‘துவா (doa) ஒதாதற்காக ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டனர்’

பெற்றோர்கள் குழு ஒன்று தங்கள் பிள்ளைகள் நண்பகல் உணவுக்குப் பின்னர் துவா (doa) ஒதாதற்காக அவர்களை கன்னத்தில் அறைந்த கிளந்தான் குவா மூசாங்-கிற்கு அருகில் உள்ள போஸ் பிஹாய்-யில் உள்ள பிஹாய் தேசியப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மீது போலீசில் புகார் செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் மணி 1.30 வாக்கில் தமது இரண்டு 12 வயதுப் பெண் பிள்ளைகள் முஸ்லிம்களாக இல்லாத போதும் துவா ஒதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னர் கன்னத்தில் அறையப்பட்டதாக பெற்றோர்களில் ஒருவரான அத்தார் பெடிக் கூறினார்.

“என் புதல்விகளுக்கு நிகழ்ந்ததை கேள்விப்பட்டதும் நான் ஆத்திரமடைந்தேன்,” என அத்தார் தொடர்பு கொள்ளப்பட்ட போது தெரிவித்தார்.

அத்தாருடன் ஹசான் அச்சோய், அலோங் பாண்டாக் என்ற இதர இரண்டு தந்தையரும் ( அந்தச் சம்பவத்தில் அவர்களுடைய 12 வயது புதல்விகளும் கன்னத்தில் அறையப்பட்டனர்) போஸ் பிஹாயிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பயணம் செய்து குவா மூசாங் போலீஸ் நிலையத்தில் புகார்களை சமர்பித்தனர்.

கிளந்தான் உட்புறப்பகுதியில் பேராக் எல்லைக்கு அருகில் போஸ் பிஹாய் அமைந்துள்ளது.

புகார் செய்யப்பட்டுள்ளதை குவா மூசாங் போலீஸ் நிலையம் உறுதி செய்துள்ளது.

ஆண் ஆசிரியர் அறைந்த பின்னர் பிள்ளைகளுடைய முகங்களில் சிராய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பிஹாய் தேசியத் தொடக்கப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் அரோம் அசிர் தெரிவித்தார்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் 100 மாணவர்கள் கற்கின்றனர். அனைவரும் ஒராங் அஸ்லி பிள்ளைகள் ஆவர். விளையாட்டுக்கு பின்னர் அந்தப் பிள்ளைகள் ஒன்றாக மதிய உணவை சாப்பிட்டனர் என அரோம் சொன்னார்.

“உணவுக்கு முன்னும் பின்னரும் முஸ்லிம் பாணியில் துவா ஒதுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.  அது அவர்களுக்குத் தெரியாததால் அமைதியாக இருந்தனர்.”

“பின்னர் ஆசிரியர் சில மூத்த பிள்ளைகளை பொறுக்கி அமைதியாக இருந்ததற்காக அவர்களை அறைந்துள்ளார்,” என்றார் அவர்.

பள்ளிக்கூடத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமியப் பாடம் போதிக்கப்படுவது இந்த வாரம் தொடக்கம் வரையில் பெற்றோர்களுக்குத் தெரியாது என அரோம் மேலும் சொன்னார்.

“நாங்கள் அக்டோபர் 23ம் தேதி எங்களைக் காண வந்த சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையப் பேராளரிடம் அது குறித்து புகார் செய்தோம். அன்று பின்னேரத்தில் பிள்ளைகள் அறையப்பட்டதை நாங்கள் அறிந்தோம்.”

நிறுவனங்களுக்கு எதுவும் தெரியாது

பிஹாய் தொடக்கப்பள்ளிக்கு என குறிக்கப்பட்டிருந்த தொலைபேசி எண் கல்வித் துறைக்குச் சென்றது. எங்கள் அழைப்புக்குப் பதில் அளித்த அதிகாரி ஒருவர் மலேசியாகினியை ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையிடம் வினவுமாறு கூறினார்.

ஆனால் அந்த விவகாரம் மீது தனக்கு எந்த புகாரும் கிடைக்கவில்லை என அந்தத் துறை தொடர்பு கொள்ளப்பட்ட போது தெரிவித்தது. பெற்றோர்கள், கல்வித் துறை, ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை, சுஹாக்காம் ஆகியவற்றுக்கு இடையில் அந்தச் சம்பவம் மீது கலந்துரையாடல் ஒன்றுக்கு அக்டோபர் 30ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறை மேலும் தெரிவித்தது.

‘பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வி போதிக்க வேண்டுமா என்பது மீது பெற்றோர்களுடன் முதலில் கலந்தாய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என நாங்கள் கருதிகிறோம்,” என அந்தத் துறையின் பேச்சாளர் சொன்னார்.

இதனிடையே குழந்தைகள் தாக்கப்பட்டது மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒராங் அஸ்லி உரிமைகளுக்குப் போராடும் Kampung Orang Asli Semenanjung Malaysia (JKOASM) என்ற அரசு சாரா அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

“சம்பந்தப்பட்ட ஆசிரியர் தவறு செய்திருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”

“அத்துடன் தங்களது சமயம் அல்லாத ஒரு சமயத்தை கற்பதற்கு ஒராங் அஸ்லி பிள்ளைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா என்பதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விசாரிக்க வேண்டும்,”என்றும் அது கோரியது.

“பிஹாய் தேசியப் பள்ளி போன்று உட்புறப்பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,” என்றும் அது கேட்டுக் கொண்டது.

“ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் அவற்றில் போதிப்பதை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம்,” என்றும் JKOASM தெரிவித்தது.