உரிமைக்காக போராடியவர்கள் வெள்ளத்தில்; கண்டுகொள்ள மறுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

வன்னியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களின் கூடாரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வன்னியில் கடும் வரட்சியும் நீர்பற்றாக்குறையும் ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வரட்சியால் வறண்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுடன் மக்களுக்கும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.

குடிநீருக்கு அல்லாடிய மக்கள் பல கிலோமீற்றர் தூரம் சென்று குடிநீரை ௭டுத்தனர். அத்துடன் பல இடங்களில் பணம் கொடுத்தும் வாங்கிக் குடித்தார்கள். மழையைப் பார்த்து வரட்சிக்கு முடிவு வருகிறது ௭ன்று மகிழ்ந்த வன்னி மக்கள் தாம் வசிக்கும் தற்காலிக கூடாரங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ௭ன அனைவரும் பெரும் சிரமங்களை ௭திர்நோக்கி வருகின்றனர்.

பாதுகாப்பும் சுகாதாரமும் இல்லாத இந்தக் கூடாரங்கள் கொடிய நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடியவையாகவுள்ளன.

வன்னியில் மீள்குடியேற்றம் நடந்த பெரும்பாலான இடங்களில் வீட்டுத் திட்டங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. போருக்கு முன்னர் வீடு, வாகனம் என வசதியாக வாழ்ந்த வன்னி மக்கள் இன்று தங்குவதற்கு ஒரு வீடு இல்லாமல் தொடர்ந்தும் தற்காலிக கூடாரங்களிலேயே வசித்து வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களுக்கான வீட்டுத் திட்டத்தை வழங்குகிறோம் ௭ன்று சொல்லி சிங்கள அரசும் காலத்தைக் கடத்தி வருகிறது. இதனை சர்வேதேச சமூகமும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இம்மக்கள் படும் வேதனைகளை துடைக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ள உலகத் தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வந்தாலும் இதனை ஒருங்கிணைக்கவேண்டிய பொறுப்பில் உள்ள தலைவர்கள் செயல்பட்டதாக தெரியவில்லை. அங்கு எஞ்சி இருக்கும் மக்கள் மேலும் அழியும் வரை அவர்கள் கூட்டம் நடத்திக் கொண்டுதான் இருப்பார்கள்!!!

TAGS: