அம்பிகா மக்கள் வீரர் ஆனால் அரசியல்வாதி அல்ல

கெடாவில் நேற்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் தலைப்பு ‘மக்களுடன் டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசான்’  ( Datuk Ambiga (Sreenevasan) Bersama Rakyat) என்பதாகும். அது ஒர் அரசியல் கூட்டம் போலத் தோற்றமளித்தது. ஆனால் அந்தத் தோற்றத்தை மறுத்த அம்பிகா “நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல” என்றார்.

“நாங்கள் பாரிசான் நேசனலுக்கோ பக்காத்தான் ராக்யாட்டுக்கோ போராடவில்லை. நாங்கள் உங்களுக்காக போராடுகிறோம். உங்கள் வாக்குகளை அர்த்தமுள்ளதாக்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் வாக்குகளின் மதிப்பை அவர்கள் திருடாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்.”

“யார் அதிகாரத்துக்கு வந்தாலும் அவர்கள் நன்றாக இயங்கா விட்டால் ஐந்து ஆண்டுகளில் அவர்களை அகற்றும் ஆற்றல் நமக்குத் தேவை,” என பாயா புசாரில் இந்தியர்கள் பெரும்பான்மையாக இருந்த கூட்டத்தில் அவர் கூறிய போது பலத்த கைதட்டல் எழுந்தது.

“பெர்சேயை ( தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பு) அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் முடிந்து விட்டன. உலகில் மிகவும் நீண்ட கால ஆட்சி இதுவாகும். நமது அரசியல்வாதிகளைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டிய கால கட்டம் வந்து விட்டது.”

கூலிம் ஹிண்ட்ராப் தலைவர் எம் அசோகனும் இதர அரசு சாரா அமைப்புக்களும் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்தில் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

ந்தக் கூட்டத்தில் அம்பிகாவுடன் கெடா ஆட்சி மண்ற உறுப்பினர் ஆயிஷா கசாலி, சிலாம்பாவ் சட்ட மன்ற உறுப்பினர் எஸ் மணிக்குமார், பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன், கெடா செனட்டர் சைபுல் இட்ஸ்காம், சுவாராம் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல், நியாட் எனப்படும் தேசிய இந்தியர் நடவடிக்கைக் குழுத் தலைவர் தஸ்லீம் முகமட் ஆகியோரும் பேசினார்கள்.

விளக்கக் கூட்டங்களை நடத்தி வரும் சிந்தியா ‘ஸ்கார்ப்பின் ஊழல்’ குறித்து விவரமாக எடுத்துரைத்தார்.

மோசடிகளை முறியடிக்க அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்

கோலாலம்பூரிலிருந்து மாலை 4 மணி வாக்கில் அந்த இடத்தைச் சென்றடைந்த அம்பிகாவுக்கு வீரருக்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அம்பிகா தமது உரையில் வாக்களிப்பதற்குத் தங்களைப் பதிந்து கொண்டுள்ளீர்களா என அங்கிருந்த மக்களிடம் வினவினார். அதற்குக் கூட்டத்தினர் ‘ஆம் ‘ எனப் பதில் அளித்தனர்.

“நாம் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்தால் மோசடிகளை முறியடிக்க முடியும் என நாங்கள் எண்ணுகிறோம். நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.அது உங்கள் உரிமை. உங்கள் கடமை.”

இந்த ஆண்டு மனித உரிமைப் போராட்டவாதிகளுக்கு வாழ்க்கை மிகவும் சிரமமாக இருப்பதாகவும் அம்பிகா சொன்னார். பெர்சே, சுவாராம் மீது ஒடுக்குமுறைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் சுவாராமை ஆறு அரசு அமைப்புக்கள் புலனாய்வு செய்கின்றன என்றார் அவர்.

அதிகாரிகளுடைய அச்சுறுத்தலை குறிப்பாக அந்நிய நிதிகளை பெறும் அமைப்புக்கள் அரசாங்கத்தின் நிலைத்தன்மையை ‘சீர்குலைக்க’ முயலுவதாக’ குற்றம் சாட்டப்படுவதை அவர் நிராகரித்தார். அரசாங்கத் தலைவர்களை குறை சொல்வதால் அவை மிரட்டப்படுகின்றன என்றும் அம்பிகா சொன்னார்.

தேர்தல் ஆணையம் தீவிரமாக இல்லை

நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தாங்கள் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளதாக அம்பிகாவும் இதர ஐந்து பெர்சே போராளிகளும் கூறியுள்ளனர். போராளிகளுடைய நடவடிக்கைகள் காரணமாக ‘போலீஸ் கோப்பு’ இருப்பதே அதற்குக் காரணம் எனக் கூறும் குடிநுழைவுத் துறையிடம் அந்த விஷயத்தை தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் பழி போட்டுள்ளார்.

“நாங்கள் அந்நிய நிதிகளைப் பெறுவதாக அவர்கள் குறை கூறுகின்றனர். ஆனால் 40 மில்லியன் ரிங்கிட் சபாவுக்குள் (கடத்தப்பட்டது எனக் கூறப்படும்) கொண்டு வரப்பட்டது ( வணிகரான மைக்கல் சியா அம்னோவுக்காக) பற்றிய கேள்விகளுக்கு பதில் இல்லை,” என்றார் அம்பிகா.

அண்மையில் தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விரயமாக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் பற்றி எந்தப் பதிலும் இல்லை. அந்தப் பணம் நமது பிள்ளைகளின் கல்விக்கு நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்,” என்றும் அம்பிகா சொன்னார்.

அந்தப் பணம் நன்கொடையாக வந்தது என்றும் அதனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தணிக்கை செய்துள்ளது என்றும் சபா அம்னோவைத் தற்காத்துப் பேசிய கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லான் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பெர்சே விடுத்த எட்டுக் கோரிக்கைகளை அமலாக்குவதில் தேர்தல் ஆணையம் தாமதம் காட்டுவது பற்றி அம்பிகா வருத்தம் தெரிவித்தார். சீர்திருத்தங்களில் அந்த ஆணையம் தீவிரம் காட்டவில்லை என்றார் அவர்.

“மாற்றத்தைக் கொண்டு வர அது தயாராக இருப்பதாக பெர்சே எண்ணவில்லை. அது தீவிரமாக இருந்தால் வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஒத்துழைக்கும்,” எனக் குறிப்பிட்ட அம்பிகா, அந்தப் பட்டியலில் பல குளறுபடிகள் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

“ஊடகங்களை விடுவிக்கும் ‘சாதாரண’ கோரிக்கையைக் கூட தேர்தல் ஆணையம் இன்னும் நிறைவேற்றவில்லை. செய்திகளில் அனைவருக்கும் சமமான இடம் கொடுக்குமாறு ஊடக ஆசிரியர்களுக்கு தொலைபேசி வழி கேட்டுக் கொண்டால் கூடப் போதும்.”

“சாதாரணமான அதனைக் கூட செய்வதற்கு தேர்தல் ஆணையம் தயாராக இல்லாத போது தேர்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் இருப்பதை  அது எப்படி உறுதி செய்ய முடியும் ?”

 

TAGS: