எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ள விரும்பும் சைட் மொக்தார்- அம்னோ எம்பி தாக்கு

அம்னோவின் பங் மொக்தார் ராடின் (பிஎன் -கினாபாத்தாங்கான்) இன்று நாடாளுமன்றத்தில் தொழில் அதிபர் சைட் மொக்தார் அல்-புகாரி மீது வசை பாடினார். சைட் மொக்தார், எல்லாத் தொழில்களிலும்  ஏகபோக உரிமை செலுத்த  நினைக்கும் ஒரு தொழில் அதிபர் என்றவர் சாடினார்.

“வானத்தில் தொழில் செய்கிறார், கடலில் தொழில் செய்கிறார், நிலத்தில் தொழில் செய்கிறார்.

“புதைகுழியில் இருந்துகொண்டு தொழில் செய்ய முடியும் என்றால் அதையும் செய்வார்”. பங் மொக்தார் 2013 பட்ஜெட்டில் நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீது குழு நிலையில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களும் (ஜிஎல்சிஎஸ்) மற்ற பெரிய நிறுவனங்களும் சிறிய குத்தகைகளைப் பெற போட்டி போட்டால் சிறிய நிறுவனங்கள் தொழில் செய்ய வாய்ப்பின்றிப் போகும் என்று பங் மொக்தார் குறைகூறினார்.

“ஜிஎல்சிஎஸ்-கள் சிறிய திட்டங்களைப் பெற போட்டிபோட இடமளிக்கக்கூடாது. அவை ‘மெகா’ திட்டங்களிலேயே கவனம் செலுத்த வேண்டும்”, என்றார்.

 

‘மக்கள் ஆத்திரம் கொண்டுள்ளனர்’

அதன்பின் அரசாங்க-ஆதரவு எம்பியான பங் மொக்தார் சைட் மொக்தார்மீது பாய்ந்தார்.

“மெகா திட்டங்கள் என்றதும் சைட் மொக்தார்தான் நினைவுக்கு வருகிறார். அவர் செய்வது நியாயமல்ல. மற்ற பூமிபுத்ராக்களும் அவரைப் போலவே வெற்றிபெற விரும்புகிறார்கள்.

“அவரே எல்லாவற்றையும் ஏகபோக உரிமையாக்கிக்கொள்ள அனுமதிக்கக்கூடாது.அது சரியற்ற வியூகம். அதை நிதி அமைச்சு மறுபரிசீலனை செய்ய வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.

இவ்விசயத்தில் மக்கள் ஆத்திரமடைந்திருக்கிறார்கள் என்பதால் அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

“ஏற்கனவே பினாங்கு துறைமுகத்தை எடுத்துக்கொண்டார், இப்போது கெரேதா அபி தானா மலாயு(கேடிஎம்பி) வை எடுத்துக்கொள்ளப் பார்க்கிறார். இன்னும் அவருக்கு எம்ஆர்டி வேண்டும்.. எல்லாமே வேண்டும்.

அம்னோவில் அல்லக்கைகள் இருப்பதாக மாற்றரசுக்கட்சியினர் கூறுகின்றனர். அவர்(சைட் மொக்தார்)தான் உண்மையான அல்லக்கை. வேறு அல்லக்கைகள் இல்லை”, என்றவர் காட்டமாகக் கூறினார்.

இப்படிப்பட்ட ஏகபோக உரிமைக்கு இடமளிப்பது முடிவில் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றவர் எச்சரித்தார்.

மலேசிய விமான நிறுவனத்தை ஏற்று நடத்திய  தாஜுடின் ரம்லியை ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர்,முடிவில்  அந்நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த அரசாங்கம் தலையிட வேண்டியதாயிற்று என்றார்.

அவர், சைட் மொக்தார்மீது வசைபாடுவது இது முதல் முறை அல்ல. ஜூன் மாதம் பினாங்கு துறைமுகம்  தனியார்மயப்படுத்தப்பட்டபோது அதை அத்தொழில் அதிபர் எடுத்துக்கொள்ள முன்வந்ததை அவர் சாடினார்.

சைட் மொக்தார் உள்பட, சில வணிகர்களை அரசாங்கம் “இளவரசர்கள்” போல் நடத்துகிறது என்றும் பங் மொக்தார் குறைபட்டுக்கொண்டார்.

TAGS: