கல்வி பெருந்திட்டத்தில் – தாய்மொழிக் கல்வி ஓரங்கட்டப்படுமா?

“மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025: பன்மொழித் தன்மைக்கு இடமுண்டு, ஆனால் தாய்மொழிக் கல்வி சிதைக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சி இல்லை”

கா. ஆறுமுகம் – ஆலோசகர்,  தமிழ் அறவாரியம்

மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 (எம்இபி) “தெளிவானது, ஊக்கமானது” என்றும் அது நமது கல்வி முறையை உலகத் தரத்துக்கு உந்திச் செல்வதற்கான நோக்கத்தைக் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அது “நோக்கமில்லாத பின்விளைவுகளைக் “கவனிக்கத் தவறி விட்டது – அந்தப் பெருந்திட்டம் பன்மொழிக் கல்வியை ஓரங்கட்டி அதனை அழித்து விடும்.

பல்லினப் பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் பண்பாடுகள் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அது மருட்டலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 2006 முதல் 2010 வரைக்குமான தேசியப் பெருந்திட்டம் மற்றும் 2011-2020 வரைக்குமான வியூக இடைக்காலத் திட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், இந்தக் கல்விப் பெருந்திட்டத்தின் தொடக்க அறிக்கை பல்வகைத் தன்மைக்கும் பல்லினப் பண்பாட்டுத் தன்மைக்கும் சாதகமான விவாதங்களுக்கு இடமளித்த போதிலும், அது கூடுதலாக ஒரு மொழிக்கு மேல் கற்பதைப் பெரிதும் கட்டுப்படுத்துகின்றது.

அதன் அடிப்படை ஊகங்கள் மற்றும் அது முன்வைக்கும் மலேசிய இலட்சியம் ஆகியவை உள்ளூர் கல்வி மேம்பாடுகள், வரலாறுகள், மலேசியர்களுடைய – பல்வகைத்தன்மை, பல்லின பண்பாட்டுத் தன்மை போன்றவை மீதான அனைத்துலக அக்கறையையோ கடுமையான பரிசீலினைக்கு எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.
தனித்தன்மையும்  பேரவாவும்  கொண்ட பெருந்திட்டம். ஆனால் எத்தகைய எதிர்காலத்துக்கான திட்டங்களை அது  நிர்ணயம் செய்கின்றது?

2006 முதல் 2010 வரைக்குமான தேசியப் பெருந்திட்ட பட்ஜெட்டுக்காக  அரசாங்கம் 2006ம் ஆண்டு 23 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியது. நமது பிள்ளைகளை வட்டத்துக்கு வெளியில் சிந்திக்க வைப்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

தற்போதைய பெருந்திட்டத்திலும் அதே நோக்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது, அது முந்தைய திட்டத்தின் தோல்வியை உணர்த்துகிறது. 2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அனைத்துலக கணிதம், அறிவியல் கல்வி மீதான போக்குகளில் (TIMSS) அனைத்துலக சராசரி நிலைக்கு கீழே மலேசியா இருந்தது. 2009-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அனைத்துலக மாணவர் மதிப்பீட்டில் (ISA) ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 74 நாடுகளில் கடைசி மூன்றாவது நாடாக மலேசியா இருந்தது.

அடுத்த 13 ஆண்டுகளுக்கு மூன்று கட்டங்களாகப் பெருந்திட்டத்தை அமலாக்குவதற்குச் சிறப்பு வரவு செலவு திட்டத்தை தாம் கோரப் போவதாக துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சின் நடைமுறை, மேம்பாட்டுச் செலவுகளுக்காக 38.7 பில்லியன் ரிங்கிட்டும், எம்இபி-ன் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக 500 மில்லியன் ரிங்கிட்டும்,  உடனடி உள்கட்டமைப்புத் தேவைகளுக்குச் சிறப்பு நிதியாக மேலும் 1 பில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 40.2 பில்லியன் ரிங்கிட் – இது 2013 வரவுசெலவுத் திட்டத்தில் 16 விழுக்காடு ஆகும். சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடுகளின் பட்டியலுக்கு மலேசியாவை உயர்த்துவது அந்த 16 விழுக்காடு ஒதுக்கீட்டின் புனிதமான நோக்கமாகும்.

அரசியல் விழிப்புணர்வு மேலோங்கியுள்ள வேளையில் இந்தப் பெருந்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நமது கல்வி முறையைத் தீவிரமாக ஆய்வுசெய்ய தலைவர்கள் எண்ணம் கொண்டுள்ளதை மிகவும் பாராட்ட வேண்டும். செப்டம்பர் 11-ஆம் தேதி பிரதமரும் துணைப் பிரதமரும் அந்தப் பெருந்திட்டத்தை கோலாகலமான சடங்குகளுடன் தொடக்கி வைத்தது அதன் முக்கியத்துவத்தையும் தேவையையும் உணர்த்தியது.

அறிவாற்றல், புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றை “மையமாகக் கொண்ட புதிய பொருளாதாரத்தின் தேவைகளை நமது கல்வி முறை பூர்த்தி செய்யும் எனப் பிரதமர் தமது அறிமுக உரையில் நம்பிக்கை தெரிவித்தார். இன்னும் உருவாகாத வேலைகளுக்கு அது நமது பிள்ளைகளைத் தயார் செய்யும் என்றும் பிரதமர் நம்புகிறார். உலகளாவிய நிலையில் போட்டியிடுவதற்கு மலேசியர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெறாவிட்டாலும் இரு மொழிகளிலாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார்.

அந்த அவாக்கள் நாட்டுக்கு நல்ல சகுனங்களாகும். ஒவ்வொருவரிடமிருந்தும் மிகச் சிறந்ததை அது கோருகிறது. அந்தத் திட்டம் நடப்பு சூழ்நிலையிலிருந்து மாறுவதற்கு 11 வியூக, நடைமுறை வழிகளை அடையாளம் கண்டுள்ளது. அந்த 11 வழிமுறைகளும் – பாரபட்சமற்ற, மதிப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்குவது, ஆசிரியர் தொழிலை விருப்பமுள்ள தொழிலாக உருவாக்குவது, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் வலிமையை மேம்படுத்துவது, நவீனத் தொழில்நுட்பத்துடன் தரமான சேவையை வழங்குவது, பொது மக்களுக்குப் பொறுப்பேற்கும் வகையில் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படைத் தன்மையை அதிகரித்து செலவு செய்யும் பணத்துக்கு மதிப்புக் கொடுப்பது ஆகிய நோக்கங்களுடன்  ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

அந்த அவாக்களை நாம் பாராட்டும் வேளையில் அவை கூறப்பட்டுள்ள வகையில் மேம்படுத்தப்படும் போது அதனால் ஏற்படக்கூடிய சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை நாம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். அது நம்மை எங்கு கொண்டு செல்லும் என்பதை நாம் புரிந்து கொள்வது முக்கியமாகும்.

பல்வகைக் கல்வி முறை: பல்லினப் பண்பாட்டு நாட்டை உருவாக்குவதற்கான மதிப்புமிக்க வள ஆதாரங்கள் காணப்படவில்லை.

கொள்கை வகுப்பாளர்களுடைய எண்ணங்கள் பிளவுபட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. பிள்ளைகள் வட்டத்திற்கு வெளியில் சிந்திக்க வேண்டும் என விரும்பிய வேளையில், அவர்கள் முக்கியமானதை விட்டு விட்டனர். தொடக்க நிலையில் நமது கல்வி முறை தேசியப் பள்ளிகளையும் தாய்மொழிப் பள்ளிகளையும் கொண்டதாகும்.

சீனப் பிள்ளைகளில் 96 விழுக்காட்டினரும் தமிழ்ப் பிள்ளைகளில் 56 விழுக்காட்டினரும் முறையே சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். நாடு முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மொத்தம் மூன்று மில்லியன் மாணவர்களில்; அவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட கால் பகுதியாகும். அந்த எண்ணிக்கை தொடர்ந்து கூடி வருகிறது. குறைவதற்கான அறிகுறியே இல்லை. அத்துடன் சீன மொழி தொடக்கப் பள்ளிகளில் பயிலும் சீனர் அல்லாத மாணவர் எண்ணிக்கை 14 விழுக்காடு ஆகும். அது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த மறுக்க முடியாத உண்மைகள் இந்தப் பெருந்திட்டத்தில் நிறைவாகக் கையாளப்படவில்லை.

உண்மையில், அந்தப் பெருந்திட்டம் தேசியப்பள்ளிகளை முதல் தேர்வு பள்ளிகளாக்கும் நம்பிக்கையை மையமாகக் கொண்டிருக்கிறது. அது சீன மொழி, தமிழ் மொழி மற்றும் அரபு மொழி ஆகியவை மூன்றாவது மொழியாகக் கற்பதற்கு வழி செய்கிறது. இதனுடன் இதர உலக மொழிகளையும் கற்கலாம். அந்த வகையில் தாய்மொழிப் பள்ளிகள் பெருந்திட்டத்தில் விடுபட்டுள்ளன. ஆக, இந்தப் பெருந்திட்டத்தில் பல்வகைத் தன்மை மற்றும் பல்லினப் பண்பாட்டு தன்மை பற்றிய விவாதம் கூடுதல் மொழி தொடர்புக்கும் வர்த்தகத்துக்கும் தேவையானது என்ற வடிவத்தில் மட்டுமே காணப்படுகிறது.

கல்வி மூலம் தேசிய ஐக்கியத்தை உருவாக்கும் இலட்சியத்துக்கு விரிவான, தெளிவான சிந்தனை தேவை. தேசிய ஒற்றுமை குறித்து அல்லது கல்வி பற்றி நாம் தெளிவில்லாமல் இருக்கும் போது அதனைச் சாதிக்க முடியாது. கடந்த காலத்தில், தாய்மொழிப் பள்ளிகளை இதர பல அம்சங்களுடன் மக்களைப் பிரிப்பதற்கான ஒரு கருவியாக  பிரிட்டிஷ்காரர்கள் கருதினார்கள். அத்தகைய வாதங்கள் இருந்த போதிலும் பல்லின அரசியல் வடிவமைப்புடன் சுயாட்சி கோருவதில் நாடு ஒன்றுபட்டிருந்தது.

பல சோதனைகளைக் கடந்து பன்மொழி, பல்லினப் பண்பாடு, பல சமய நாடு என்னும் முறையில் நிலைத்திருக்கிறோம். அந்த நடைமுறைகளில் நம்மை நாம் வளப்படுத்திக் கொண்டதோடு அவற்றை நமது வலிமையாகவும் மாற்றிக் கொண்டோம். வெளியுலகிற்கு நம்மை அப்படித்தான் அறிமுகம் செய்து கொள்கிறோம். அதனை நமது தேசிய சுற்றுலாப் பிரச்சார நடவடிக்கைகளில் காண முடியும்.

அந்த வலிமைகளின் சித்தாந்தங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தை நாம் உச்ச சட்டமாக அங்கீகரித்துள்ளோம். கடந்த 55 ஆண்டுகளாக அடைந்துள்ள வளர்ச்சி பொறாமையூட்டுவதாக உள்ளது. சகிப்புத் தன்மையும் ஏற்றுக் கொள்ளும் உணர்வும் வளர்த்த சக வாழ்வு மரியாதைக்கும் கௌரவத்துக்கும் வழி வகுத்துக் கொடுத்துள்ளது. ஆனால், நடைமுறையில் நாடு என்பது ஒரே அடையாளத் தன்மையைக் கொண்டது என்ற கோட்பாடு பொய்யான தோற்றம் என்பது நிருபிக்கப்பட்டு விட்டது.

இனங்கள் ஒன்றாக்கப்படுதல் என்பது இனிமேலும் மலேசியாவுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியாது. அதனை வலியுறுத்தும் யாரும் இந்த நவீன மலேசிய நாட்டில் உணர்ச்சிகளைக் கிளறி விடுபவர் என்றாவார். அத்துடன் புதிய தொடர்புத் தொழில் நுட்பங்கள் பெருகி விட்ட இந்தக் காலக்கட்டத்தில் அது சாத்தியமும் அல்ல. நமது சுய அடையாளங்களை இழக்கக் கூடும் என்ற அச்சத்தைப் புதைப்பதற்கான நேரம் வந்து விட்டது.

மலாய் மொழி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பேசப்படுகின்றது. நாம் உலகுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால் ஆங்கில மொழியும் நமது வாழ்வில் ஊடுருவியுள்ளது. அப்படி இருக்கும் போது, ஒரே அடையாளத்தைக் கொண்ட நாட்டை உருவாக்கும் பாதையில் நாம் ஏன் செல்ல வேண்டும்?

பல்லினப் பண்பாட்டுத் தன்மை மக்களுக்குப் பல வழிகளில் வாய்ப்புகளையும் வசதிகளையும் விரிவுபடுத்தும் என்பதற்கு உலகம் முழுவதும் போதுமான அனுபவங்கள் உள்ளன. இன அடையாளங்கள் வளருவதை நிராகரிக்கும் கட்டுப்பாடான கொள்கைகளுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. தங்கள் வம்சாவளி, பண்பாடு, சமயம், மொழி ஆகியவற்றில் பெருமை கொள்வதற்கு சொந்த உணர்வு தேவை என மக்கள் எண்ணுகின்றனர்.

மனுக்குல முன்னேற்றத்தின் அடிப்படை அம்சங்கள் அவை. அவை மாற்றிக்கொடுக்க இயலாதவை. மலேசியாவில் நமது சொந்த வாழ்நாளில் அது நிகழ்வது நமக்கு அதிர்ஷ்டமாகும். ஒரே அரசியல் நாட்டுக்குள் காணப்படும் ஒத்துழைப்பும் அமைதியான சக வாழ்வும்  உலகிற்கு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும். தேசிய அடையாளம் என்பது, ஓரே இனப் பண்பாட்டு அடையாளம் என்று பொருள்படத் தேவை இல்லை என்பதை நாம் மெய்பித்துக் கொண்டிருக்கிறோம்.

 

பெருந்திட்டம் கண்மூடித்தனமானதா?

பன்மொழித் தன்மைக்கு இடமுண்டு, ஆனால் தாய்மொழிக் கல்வி சிதைக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சி மனதார செய்யப்படவில்லை.
இதன் அடிப்படையில், பன்மொழித் தன்மை, பல்லினப் பண்பாட்டுத் தன்மை ஆகியவற்றை தவிர்க்கும்  இக்கல்விப் பெருந்திட்டத்திற்கு கடுமையான எதிர்க்கருத்து தெரிவிக்க வேண்டியுள்ளது.

வெவ்வேறு சமூக-பொருளாதார, சமய, இன வம்சாவளிப் பின்னணிகளைக் கொண்ட  மாணவர்களுக்கு இடையில் பிணைப்புக்கள் இயற்கையாகவே பள்ளிக்கூடங்களில் ஏற்படுவதற்காக தேசியப் பள்ளிகளை விரும்பப்படும் பள்ளிகளாக மாற்றுவதே அதன் இறுதி குறிக்கோள் என்று அந்தப் பெருந்திட்டம் கூறுகிறது. எல்லா இனங்களையும் சார்ந்த பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்குச் செல்லுமாறு செய்வதின் மூலம் தேசிய ஒற்றுமையை அடைவதே அதற்கான காரணமாகும்.

ஆனால், தாய்மொழிப் பள்ளிகளில் கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்பதே நடைமுறை உண்மை நிலையாகும். (சீனப் பிள்ளைகளில் 96 விழுக்காட்டினரும் தமிழ்ப் பிள்ளைகளில் 56 விழுக்காட்டினரும் முறையே சீன, தமிழ்ப்பள்ளிகளில் கல்வி கற்கின்றனர்) அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்கள் பண்பாட்டுப் பாரம்பரியம், அடையாளம், கௌரவம் ஆகியவற்றை வளர்க்கவும் பாதுகாக்கவும் தாய்மொழிக் கல்வியைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்க விரும்புகின்றனர். எவரும் அது பிளவுபடுத்தக் கூடியது என்றோ, எதிர் எதிர்ப் போக்கை வளர்க்கும் என்றோ அதனை நிராகரிக்க முடியாது.

இனரீதியாக எதிர் எதிர்ப்போக்கு மீதான உண்மை நிலைகள் என்ன என்பதை நாம் அறியாதவர்களா? பொருளாதார நடவடிக்கைகளுடன் இனத்தை அடையாளம் காண்பதை ஒழிக்கும் பொருட்டு வறுமையைப் போக்கவும் பொருளாதார மறுசீரமைப்புக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் வழியாக 1971-ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளும் பாரபட்சமான கொள்கைகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

இரண்டாவது மலேசியத் திட்டம் முதல் கடந்த 40 ஆண்டுகளில் இந்த நாடு இனவாத அமைப்பு முறைக்கு உட்படுத்தப்பட்ட  மலாய் ¨நாடாக தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளது. ஏழ்மையில் உள்ள பூமிப்புத்ராக்களுக்கும் பயன் அளிக்கும் நோக்கம் கொண்ட கோட்டா என்ற அளவு முறை ஏழ்மையில் உள்ள மலேசியர்களுடைய தேவைகளைப் புறக்கணிக்கிறது. வேற்றுமை காணல்தான் இன எதிர் எதிர்ப் போக்கின் ஊற்றுக் கண்; தாய்மொழிக் கல்வி அல்ல.

மலேசியாவில் நமது வாழ்வில் இன அடையாள அரசியல் உள்ளார்ந்த அம்சமாகும். கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தில் பெரும்பான்மை இன வம்சாவளி சமூகத்தின் இன, சமய மற்றும் மொழி அடையாளத்தைத் திட்டவட்டமாக அங்கீகரிக்கும் பதினேழு பிரிவுகளும் மூன்று பட்டியலும் காணப்படுகின்றன. அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த நாம் தயாராக இல்லாத வரையில், அதில் அடங்கியுள்ள அடையாளம் தொடர்பான அனைத்து சொற்களையும் அகற்றும் வரையில் இன, சமய மற்றும் மொழி அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள அடையாளம் இங்கு நிலைத்திருக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மலேசியாவின் கவர்ச்சிகரமான, பண்பாட்டு ரீதியில் வளமான அனைத்தையும் அது அழித்து விடும். குளவிக் கூட்டில் நமது கையை வைப்பதற்கு அது இணையாகும்.

ஆகவே, அரசாங்கம் தாய்மொழிக் கல்வி முறை மீது கவனம் செலுத்தாமல் அதன் பெருந்திட்டத்தில் அதனைப் புறக்கணித்துள்ளது, அந்தப் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுடைய அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். உண்மையில், அது நமது அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாகும். தொடக்கப்பள்ளி நிலையில் தாய்மொழிக் கல்வியே குழந்தைகளின் முழுமையான மேம்பாட்டுக்கு சிறந்த கற்றல் முறை என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

படைப்பாற்றல் மிக்க, சிந்திக்கக் கூடிய, உலக அளவில் போட்டியிடக் கூடிய பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரது இலட்சியத்துக்கு ஏற்ப அவ்வாறான தகுதி உடைய பிள்ளைகளுக்கு அரசாங்கம் சிறந்ததை வழங்க வேண்டும்.

அரசாங்கம் அதன் கொள்கைகளில் வேண்டியதைத் தேர்வு செய்யும் போக்கை பின்பற்றக் கூடாது. தமிழ்ப்பள்ளி அல்லது சீனத் தொடக்கப் பள்ளி ஒன்றில் தனது மனிதவள மூலதனத்தை பெற ஒரு குழந்தை விரும்பினால் அது இன ஒற்றுமைச் சீர்குலைவு என கற்பனையாக உருவாக்கிக் கொண்ட அச்சத்தினால் அந்தக் குழந்தையின் முன்னேற்றத்தை நாம் புறக்கணிக்கப் போகிறோமா? உண்மையில், அவ்வாறு புறக்கணிப்பதும் ஓரங்கட்டுவதும் மட்டுமே இனங்களுக்கு இடையில் பெரும் ஒற்றுமையின்மையும் பிளவையும் ஏற்படுத்தும்.

மலேசியக் கல்விப் பெருந்திட்டம்: பல்வகைத் தன்மை திட்டங்கள், ஆனால் ஓரினத் தன்மையை வளர்க்கிறது.

2004-ஆம் ஆண்டுக்கான ஐ.நா மேம்பாட்டு அறிக்கை பன்மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. ஓரினப் பண்பாட்டு அடையாளத்தைத் திணிக்கும் முயற்சிகள் சமூக பதற்ற நிலைக்கும் பூசல்களுக்கும் வழி வகுக்கும் என அது வாதிடுகிறது. அது யுனெஸ்கோவின் மும்மொழிக் கொள்கையைத் தீர்க்கமாக எடுத்துரைத்துள்ளது: ஓர் அனைத்துலக மொழி, ஒரு பொது மொழி மற்றும் தாய்மொழி ஆகியவையே அவை. அம்மூன்று மொழிகளும் அதிகாரத்துவ மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.

மலேசியாவில், நாம் அந்த அளவுக்குச் செல்ல வேண்டியதில்லை. தாய்மொழிக் கல்விக்கான உரிமையை அங்கீகரித்து நடப்பில் உள்ள தாய்மொழிக் கல்வி முறையை ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டு, அது உயர்வதற்குப் போதுமான நிதியும் ஆதரவும் வழங்க வேண்டும். நமது நாட்டின் மனிதவள மூலதன மேம்பாட்டின் நிமித்தம் நாடு தாய்மொழிக் கல்வி முறையைப் புறக்கணிக்க முடியாது.  அத்தகைய நோக்கம் நிச்சயமாக குறுகிய நோக்கத்தைக் கொண்டது என்பதோடு அது பேரழிவைக் கொண்டு வருவதற்கு எளிய வழியைக் காட்டுவதாகத் தெரிகிறது.

மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தை ஆய்வு செய்யும் போது நாம் நமது ஊகங்களையும் பாரபட்சங்களையும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என நான் எண்ணுகிறேன். அரசாங்கத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்வரும் கடினமான கேள்விகளைப் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும் அல்லது அவற்றைப் பொது விவாதத்திற்கு விட வேண்டும்:

அ. மலேசியாவில் கூடுதலான படைப்பாற்றலும் துடிப்பும் மிக்க மனிதவள மூலதனத்தை உருவாக்கும் தீவிர நடவடிக்கை என்பது தாய்மொழிக் கல்வி முறை இறுதியில் மடிந்தே ஆக வேண்டும் என்ற அவசியத்தைக் கொண்டிருக்க வேண்டுமா?

ஆ. உலகத் தரத்திலான மாணவர்களை உருவாக்குவதற்கான படைக்கும் திறமையுள்ள பன்மொழிக் கல்வி முறையை உருவாக்குவது என்ன அவ்வளவு முடியாத காரியமா ?

இ. அரசமைப்புச் சட்ட வடிவமைப்புக்குள் இயங்கும் போது, மலேசியாவுக்கும் அதன் குடி மக்களுக்கும் என்ன இலட்சியத்தை மலேசியக் கல்விப் பெருந்திட்டம் வழங்குகின்றது?

ஈ. பன்மொழித் தன்மை, பல்லினப் பண்பாட்டுத் தன்மை ஆகியவை கொண்டு வரக் கூடிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நன்மைகள் பற்றி நாம் தீவிரமாக பரிசீலினை செய்துள்ளோமா?

– முடிவு

TAGS: