கணக்காய்வுத் துறை: 20 மில்லியன் ரிங்கிட் பாலத்துக்கு பொதுப் பணித்துறை யோசனை கூறவில்லை

அருகில் உள்ள கிராமங்களை இணைப்பதற்கான 20 மில்லியன் ரிங்கிட் பாலத்தை சரவாக் பொதுப் பணித் துறை ‘மறந்து விட்டதாக’ தனது அறிக்கை குறிப்பிடவில்லை என தலைமைக் கணக்காய்வாளர் துறை இன்று விளக்கமளித்துள்ளது.

பொதுப் பணித் துறை அந்த இணைப்புச் சாலைக்கு ‘யோசனை கூறவில்லை’ என்று மட்டுமே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அந்தத் துறை தெரிவித்துள்ளது.

ஸ்ரீ அமானில் பத்தாங் ஸ்ட்ராப் பாலத் திட்டம் எதனையும் இணைக்கவில்லை என்று 2011ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை மீது மலேசியாகினி வெளியிட்ட செய்தியை அந்தத் துறை குறிப்பிட்டது.

அந்தப் பாலத்துக்கு அருகில் உள்ள கிராமம் பெக்கான் பாந்து என்பதாகும். ஆனால் அந்தப் பாலத்தையும் கிராமத்தையும் இணைப்பதற்கு 10 கிலோ மீட்டர் நீளத்துக்கும் குறையாத சாலையை நிர்மாணிக்க வேண்டும்.

அதன் விளைவாக அந்தப் பாலம் இப்போது ஆற்றின் அடுத்த பக்கத்தில் உள்ள புதர்களுக்கே கொண்டு செல்கிறது என கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டது. அதனால் ‘உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு அந்தப் பாலம் ஊக்கமூட்டத் தவறி விட்டது’ என்றும் அறிக்கை தெரிவித்தது.

அருகில் உள்ள கிராமங்களுடனான இணைப்பு ‘மறக்கப்பட்டு விட்டது’ என மலேசியாகினி அந்த அறிக்கையை  செய்தியாக வெளியிட்டிருந்தது. ஆனால் தலைமைக் கணக்காய்வாளர் துறை அந்த வார்த்தைகளை ஒப்புக் கொள்ளவில்லை.

 

TAGS: