‘உயர்வான கார் விலை பிரச்னைக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது தீர்வாகாது


‘உயர்வான கார் விலை பிரச்னைக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது தீர்வாகாது

கார் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது, உயர்வான கார் விலைகள் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள சுமையைக் குறைப்பதற்கான தீர்வு அல்ல என பிகேஆர் சொல்கிறது.

“கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது கார் விலைகள் குறைவாக இருக்கும் தோற்றத்தை அளிக்கலாம். ஆனால் அது பிரச்னைகளைத் தீர்க்காது. உண்மையில் நீண்ட காலம் என்பது வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் எனப் பொருள்படும். அது மக்களுக்கு சுமையைக் கொடுக்கும்,” என அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் சொன்னார்.

“அத்தகைய திட்டங்கள் பல இளம் மலேசியர்களை தங்களது வாழ்க்கையின் தொடக்கக் கட்டத்திலேயே கடன்காரர்களாக்கி விடும்,” என அவர் நம்புகிறார்.

கார்களுக்கான கலால் வரிகளை குறைக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதற்கு பிகேஆர் பதில் அளித்தது.

வங்கிகள் குறிப்பாக மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கு வழங்கும் சரளமான தவணைத் திட்டங்கள் வழங்கும் நீண்ட தவணைக் காலம்  உயர்வான கார் விலைகளை மக்கள் சமாளிப்பதற்கு உதவுவதாக முஸ்தாப்பா கூறியிருந்தார்.

“கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் உயர்வான கார் விலை  ஏற்படுத்தியுள்ள சுமையை மக்கள் சமாளிக்க உதவும் என அவர் மக்களவையில் விடுத்துள்ள அறிக்கை தவறானது, ஆபத்தானது,” என ராபிஸி கூறிக் கொண்டார்.

மறைமுக வரி

உயர்வான கார் விலைகளுக்கு மூல காரணம் மிகவும் அதிகமான கலால் வரியும் மற்ற வரிகளுமாகும் என ராபிஸி குறிப்பிட்டார். அந்த வரிகள் கார் விலைகளைக் கிட்டத்தட்ட 100 விழுக்காடு உயர்த்துகின்றன என்றார் அவர்.

“இவ்வளவு காலமாக பிஎன் பயன்படுத்தி வந்த அத்தகைய மறைமுகமான வரிகள் மக்களை நீண்ட காலத்துக்கு கடனாளிகளாக வைத்திருந்து அரசாங்க வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளன.”

பிரபலமான கார்களின் நடப்பு விலைகளையும் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் காலத்தையும் தாம் கணக்கிட்ட போது மாதம் ஒன்றுக்கு 1800 ரிங்கிட் சம்பாதிக்கும் ஒர் இளைஞர் தமது வருமானத்தில் 53 விழுக்காட்டைக் கார் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என ராபிஸி சொன்னார்.

கலால் வரிகள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையை கிட்டத்தட்ட இரு மடங்காகப் பெருக்கி விடுகின்றன என்றார் அவர்.

ஆகவே மக்களுடைய சுமையைக் குறைக்கவும் கடனைக் குறைக்கவும் கலால் வரிகளைக் குறைப்பதே சிறந்த வழி என்பதே பிகேஆர் நிலை என ராபிஸி வலியுறுத்தினார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: