மஇகா-வும் மகாதீரின் The Malay Dilemma-வும்!


மஇகா-வும் மகாதீரின் The Malay Dilemma-வும்!

பிரியா: கோமாளி, எனது அம்மாவும் அப்பாவும் மஇகா-வின் கிளையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். மாற்றம் வேண்டும் என்கிறார்கள் ஆனால், அதை தேசிய முன்னணியால்தான் கொண்டு வர முடியும் என்கிறார்கள். அவர்களுக்கு எப்படி புத்தி சொல்வது?

கோமாளி: பிரியா, அவர்கள் அப்படி சொல்வதில் தவறில்லை. மாற்றம் வேண்டும் என்று ஒப்பு கொண்டதில் இருந்து அவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் செய்பவர்கள் அல்ல என்பது புரிகிறது.

உங்கள் பெற்றோர் போலவே திறமையான பலர் உள்ளனர். கடலில் மூழ்கும் போது  துரும்பைப் பிடித்துக் கொண்டு கரையேர முயல்வது முட்டாள்தனம் என்றாலும் அதுதான் வழிமுறை என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவர்களிடையே திணிக்கப்பட்டுள்ளது.

காலை முதல் மாலை வரை மின்னல் எப்எம், டிஎச்ஆர் ராகா, ஆர்டிஎம், அரசாங்க பிரச்சார செய்திகளைத் தாங்கி வரும் தமிழ், மலாய், ஆங்கில நாளேடுகள் ஆகியவை இவர்களுக்கு ஒரு பக்தியைக் கொடுக்கின்றன. அரசாங்கம் கொடுக்கும் தகவல்களை அவை அப்படியே தாங்கி வருவதால் அந்த நம்பிக்கை உண்டாகிறது. அரசாங்கம் பொய் சொல்லுமா என்ற கேள்விக்கு கூட இவர்கள் மனதில் இடமிருக்காது. தெய்வம் கை விடுமா என்ற அளவில் இவர்கள் அரசாங்கத்தின் மீது உள்ள விசுவாசத்தை மதியிலும் மனதிலும்  உணர்விலும் கொண்டுள்ளனர்.

அதிலிருந்து விடுபடுவது எளிதல்ல. இதே சூழலில் இருந்த மலாய் இனத்தைக் கண்டு விம்பிய துன் மகாதீர் 1970-இல் ‘இக்கட்டான மலாயர்’ (The Malay Dilemma)  என்ற புத்தகத்தை எழுதினார். அதில் மகாதீர்,  மலாய்க்காரர்கள் அரசாங்கத்தின் மீதும் அதை வழி நடத்திய தலைவர்கள் மீதும் கொண்டிருந்த அருவருப்பான விசுவாசத்தை வன்மையாகச் சாடினார். குட்டக்குட்ட குனிவது முட்டாள்தனம் என்றார்; உரிமை வேறு விசுவாசம் வேறு என்றார்; ஆங்கிலேயர்கள் உண்டாக்கிய அடிமைத்தனமான சிந்தனையை உடைத்தெறியச் சொன்னார். அந்த அடிமைத்தனத்தின் காரணமாகவே சீனர்கள் பொருளாத¡ரத்தை ஆட்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். அரசாங்கம் அந்தப் புத்தகத்தைத் தடை செய்தது.

1981-இல் பிரதமரான மகாதீர் தனது புத்தகத்தின் தடையை அகற்றினார். மலாய் இனத்தின் ஆதிக்கத்தை வளர்த்தார். ஆங்கிலேயர்களுக்கு அடிமையான இந்திய விசுவாசிகள் தேசிய உணர்வுகளால் உந்தப்பட்டு,  விடுதலையடைந்த மலேசிய¡வின் பல்லின கொள்கையில் நம்பிக்கை வைத்தனர். மஇகா-தான் அதன் முன்னோடி. அதில் தவறில்லை.

ஆனால் 1970 முதல் உண்டாக்கப்பட்ட இனவாத புதிய பொருளாதாரக் கொள்கையும், 1981 முதல் மகாதீரால் உண்டாக்கப்பட்ட இனவாத அரசியல் மேலாண்மையும் இந்தியர்களை அடிமைக் கலாச்சாரத்தில் தள்ளியது.  மஇகா, ஐபிஎப், பிபிபி, மக்கள் சக்தி என இத்யாதி இத்யாதி கட்சிகளுக்குத் தீனிகள் போடப்பட்டு அந்த அடிமைத்தனம் தொடர்கின்றது.

பிரியா,  2008-ஆம் ஆண்டு தேர்தலின் முடிவுகளில் ஆட்டம்கண்ட தேசிய முன்னணி இந்தியர்களை மீண்டும் கவர புதிய வகையில் கவர்ச்சிகரமாக பணத்தை செலவிட்டு அந்த அடிமைத்தனத்தைத் தொடர பெரும்பாடு பட்டு வருகின்றனர்.

நமக்குத் தேவை நாட்டு மக்கள் என்ற உரிமை; நாட்டின் பொருளாதாரத்தில் பங்கு; அடிமைத்தனத்திலிருந்து விடுதலை. இதைத் தேசிய முன்னணி கொடுக்குமா? கண்டிப்பாக கொடுக்காது. காரணம், இன அரசியல் கோட்பாட்டில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள ம.இ.கா-வால் அப்படி கேட்பது அம்னோவை எதிர்ப்பதற்கு சமமாகும். அதைக்கேட்கும் வக்கற்ற நிலையில் உள்ள மஇகா, ஐபிஎப், பிபிபி, மக்கள் சக்தி இத்யாதி இத்யாதி கட்சிகளால் அம்னோவிடம் கையேந்தவும் பிச்சையெடுக்கவும்தான் முடியும்.

மக்கள் கூட்டணி மட்டும் இந்தியர்களுக்கு உரித்தான உரிமைகளை வாரி வழங்கிவிட மாட்டார்கள். அதற்கும் போராட்டம் தேவை. ஆட்சி மாற்றம்தான் அது போன்ற போரட்டத்திற்கு வழி வகுக்கும்.

பிரியா, மாகாதீர் சொன்னதை உங்களின் பெற்றோர்களிடம் சொல்லுங்கள். “அருவருப்பான விசுவாசமும், குட்டக் குட்ட குனிவதும் முட்டாள்தனம்.”

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • citizen wrote on 29 மே, 2013, 0:03

    எடுக்க எடுக்க குறையாத அமுத சுரபிபோல், எல்லா வித இயற்கை வளங்களும் நிறைந்த நாடாக மலேசியா உள்ளதால், பி என் அரசியல் வாதிகள் எவ்வளவு பொருளாதார கொள்ளை அடித்தாலும் மலேசியா வீழ்ச்சியுராமல் நிலைத்துள்ளது இன்றுவரை. இன்றைய மலேசியா வளர்ச்சி குறித்து பெருமைப்பட ஒன்றுமில்லை. எந்த மடையன் ஆட்சியில் இருந்திருந்தாலும் இப்போதைய வளர்ச்சியை அடைத்திருக்க முடியும். அதே வேளையில் பெனாங் முதல் அமைச்சர் லிம் குஅன் எங் அல்லது செலங்கோர் முதல் அமைச்சர் காலித் இப்ராகிம் போன்று ஊழல் இன்றி, சிறந்த நிர்வாகத்தை பெற்றிருந்தால் மலேசியா இப்போதைய விட பல மடங்கு வளர்ச்சியை சிங்கப்பூர், ஹாங்காங் அளவிற்கு கண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை??
    500 பில்லின் கடனில் மலேசியா? வெட்ககேடு!!!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: