சிலாங்கூரில் மஇகா 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகளைக் கொண்டுவரும் என்கிறார் பழனி

எதிர்வரும் பதின்மூன்றாவது பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநில தேசிய முன்னணிக்கு மஇகா 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகளைக் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜி. பழனிவேல் கூறியுள்ளார்.

இந்திய சமூகத்தின் நலனுக்காக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ள பல அணுகூலங்களைத் தொடர்ந்து, மேற்கண்ட வாக்குகளை கொண்டுவர முடியும் என்பதில் மஇகா உறுதியாக இருப்பதாக அவர் சொன்னதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னும் அதிகமான சலுகைகள் அறிவித்தால் சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் ஆதரவு 70 விடுக்காட்டிக்கும் கூடுதலாக கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘சிலாங்கூர் மாநிலத்தை எதிர்கட்சியிடமிருந்து மீட்பதற்கு இதுவும் மிகவும் முக்கியம்’ என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு ரிம்பா ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது கட்சியிலுள்ள 4 லட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கையை 5 லட்சமாக உயர்த்துவதிலும் மஇகா தீவிரம் காட்டும் என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே, இன்னும் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் ரிம்பா ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு பிரதமர் நஜிப் 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் துறை அமைச்சருமான அவர் மேலும் சொன்னார்.