அம்னோ எம்பி: தொடர்பு இல்லாத ஒருவருக்கு எப்படி 1 மில்லியன் FGV பங்குகள் கிடைத்தன ?

அண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட Felda Global Ventures Holdings Bhd (FGV) நிறுவனத்தின் ஒரு மில்லியன் பங்குகளை வாங்குவதற்கான இளம் சிவப்பு நிற பாரம் பெல்டாவுடன் தொடர்பு இல்லாத நபர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது ஏன் என்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“சபாவில் பெல்டாவுடன் தொடர்பு இல்லாத ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஒரு மில்லியன் FGV பங்குகள் கிடைத்துள்ளன.”

“அந்த அம்னிதர் எந்த வகையிலும்-அரசியல் ரீதியில் கூட-  பெல்டாவுக்கு பங்காற்றவில்லை,” என பிஎன் கலாபாக்கான் எம்பி அப்துல் காபூர் சாலே இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கூறினார்.

FGV பங்குகளை வாங்குவதற்கான இளம் சிவப்பு நிற, நீல நிற பாரங்களுக்கு தகுதி பெற்ற அமைப்புக்கள், அதற்கு பின்பற்றப்பட்ட காரணங்கள் பற்றிய மூலக் கேள்வியை அப்துல் காபூர் பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லானிடம் தொடுத்திருந்தார்.

அந்தக் கேள்வியைத் தொடர்ந்து தொடுத்த துணைக் கேள்வியை எழுப்பிய போது அவர் அந்த தகவலை வெளியிட்டார்.

அந்த விவகாரத்துக்கு FGV நீல நீற பாரங்கள் கொடுக்கப்பட்ட அனைவருடைய பட்டியல் உடபட எழுத்துப்பூர்வமாக தமக்குப் பதில் அளிக்குமாறு அந்த கலாபாக்கான் எம்பி, அகமட்டைக் கேட்டுக் கொண்டார்.

அவ்வாறு பதில் கொடுப்பதற்கு அகமட் ஒப்புக் கொண்டார்.

அப்துல் காபூர் கூறியிருப்பதைப் போன்று ஏதும் நிகழ்ந்ததாக தமக்கு இது வரை தெரியவில்லை என அதற்குப் பதில் அளித்த துணை அமைச்சர் அது தவறான புரிந்துணர்வாகவும் இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

“சபா மாநில அரசாங்கத்துக்கு FGV பங்குகளில் ஐந்து விழுக்காடு கொடுக்கப்பட்டது. அது கணிசமான அளவாகும்.”

“அந்த இடத்தில் தான் குழப்பம் இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். ஏனெனில் அந்தப் பங்குகள் சபா மாநில அரசாங்கத்துக்குக் கிடைத்ததாகவும் இருக்கலாம்,” என அகமட் சொன்னார்.