கேபி வெளியே இருக்க நாங்கள் உள்ளே இருப்பதா? நியாயம் கேட்கும் அரசியல் கைதிகள்


கேபி வெளியே இருக்க நாங்கள் உள்ளே இருப்பதா? நியாயம் கேட்கும் அரசியல் கைதிகள்

இலங்கையில் பல தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள மகசின் சிறைச்சாலைக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று அக்கைதிகளை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், தமிழ்க் கைதிகள் தாங்கள் பல ஆண்டுகளாக விசாரணை இன்றி, அல்லது விசாரணைக்கு முடிவு இன்றி, சிறையில் இருப்பதாகவும், தங்களுக்கு ஒன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரியதாக இந்த சந்திப்பு குறித்து அந்த குழுவில் சென்றவர்களில் ஒருவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

“கேபி வெளியே இருக்க நாங்கள் உள்ளே இருப்பதா?”

“போர் முடிந்த பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்து போரிட்ட சுமார் 11,000 பேர்களை மீண்டும் சமூகத்தில் இணைய இலங்கை அரசு அனுமதித்திருக்கிறது. அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதன் மீது எந்த வித வழக்கும் போடப்படாமல் அவர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே போல, முன்னாள் புலிப் பொறுப்பாளர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில், எம்மைப் போன்ற சாதாரண அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று அவர்கள் கோரியதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

இவர்களது கோரிக்கைகள் அரசுக்கு கொண்டு செல்லப்படும் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் மொழிச் சேவைகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அக்கைதிகளிடம் கூறியதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.

இதுபோல நீதிமன்ற வழக்குகளில் விசாரணைகள் இன்னும் தங்களில் பலர் அறிந்திராத சிங்கள மொழியிலேயே நடப்பதாகவும், சரியான மொழிபெயர்ப்பு வசதிகளைத் தங்களால் பெற முடியாமல் இருப்பதாகவும் கைதிகள் வாசுதேவ நாணயக்காரவிடம் தெரிவித்தனர்.

இது பற்றி பரிசீலித்து தமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கூறியதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

-BBC

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: