GTP பற்றி நஜிப் வெறும் பேச்சுதான் என்கிறார் சார்ல்ஸ் சந்தியாகோ

தலைமைக் கணக்காய்வாளரின் 2011-ஆம் ஆண்டுக் கணக்கறிக்கையின் படி மக்கள் கூட்டணி அரசாங்கம் ஆட்சி புரியும் நான்கு மாநிலங்களில் மிகச் சிறந்த நிதி நிர்வாகத்தினால் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதை தணிக்கை அறிக்கை பாராட்டியுள்ளது. மாறாக  மத்திய அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருந்தாலும் வீணான  பல செலவினங்களை அதிகம் கொண்டிருப்பதாக தணிக்கை அறிக்கை விவரிக்கின்றது என  கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

மத்திய அரசாங்கத்தின் அமலாக்க நிர்வாகங்களில் பல “ஓட்டைகளும் உடைசல்களும்” உள்ளன என்பது சுட்டிக் காட்டப்பட்டன. குறிப்பாக வட மலேசியாவில் இரயில் திட்டத்திற்காக தேவையில்லா கூடுதல் செலவுகளும் பட்டு வாடாக்களும் உட்பட, ரிம 3 பில்லியனுக்கும் மேலும் வீண் செலவுகளும் செய்யப் பட்டுள்ளன என தெரிய வருகின்றது. மேலும் ஈப்போ- பாடாங் செராய் மின்சார இரட்டை தண்டவாள அமைப்பில் தாமதம் கண்டிருப்பதையும் அதனால் ஏற்பட்டிருக்கும் வீண் செலவுகளும் மிக கடுமையாக சுட்டிக் காட்டப் பட்டது என சார்ல்ஸ் மேலும் விளக்கினார்.

இந்த ஆண்டு அறிக்கையில் சுங்க அதிகாரி ஒருவர் அங்கீகாரம் இல்லாமல் ஒரு மில்லியன் ரிங்கிட்  வரை செலவை செய்திருப்பதாகவும், இந்தோனிசியாவில் ஆறு விளம்பர பலகைகள் அமைக்க மத்திய அரசாங்கம் மூன்று மில்லியன் ரிங்கிட் செலவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கும் அதுவேளை, லண்டன் மற்றும் தோக்கியோவில் மலேசிய உணவகம் திறக்கும் திட்டம் தோல்வி கண்டுள்ளதால் 14 மில்லியன் வீணாக செலவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மக்கள் பணத்தை முறையான முறையில் கையாளுகின்றோம் என கூறி நம்மை ஏமாற்றும் நஜிப்பின் வீணான செலவுகள் இதோடு நின்று விடவில்லை என சாடிய சார்ல்ஸ், கொள்முதல் நிர்வாகங்களில் பல பலவீனங்கள், ஆடுகளுக்கும்  கால்நடைகளுக்கும் செயற்கைக் கருத்தரிக்கச் செய்யும் விந்து கொள்முதலுக்கு 13 லட்சத்துக்கும் மேலாக செலவு செய்து, தற்போது  ரிம 400,000 -க்கும் மேல் மதிப்புடைய விந்துகள் பயன்படுத்தப் படாமல் விரயமாக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், கோலாலம்பூர் மாநக மன்ற போக்குவரத்துக் தகவல் நிர்வாகத்துக்குண்டான கருவிகளுக்கு  செலவிடப்பட்ட பணத்தில் பாதிக்கு மேல் செயல்படவில்லை, முன்னாள் அமைச்சர் ஷாரிசாட் கால்நடை வளர்ப்பு தொழிலில் ரிம 240 மில்லியனுக்கும் மேல் மோசடி  என பல விதத்தில்  மக்கள் வரிப்பணத்தை தேசிய முன்னணி அரசாங்கம்  வீண் செலவு செய்துள்ளதை 2011-ஆம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை வெளிச்சப் போட்டுக் காட்டுகின்றது என்று சார்ல்ஸ் குறிப்பிட்டார்.

மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நமது மலேசியா தொடர்ந்து இருந்துக் கொண்டிருந்தால் மக்களின் நிலை என்னவாகும் என்பதை அறிய இந்த தணிக்கை அறிக்கை வழிவகுத்துள்ளது. ஆகவே, மலேசியாவின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனை பாதுகாக்கும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவது மக்கள் கையில்தான் உள்ளது என்றும் சார்ல்ஸ் கூறினார் .

TAGS: