பெங்கோக்கில் அல்டான்துன்யா பற்றி முன்னாள் ஐஜிபி மூசா பேசமாட்டார்

போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரலாக இருந்து பணி ஓய்வுபெற்ற மூசா ஹசானின் பெங்கோக் செய்தியாளர் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக தாய்லாந்தின் வெளிநாட்டுச் செய்தியாளர் மன்றம் (எப்சிசிடி) வெளியிட்ட அறிவிக்கை கூறுகிறது.

அச்செய்தியாளர் கூட்டம் பற்றி கடந்த வாரம் இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த அறிவிப்பு,  மூசா அக்கூட்டத்தில் அல்டான்துயா கொலை பற்றிப் புதிய தகவல்களை வெளியிடுவார் என்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால், நேற்று மலேசியாகினி மூசாவைத் தொடர்புகொண்டு பேசியபோது அவர் மறுத்தார்.

“எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. கூட்டத்துக்கான ஏற்பாடு எதனையும் நான் செய்யவில்லை”, என்று சுருக்கமான தொலைபேசி உரையாடலில் மூசா கூறினார்.

இன்று காலை எப்சிசிடி இணையத்தளத்தில் இடப்பட்டிருந்த அறிவிக்கை, அந்நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது என்று கூறி இன்னொன்றையும் குறிப்பிட்டிருந்தது: “இது எப்சிசிடி ஏற்பாடு செய்த நிகழ்வல்ல. நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர்களே அது இரத்தானதற்குப் பொறுப்பு”.

பெங்கோக்கில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவரை மலேசியாகினி தொடர்புகொண்டபோது அந்நிகழ்வு திடீரென்று இரத்தானதாகவும் அது பற்றிய அறிவிக்கை மன்றத்தின் இணையத்தளத்தில் இடப்படும் என்றும் தெரிவித்தார்.

“என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், எப்சிசிடி இணையத்தளத்தில் மன்றத்தைத் தவிர வேறு யாரும், உறுப்பினரோ, உறுப்பினர்-அல்லாதாரோ அறிவிப்பு எதனையும் வெளியிட வழியில்லை”, என்று பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த அச்செய்தியாளர் தெரிவித்தார்.

‘விவகாரமான விசயம்’

தாய்லாந்தில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர், அந்நிகழ்வு “விவகாரமான விசயம்” என்பதால் மூசா அதில் கலந்துகொள்ள மாட்டார் என்று எப்சிசிடி பிரதிநிதி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

ஆனால், அதில் எது “விவகாரமானது” என்பதை அவர் விளக்கவில்லை.

பெங்கோக்கில் உள்ள மற்ற செய்தியாளர்களும், மலேசியாகினி தெரிவிக்கும்வரை, அந்நிகழ்வு இரத்தானது  பற்றி அறிந்திருக்கவில்லை.

மங்கோலியாவைச் சேர்ந்த அல்டான்துயா, 2006 அக்டோபர் 18-இல்- கொல்லப்பட்டார். அப்போது மூசா போலீஸ் தலைவராக பணி உயர்வு பெற்று ஐந்து வாரங்கள் ஆகியிருந்தன.

அவரைக் கொன்றதாக அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப் அவ்துல் ரசாக்கின் முன்னாள் மெய்க்காவலர்கள் இருவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவ்விருவரும் குற்றவாளிகளே என்று நிரூபிக்கப்பட்டு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அவர்கள் செய்த மேல்முறையீடு இம்மாதம் விசாரணைக்கு வருகிறது.

கொலைக்கு உடந்தை என்று நஜிப்பின் நெருங்கிய நண்பரும், தற்காப்பு விவகார ஆய்வாளருமான அப்துல் ரசாக் பாகிண்டாமீதும் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், அவர் எதிர்வாதம் செய்யுமாறு அழைக்கப்படாமலேயே குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பிரதமர் நஜிப், தமக்கு அல்டான்துயாவைத் தெரியாது என்று அடியோடு மறுத்துள்ளார். நஜிப்புக்குக் கொலையில் தொடர்பில்லை என்று மூசா, மே மாதம் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் வலியுறுத்தி இருந்தார்.