ஜொகூர் BN-ஐ நடுங்கவைக்கும் அன்வார்!

மக்கள் கூட்டணி அடுத்த ஆட்சியை அமைப்பதற்கு சபா மக்கள் தயாராக உள்ள அதேவேளையில், வருகின்ற தேர்தலின்போது ஜொகூர் பிஎன் நிச்சயமாக ஆட்டங்காணும் என எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

(காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்)

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜொகூர், ஸ்கூடாயில் நடைபெற்ற மக்கள் கூட்டணியின் சொற்பொழிவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுமார் 2000-க்கும் அதிகமான ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டை திவாலாக்கி விடுவார்கள் என்று செல்லும் இடமெல்லாம் பிரதமர் நஜீப் கூறி வருவது வேடிக்கையாக இருப்பதாக கூறிய அன்வார், தாம் நஜீப்பை பலமுறை நேரடி விவாதத்திற்கு அழைத்தாகவும் ஆனால் அவர் அதற்கு பதில் கூறாமலே நழுவிச் சென்றுவிடுவதாகவும் சொன்னார்.

இனவாதம், ஊழல் மிகுந்த அரசியல் போதும். இது மாற்றத்துக்குரிய நேரம் என்று பலத்த கரவொலிக்கு மத்தியில் கூறிய அன்வார், மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகள் அனைத்துக்கும் உடனடியாக தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

எதிர்காலத்தில் நாடு வெற்றிப்பாதையில் செல்வதற்கும் நம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கும் மக்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறிய அவர், ஊழல் மிகுந்த தேசிய முன்னணி அரசாங்கத்தை புறக்கணிப்போம் என்றார்.

இச்சொற்பொழிவு நிகழ்வில் ஜசெக தேசியத் தலைவர் லிம் கிட் சியாங், ஜொகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயகுமார், சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் மற்றும் பினாங்கு மாநில நாடாளுமன்ற உறுப்பினர் லிம் சோங் தோங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.