டிபிகேஎல் கேமராக்களில் பெரும்பாலானவை பழுதடைந்தவை

கோலாலம்பூரில் போக்குவரத்தைக் கண்காணிக்க ரிம 366 மில்லியன் செலவில் பொருத்தப்பட்ட கேமராக்களில் பாதிக்கு மேற்பட்டவை சரியாக வேலை செய்வதில்லை என்று 2011 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது.

போக்குவரத்து நிலவரத்தைக் கண்காணிக்க 255 சிசிடிவி கேமராக்களும் விபத்துகளைக் கண்டதும் தானாகவே தகவல் சொல்ல 728 கேமராக்களும் பொருத்தப்பட்டன.

இந்த கேமராக்கள் வழி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கோலாலும்பூர் மாநகராண்மைக் கழகம் (டிபிகேஎல்) அதன் மின் தகவல் பலகைகளுக்கும் அழைப்பு மையங்களுக்கும் போக்குவரத்து நிலவரம் பற்றிய தகவல்களை அனுப்பி வைக்கும்.

ஆனால், கணக்காய்வு செய்யப்பட்டதில் 2009 ஜனவரிக்கும் 2011 ஆகஸ்ட்டுக்குமிடையில் 51 விழுக்காட்டிலிருந்து 57 விழுக்காடு வரையிலான சிசிடிவி கேமிராக்கள் செயல்படுவதில்லை என்று தெரிய வந்தது. விபத்துகளைக் கண்டு தகவல் தெரிவிக்க அமைக்கப்பட்ட கேமிராக்களில் 83.9 விழுக்காடு வேலை செய்யவில்லை.

கேமிராக்களில் பல காலவதியானவை என்றும் அவற்றுக்கு உபரி பாகங்கள் கிடைப்பதில்லை என்றும் டிபிகேஎல் கூறியதாக தலைமைக் கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அக்கருவிகள் அடிக்கடி சேதப்படுத்தப்படுவதாகவும் களவுபோவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: