கர்நாடகத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறியதால், கர்நாடக அரசு நீதீமன்ற அவமதிப்புக் குற்றம் புரிந்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

அந்த உத்தரவை செயல்படுத்தத் தவறிய கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, தலைமைச் செயலர் உள்பட 7 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது.

கடந்த மாதம் 19-ம் தேதி பிரதமர் தலைமையில் நடந்த காவிரி நதிநீர் ஆணையம், தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை தினசரி விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. அதை கர்நாடகம் ஏற்க மறுத்ததால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழகம்.

கடந்த மாதம் 28-ம் தேதி இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், காவிரி ஆணையம் உத்தரவிட்டபடி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தெரிவித்தது. அதைத் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகம், கடந்த திங்கட்கிழமை இரவுடன் தண்ணீர் திறப்பதை நிறுத்திவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு, கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறிய கர்நாடக முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அழைத்து, வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்ததற்காக அவர்களைத் தண்டிக்க வேண்டும் என தமிழகம் கோரியுள்ளது.

மேலும், ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டபடி அக்டோபர் 15 வரை தினசரி விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடவும், இடையில் தண்ணீர் விடுவதை நிறுத்தியதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் கோரியுள்ளது.

TAGS: