தமிழகத்துக்கு, ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்து விட முடியாது : கர்நாடகா

புதுடில்லி: “தமிழகத்துக்கு, ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரியில் திறந்து விட முடியாது” என, கர்நாடகா, பிடிவாதமாக மறுத்து விட்டது.

“தமிழகத்துக்கு, 8.8 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்” என்ற, காவிரி கண்காணிப்பு குழு தலைவரின் உத்தரவை துச்சமாக மதித்து வெளிநடப்பு செய்து விட்டது. இதனால், டில்லியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்ற கண்காணிப்பு குழுக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

கடந்த மாதம், 19ம் தேதி நடந்த, காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில், “தமிழகத்துக்கு, காவிரியில், 9,000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும்” என, பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டார்; அதை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது. இதையடுத்து, வேறு வழியின்றி கடந்த மாதம் 20ம் தேதி, கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட்டது.

வரும், 15ம் தேதி வரை கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வரும் என தமிழக தரப்பில், எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென இம்மாதம் 8ம் தேதி இரவே, கிருஷ்ணராஜ சாகர் அணையின் மதகுகளை கர்நாடக அரசு மூடியது. தமிழகத்துக்கான தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால், கர்நாடக முதல்வர் மற்றும் அம்மாநில அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பான அமைப்புகளில் ஒன்றான, காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்பதை இறுதி செய்ய இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்து. வறட்சிக் காலங்களில் காவிரி தண்ணீரை தமிழகமும் கர்நாடகமும் எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளை ஆராய்ந்து அதன்படி தண்ணீரின்  அளவை நிர்ணயம் செய்து முடிவெடுக்க வேண்டியது கண்காணிப்பு குழுவின் கடமை. இந்தக் குழு சொல்லும் தண்ணீரின் அளவையே பிரதமர் ஏற்று உத்தரவாக பிறப்பிப்பதாக இருந்தது. ஆனால், அனைத்துமே நேற்று முற்றிலுமாக பொய்த்துப் போனது.

டில்லி, ஷ்ரம் ஷக்தி பவனில் மதியம், 3:00 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டம், ஒரே ஒரு மணி நேரத்தில் முடிவுக்கு வந்து விட்டது. முதல் ஆளாக, கர்நாடகா தரப்பு பிரதிநிதிகள் அவசர அவரமாக வெளியேறினர். இவர்கள் வெளியேறிய வேகமே கூட்டம் தோல்வியில் முடிந்ததை சூசகமாக உணர்த்தியது.

TAGS: