத்தில் குறைந்த விலை வீடுகளைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது என்றும் தனியார் மருத்துவமனை ஒன்றைக் கட்டுவதற்கு தனியார் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றுக்கு லிம் நிர்வாகம் அதனை விற்று விட்டது என்றும் பிஎன் தலைவர்கள் கூறிக் கொள்கின்றனர்.

அந்த மருத்துவமனைத் தொட்டத்தில் லிம்-முக்கும் நான்கு இதர டிஏபி தலைவர்களுக்கும் பங்கு இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர். ஆனால் இது நாள் வரை அதற்கான ஆதாரத்தை அவர்கள் காட்டவில்லை.

ஊராட்சி மன்ற, போக்குவரத்து நிர்வாகத்திற்கான ஆட்சி மன்ற உறுப்பினர் சாவ் கோ இயாவ் அந்தக் குழுவுக்கு தலைமை ஏற்பார் என லிம் விடுத்த அறிக்கை கூறியது.

அந்த ஆய்வில் மொத்தம் 4,000 ஏக்கர் அரசாங்க நிலம் சம்பந்தப்பட்டிருக்கும். அவற்றுள்:

-1990லும் 1999லும் தஞ்சோங் தொக்கோங்கில் 980 ஏக்கர் நிலம் ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் விலையில் விற்கப்பட்டது

-2004ம் ஆண்டு பத்து காவானில் 750 ஏக்கர் நிலம் ஒரு சதுர அடி 3 ரிங்கிட் 5 சென்னுக்கும் 4 ரிங்கிட்டுக்கும் இடையில் விற்கப்பட்டது

-புலாவ் ஜெரெஜாக்கில் எந்த திறந்த டெண்டரும் இல்லாமல் ஒரு சதுர அடி 3 ரிங்கிட் 72 சென் விலைக்கு அதிக மதிப்புள்ள 80 ஏக்கர் நிலம்  விற்கப்பட்டது

-நெடுஞ்சாலை ஒன்றைக் கட்டுவதற்காக நில மீட்புச் செலவுகளை மட்டுமே செலவு செய்த ஒரு நிறுவனத்துக்கு பட்டர்வொர்த்தில் 1600 ஏக்கர் பரப்புள்ள மீட்கப்பட்ட நிலம் இலவசமாக கொடுக்கப்பட்டது

-பினாங்கு வெளிவட்ட சுற்றுச் சாலைத் திட்டத்துக்காக திறந்த டெண்டர் ஏதுமில்லாமல் 500 ஏக்கர் மீட்கப்பட்ட நிலம் கொடுக்கப்பட்டது ஆகியவையும் அடங்கும்.

பினாங்கு ஆட்சி மன்றம் செப்டம்பர் 7ம் தேதி கூட்டத்தில் அந்தக் குழுவை அமைப்பதற்கு முடிவு செய்தது.

“சாவ்-க்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து அரசாங்கத் துறைகளுக்கும் குறிப்பாக நில அலுவலகம், இரண்டு ஊராட்சி மன்றங்கள். பினாங்கு மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு பணிக்கப்பட்டுள்ளது,” என்றும் அந்த அறிக்கை கூறியது.