காவிரி: கிருஷ்ணாவின் கடிதத்துக்கு தமிழகத்தில் கண்டனங்கள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் கர்நாடக மாநில முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக் கூடாது என வலியுறுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருப்பது தமிழக அரசியல் தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகிவருகிறது.

தமிழக டெல்டா பகுதிகள் வறண்டு காணப்படும் நிலையில், கர்நாடகம் குறைந்த அளவிலாவது காவிரி நீரைத் தரவேண்டும் என காவிரி நதி நீர் ஆணையத் தலைவர் என்ற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த ஆணையினை கர்நாடகம் மதிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் கறாராக கூற, கர்நாடக அரசும் அதனை ஏற்றுக்கொண்டு நீரைத் திறந்துவிடத் துவங்க, அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது,

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா அங்கிருந்தபடியே பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கெனவே கர்நாடக மக்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது, அப்படியிருக்கையில் தமிழகத்திற்குத் தொடர்ந்து நீர் தரப்பட்டால் கர்நாடகத்தில் நிலை மோசமாகும், எனவே தற்போது இருமாநிலங்களையும் பார்வையிட்டு வரும் மத்திய நிபுணர் குழுவிடமிருந்து இடைக்கால அறிக்கை பெற்று தமிழகத்திற்கு நீர் மேலும் செல்வதைத் தடுக்கவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவ்வாறு ஒரு பக்கச்சார்பாக கடிதம் எழுதியிருக்கும் கிருஷ்ணா, மத்திய அரசில் அமைச்சராயிருக்கும் தகுதியினை இழந்துவிட்டார், எனவே அவரை பிரதமர் அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

அதேபோல மறுமலர்ச்சி திராவிடர் கழக பொதுச்செயலாளர் வைகோவும் கிருஷ்ணா கன்னட வெறியராகிவிட்டதாகவும், இந்திய மத்திய அரசு தமிழர் நலனை தொடர்ந்து புறக்கணிப்பதாகவும் குறைகூறியிருக்கிறார்.

ஆனால் சுவையானதொரு திருப்பமாக, நேற்று சனிக்கிழமை கர்நாடகத்தில் முழுக் கடையடைப்புப் போராட்டம் முடிவடைந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மைசூர், மாண்டியா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்திருக்கிறது.

அதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு அதிக அளவிலான தண்ணீர் வரத் தொடங்கி, இப்போது அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அம்மாநில அரசு கூடுதல் நீரைத் தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளது என செய்திகள் கூறுகின்றன.

இதனிடையே காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் எதிர் வரும் அக்டோபர் 11ஆம் நாள் புதுடில்லியில் நடைபெறவிருக்கிறது.

TAGS: