என்எப்சிக்கு அரசு நிதி வழங்கப்பட்ட விதத்தை பிஏசி ஆராயும்

நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு(பிஏசி) அடுத்த வாரம் அதன் கூட்டத்தில் தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசனு(என்எப்சி)க்கு அரசாங்க நிதி வழங்கப்பட்ட விதத்தை ஆராயும்.

“அரசாங்க நிதி எப்படி என்எப்சிக்கு மாற்றிவிடப்பட்டது என்பதை ஆராய்வோம்”, என பிஏசி தலைவர் அஸ்மி காலிட் கூறினார்.

“எல்லாம் முறைப்படியும் (கடன்) ஒப்பந்தத்தில் கண்டுள்ளபடியும் நடந்துள்ளதா என்பதைப் பார்ப்போம்”.

இன்று பிஏசி கூட்டத்துக்குப் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்மி, அக்குழு ரிம250மில்லியன் பொதுப்பணம் வழங்கப்பட்ட முறைகளை அறிந்துகொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றார்.

“என்எப்சி பணத்தை எப்படிச் செலவிட்டது என்பதைத் தெரிந்துகொள்வதில் எங்களுக்கு நாட்டமில்லை.அது பற்றிய வழக்கு இப்போது நீதிமன்றத்தில் உள்ளது”, என்றாரவர்.

இன்றைய பிஏசி கூட்டத்துக்கு தேசிய கணக்காய்வுத் துறை அதிகாரிகள் வந்து என்எப்சி கடன்மீது தயாரிக்கப்பட்ட சிறப்பு அறிக்கையைத் தாக்கல் செய்தார்கள் என்றும் அஸ்மி கூறினார்.

அந்த அறிக்கை பற்றித் தகவலளிக்க அவர் மறுத்தார்.ஆனால், அறிக்கையின் சில பகுதிகளை மேலும் அலசி ஆராயுமாறு கணக்காய்வாளர்களைக் குழு கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

TAGS: