எல்லாவகை பள்ளிகளையும் சமமாகக் கருத வேண்டும்

அரசாங்கம், எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் நிதி உதவி வழங்க வேண்டும் என்று கூறும் அரசுசார்பற்ற அமைப்பான ப்ரோஹாம் (Proham), தாய்மொழி பள்ளிகளோ, கிறிஸ்துவ சமயக் குழுவினர் நிறுவிய பள்ளிகளோ, இஸ்லாமியப் பள்ளிகளோ அவற்றுக்கிடையில் வேற்றுமை பாராட்டக் கூடாது என்று வலியுறுத்துகிறது.

“கல்வி அடிப்படை மனித உரிமையாகக் கருதப்பட வேண்டும். அதை உறுதிப்படுத்துவது கல்வி அமைச்சரின் கடமையும் கட்ப்பாடுமாகும்.

“எனவே, அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் அவற்றுக்கிடையே பாகுபாடு காண்பிக்கக்கூடாது”, என்று ப்ரோஹாம் துணைத் தலைவர் ஹம்டான் அட்னான்(இடம்) ஓர் அறிக்கையில் கூறினார்.

ப்ரோஹாம் என்பது மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர்களால் அமைக்கப்பட்டு அவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பாகும்.

2011 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில், ஜோகூரில் அரசாங்க-உதவி பெறும் 24 இஸ்லாமிய சமயப் பள்ளிகள் மோசமாக நிர்வகிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருப்பதன் தொடர்பில் ஹ்மடான் அவ்வாறு கூறினார்.

“ஜோகூரில் அரசாங்க-உதவி பெறும் 24 சமயப் பள்ளிகள் சமூக மண்டபங்களிலும் தொழுகை இல்லங்களிலும் கடைகளிலும் இயங்கி வருவதையும் மற்றவை இன்னமும் பழுதடைந்த கட்டிடங்களிலிருந்து செயல்பட்டு வருவதையும் அறிந்து ப்ரோஹாம் ஆழ்ந்த கவலை கொள்கிறது”, என்றாரவர்.

தேசிய பள்ளிகளுக்கு முழு நிதி யுதவி கிடைப்பதையும் தாய்மொழிப் பள்ளிகள், கிறிஸ்துவச் சமயக் குழுக்களால் நடத்தப்படும் பள்ளிகள், இஸ்லாமிய சமயப் பள்ளிகள் ஆகியவை தேசிய வகைப் பள்ளிகளாகக் கருதப்பட்டாலும் அவற்றுக்கு பகுதி நிதியுதவிதான் கிடைக்கிறது  என்பதையும் ஹம்டான் சுட்டிக்காட்டினார்.

எல்லாப் பள்ளிகளுமே அடிப்படை வசதிகளைப் பெற்று மாணவர்கள் கல்விகற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுக்க அரசாங்கம் அவற்றுக்கு முழு-உதவி அளிக்க வேண்டும் என்றவர் பரிந்துரைத்தார்.

புதிய கல்வி செயல்திட்டம் எல்லாப் பள்ளிகளும் போதுமான நிதியை சம அளவில் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஹம்டான் கூறினார்.