அரசாங்கம் என்ஜிஓ-களுக்கு பண உதவி செய்து வெளிநாட்டுச் செல்வாக்கைத் தடுக்க முடியும்

அரசுசாரா அமைப்புகளில் அந்நிய நாட்டுச் செல்வாக்கு ஊடுருவுவதைத் தடுக்க அரசாங்கமே பட்ஜெட்டில் என்ஜிஓ-களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று விரும்புகிறார் இப்ராகிம் அலி (சுயேச்சை எம்பி- பாசிர் மாஸ்) .

“அப்படிச் செய்தால் அவை அந்நிய நிதி உதவியை நம்பி இருக்கும் அவசியம் இருக்காது”, என்றாரவர். அவர் இன்று மக்களவையில் 2013 பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.

என்ஜிஓ-களுக்குச் செய்யப்படும் நிதி ஒதுக்கீடுகள் அவற்றின் அளவையும் உறுப்பினர் எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

மனித உரிமை என்ஜிஓ-வான சுவாராம், அதன் பணிகளுக்கு உதவியாக வெளிநாட்டு உதவி கிடைக்கிறது என்று அறிவித்ததை அடுத்து அண்மைய வாரங்களாக பல தரப்புகளிலிருந்தும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

என்ஜிஓ-களுக்கு நிதி உதவி செய்யும் வெளிநாடுகள் அரசாங்கத்தையே கவிழ்த்து விடலாம் என்று  எச்சரித்த இப்ராகிம், அரபு எழுச்சியால் மத்திய கிழக்கில் பல அரசுகள் கவிழ்ந்ததைச் சுட்டிக்காட்டினார்.

மலேசியாகினியும்கூட வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக அனைத்துலக நாணய ஊக வணிகர் சோரோஸிடமிருந்து பண உதவி பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

பெர்காசா அமைப்பின் தலைவருமான இப்ராகிம், வெளிநாடுகளிலிருந்து பண உதவி பெறும் அமைப்புகள் அது பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ளதுபோன்ற சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அப்படி ஒரு சட்டம் இருப்பது அந்நிய செல்வாக்கு நாட்டுக்குள் ஊடுருவதையும் பரவுவதையும் தடுக்கும் என்றாரவர்.