பாங்: ரிம 40 மில்லியன் விவகாரம்: புதிய முன்மாதிரி ஏற்படுத்தப்படுகிறது

சாபா அம்னோவுக்கான ரிம40 மில்லியன் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது அரசாங்கமும் வழக்கத்துக்கு மாறான ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துகிறார்கள் என்றுதான் பொருள்படும் என்கிறார் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் ரோபர்ட் பாங். அதைத் தடுக்காவிட்டால் அப்படிப்பட்ட செயல்களை பிரதமர் ஆதரிப்பதாகவே கருதப்படும்.

“பணத்தைக் கொண்டு வரும் நபர் பிடிபட்டால் அது அரசியல் நன்கொடை எனப்படும். பிடிபட வில்லையென்றால் பணம் ‘சொந்தத்துக்கு’ என்றாகிவிடும்”, என்றவர் கிண்டலடித்தார்.

“இது ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்தையே முடக்கிப்போட்டு விடும். அது ஒரு மோசமான முன்மாதிரி. அதற்கு இடமளிப்பது பிஎன்னுக்கே அபாயமாக அமையலாம்”.

அனைத்துலக ஊழல்தடுப்பு அதிகாரிகள் சங்க (ஐஏஏசிஏ) மாநாட்டின்போது அரசியல் நன்கொடை விவகாரம் பற்றியும் விவாதிக்கப்பட்டது என்றும்  நன்கொடை அளிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றால், அதை ஊழலாகவே கருத வேண்டும் என்று அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

பிரதமருக்கு ஆலோசனை கூறுவோரும்  சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் போன்றோரும்  தப்பான ஆலோசனைகள் சொல்லிவருகிறார்கள் போல் தெரிகிறது என சமூக நீதி பராமரிப்பு அமைப்பின் தலைவருமான பாங் கூறினார்.

நஜிப், இந்த விவகாரத்தால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளையும் அதில் அடங்கியுள்ள உள்ளார்ந்த செய்திகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

இதைத் தடுக்காவிட்டால் இவை போன்ற செயல்களைப் பிரதமர் பொறுத்துகொண்டு போவதாகவே மக்கள் கருதுவார்கள் என்றாரவர்.

‘யாரோ ஒருவர் உண்மை சொல்லவில்லை’

மூசா குற்றமிழைக்கவில்லை என்று அறிவித்த நடப்பில் அமைச்சர் நஸ்ரியின் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுவதாக பாங் குறிப்பிட்டார். அவர் குற்றமற்றவர் என்று சொன்னது எது- எம்ஏசிசி-யா? ஹாங்காங்கின் சுயேச்சை ஊழல்தடுப்பு ஆணையமா(ஐசிஏசி)? என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

“யாரோ ஒருவர் உண்மை சொல்லவில்லை. அதன் தொடர்பில் கூறப்படும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. எம்ஏசிசி விசாரணைகள் சுதந்திரமாக நடப்பதில்லை என்பதால் அதையே மாற்றி அமைக்க வேண்டும். அதில் (சட்டம், வழக்கு விவகாரப் பிரிவுத் தலைவர்) அப்துல் ரசாக் மூசாவும் அந்தனி கெவின் மோராய்சும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் பிரதிநிதிகள்.

“அவ்விருவரும் விசாரணைகளைக் கண்காணிப்பதோடு நின்றுவிடுவதில்லை. குறுக்கீடும் செய்வார்கள். எம்ஏசிசி என்னை விசாரணை  செய்தபோது அப்படித்தான் செய்தார்கள்”, என்று பாங் கூறினார்.

எம்ஏசிசியின் விசாரணை முறைகளை  நன்கறிந்தவரான பாங், இம்மாதத் தொடக்கத்தில் அதன் துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) முகம்மட் ஷுக்ரி அப்துல்(இடம்) அளித்த விளக்கத்தின்படி பார்த்தால், ரிம40 மில்லியன் விவகாரம் தொடர்பில் எம்ஏசிசி-யின் விசாரணை இன்னும் முழுமை அடையவில்லை என்றே தோன்றுகிறது என்றார்.

அக்டோபர் 5-இல் விளக்கமளித்த ஷுக்ரி, மூசா மீது மேலும் விசாரணை நடத்துமாறு எம்ஏசிசி பணிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

“ஷுக்ரி கூறியதை உண்மை என்று நம்புகிறேன். விசாரணைகள் இன்னும் முழுமை அடையவில்லை. பிரதமருக்கு யாரோ தப்பாக சொல்லியிருக்கிறார்கள். மூசா குற்றமிழைக்கவில்லை என்று சொல்ல நஸ்ரி அப்துல் அசீஸ் யார்?”, என்றவர் வினவினார்.

TAGS: