ஏஇஎஸ் பற்றி விளக்கம் பெற பினாங்கு அரசு விருப்பம்

பினாங்குக்குத் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) பற்றி விளக்கம்  தர என்று போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு மாநில அரசு  அழைப்பு விடுத்துள்ளது.

நேற்றைய மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அதற்கான முடிவு செய்யப்பட்டதாக ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

“ஏஇஎஸ் மீது மாநில அரசுக்கோ, ஊராட்சி மன்றங்களுக்கோ இன்னும் நம்பிக்கை வரவில்லை.  அதனால்தான் இம்முடிவை எடுத்தோம்” , என்று ஊராட்சி, போக்குவரத்து, சுற்றுச் சூழல் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினரான செள கூறினார்.

சந்திப்புக்குப் பின் தீர்மானிக்கப்பபடும்

செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கில் போக்குவரத்துக் குற்றங்களைக் கண்காணிக்கும் அம்முறையைச் செயல்படுத்துமுன்னர் அத்திட்டம் பற்றி மாநில அரசு மேலும் தெரிந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.

அம்முறை ஏடிஇஎஸ் சென். பெர்ஹாட், பேட்டா தெகாப் சென்.பெர்ஹாட் ( ATES Sdn Bhd., Beta Tegap Sdn Bhd)ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதாகவும் ரிம300 சம்மனில் ஒரு பகுதி அவற்றுக்குச் செல்லும் என்றும் தகவல் வெளியானதை அடுத்து ஏஇஎஸ் முறை மீது சர்ச்சை எழுந்துள்ளது.

இப்போதைக்கு கிள்ளான் பள்ளத்தாக்கிலும் பேராக்கிலும் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில் 14 ஏஇஎஸ் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. 18 மாதங்களில் நாடு முழுக்க மேலும் 831கேமராக்களைப் பொருத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

“போக்குவரத்து அமைச்சுடன் சந்திப்பு நடந்த பின்னர் மாநில அரசு  அம்முறையை அமல்படுத்துவது பற்றி முடிவெடுக்கும்”, என்று பினாங்கு டிஏபி தலைவருமான செள கூறினார்.

TAGS: