அறுபது பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது பிரிட்டன்

பிரிட்டனிலிருந்து மேலும் ஒரு தொகுதி குடியேறிகள் இலங்கைக்குத் திருப்ப அனுப்பப்படவிருக்கின்றனர். அறுபது பேர் செவ்வாயன்று தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள்,விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்கியிருந்தவர்கள் போன்றோர் தற்போது திருப்பி அனுப்பப்படுபவர்களில் அடங்குவர்.

திருப்பி அனுப்பப்படுகின்றவர்களில் சுமார் முப்பது பேர் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தொடர்புகொண்டு பின்னர் பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தவர்கள் ஆவர்.

இலங்கையிலிருந்து வந்தவர்களில் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறி தஞ்சம் கோரியவர்களின் விண்ணப்பங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென பிரிட்டன் உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தும், தற்போது இப்படிப்பட்டவர்கள் சிலர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருப்பியனுப்பப்படுவோரில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தவர்கள் சார்பாக வாதிடுகின்ற ஒரு சட்டத்தரணி கீத் குலசேகரம் ஆவார்.

தன்னுடைய கட்சிக்காரர்கள் ஐந்து பேரில் நால்வரை திருப்பி அனுப்பக்கூடாது என்ற ஒரு தடை உத்தரவை நீதிமன்றத்திடம் இருந்து தான் வாங்கிவிட்டதாகக் அவர் கூறினார்.

இலங்கையிலிருந்து வந்து அரசியல் தஞ்சம் கோரியவர்களைத் திருப்பியனுப்பக்கூடாது என்ற தடை உத்தரவு வழங்குவது பற்றி பிரிட்டனில் நீதிமன்றங்கள் பரிசீலித்துவரும் நிலையில், முன்கூட்டியே முடிந்தவரையிலான ஆட்களை திருப்பி அனுப்பிவிடலாம் என்ற எண்ணத்தில் பிரிட்டன் குடிவரவுத்துறை அதிகாரிகள் செயல்படுவதாக குலசேகரம் குற்றம்சாட்டினார்.

TAGS: