மகளிர் அமைப்புக்கள்: சுவாராமை மருட்டுவதை நிறுத்துங்கள்

ஆண் பெண் சம நிலைக்குப் போராடும் JAG என்ற கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராமை அரசாங்கம் ‘தேர்வு செய்து அச்சுறுத்துவதை’ சாடியுள்ளது.

சுவாராமின் தகுதி மீதும் அதன் நிதி வளங்கள் மீதும் அண்மைய காலமாக தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

“கடந்த மூன்று மாதங்களில் சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம்  மற்றும் இதர ஐந்து அரசாங்க அமைப்புக்கள் சுவாராமை விசாரிக்கத் தொடங்கியுள்ளன,” என்று பெண்கள் உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்புக்களின் கூட்டணியான  JAG இன்று விடுத்த அறிக்கையில் கூறியது.

“ஸ்கார்ப்பின் விவகாரத்தில் சுவாராம் பல தகவல்களை வெளியிட்டுள்ள வேளையில் அந்த விசாரணைகள் நடத்தப்படுவது குறித்து அனைத்துலக பொது மன்னிப்புக் கழகம் கூட கேள்வி எழுப்பியுள்ளது. இது வழக்கமான விசாரணை அல்ல.”

“அந்த அமைப்பையும் அதன் அதிகாரிகளையும் மிரட்டுவதற்கும் மற்ற அமைப்புக்களை அச்சுறுத்துவதற்கும் தனது அதிகாரங்களை பயன்படுத்துவதை” அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் எந்த விசாரணையும் “தொழில் ரீதியாகவும் பாரபட்சம் இல்லாமலும் முறையாகவும்  மரியாதையாகவும்” நடத்தப்பட வேண்டும்.”

“தொடரும் அந்த விசாரணைகளின் போது  JAG சுவாராமுடன் இணைந்து வேலை செய்யும் சுவாராமுக்காக போராடும்.”

இதனிடையே பல அமைப்புக்கள் சுவாராம் ‘ஒடுக்கப்படுவது’ மீது போலீசில் புகார் செய்துள்ளன.