முன்னாள் சுஹாக்காம் ஆணையர்கள் சுவாராமுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்

சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர்களைக் கொண்ட ஒர் அமைப்பு சுவாராமுக்கு ஆதரவு நல்கியுள்ளது.

சுவாராமை அச்சுறுத்துவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.

சுவாராம் குறித்து ஆதாரமற்ற அறிக்கைகளை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு வெளியிடக் கூடாது என்றும் Proham என அழைக்கப்படும் அந்த மனித உரிமைகள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியது.

சுவாராமின் நிதிக் கணக்குகள் மற்றும் இதர சட்டத் தேவைகள் மீது நியாயமான, வெளிப்படையான ஆய்வை மேற்கொள்ளுமாறும் அது அமைச்சுக்கு அறிவுரை கூறியது.

“அது முழுமையான, ஆழமான, நியாயமான விசாரணைகளை மேற்கொண்டு தனது அறிக்கையைப் பொது மக்களுக்கு வெளியிட வேண்டும். அதன் வழி மக்கள் அதன் நேர்மை பற்றி முடிவு செய்ய இயலும்.”

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் சட்டப்பூர்வமான வட்டாரங்களிலிருந்து நிதி உதவிகளைப் பெறுவதை சட்ட விரோதமானது அல்லது தேசிய எதிர்ப்பு எனக் கூறக் கூடாது என்றும்  Proham வலியுறுத்தியது.

சிவில் சமூகம், தொண்டு நிறுவனங்கள் மட்டுமின்றி அரசாங்கமும் அந்நிய நிதி உதவிகளைப் பெறுவதை அந்த அமைப்பு சுட்டிக் காட்டியது.

‘உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி, இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி ஆகிய நிதி அமைப்புக்களிடமிருந்து வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன்களையும் அந்நிய உதவியையும் அரசாங்கமே பெற்று வருவதை இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும்.”

“அதனால் அரசாங்கம் தனது நேர்மையையும் ஆட்சியுரிமையையும் விட்டுக் கொடுத்து விட்டதாக கருதப்படுவது இல்லை. அப்படி இருக்கும் போது அதிகாரிகள் ஏன் சுவாராம் அந்நிய நிதி உதவிகளை பெறுவதை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் கேள்வி ஆகும்,” என்றும் அது குறிப்பிட்டது.