பத்துமலை நடராஜாவுக்கும், சரவணனுக்கும் ஒரு சவால்

-அண. பாக்கியநாதன், அக்டோபர் 27, 2012.

பத்துமலை வட்டாரத்தில் 29 மாடி கொண்டோ விவகாரம் அடுத்த தேர்தலுக்கு இந்திய மக்களை திசைத்திருப்ப நடராஜா ஆடும் நாடகம். சாட்டையடிக்கு சரியான பதிலுரைக்க இயலாமல் கேட்பவரின் சமயத்தைச் சுட்டிக் காட்டி ஒதுங்கி நிற்கச் சொல்லும் சரவணன். நீங்கள் இருவரும் சமய சீர்திருத்தத்திற்கு என்ன பங்காற்றியுள்ளீர்கள்?

பத்துமலை வட்டாரத்தில் பத்துமலை கோவில் அருகே  29 மாடி கட்டிடம் பற்றி பக்காத்தானுக்கு எதிராக பத்திரிக்கை அறிக்கைகளை விடும் நடராஜா அவர்களே, ஆன்மிக சேவையில் ஈடுபட்டு சமயம் தழைத்தோங்கவும் இந்துக்களுக்கு பக்தி மார்க்கத்தை வலியுறுத்தி நல்வழிப்படுத்தவும் அயராது பாடுபட்டு வருகிறேன் என்ற உங்களின் சுயப்பிரகடனத்தைப் படித்தேன்.

நீங்கள் இந்த அளவுக்கு அயராது பாடுபட்டும் நாட்டில் சமயத்திற்கு முரணான வழிபாடுகளும், மூடநம்பிக்கை சார்ந்த சமய நடவடிக்கைகளும் தனி நபர் வழிபாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே, அது ஏன்?

நாட்டின் தாய்க்கோயில் தலைவர் என்ற முறையில் நீங்கள் சமயத்தை நல்வழிப்படுத்த முயன்றது உண்மையாக இருந்தால் வீட்டிலும், சாலையோரங்களிலும், அடுத்தவர் நிலத்திலும் அரசாங்க நிலத்திலும் கோயில்களைக் கட்டும் போக்கு அதிகரித்து வருவது ஏன்?

திருவிழாக்கள் என்ற பெயரில் தெய்வங்களின் படங்களை பிருமாண்ட சைசில் சாலையோரங்களில் வைப்பது, நடுரோட்டில் கோலம் போடுவது, ஊர்வலங்களின் போது ஆர்ப்பாட்டங்கள், அடாவடித்தனங்கள் புரிவது ஏன்?

சவ அடக்க ஊர்வலங்கள் கூட சமயத்தின் பெயரால் சட்டத்திற்குப் புறம்பானச் செயல்கள் நிகழ்வது ஏன்?

பிற்போக்கான சமய சிந்தனைகளும் மூட நம்பிக்கைளும்  நமது இனத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சினிமாவில் கூட இந்து சாமியார்கள் குடிகாரர்களாகவும் பெண் பித்தர்களாகவும்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். சமயத்தை நல்வழிப்படுத்த அயராது பாடுபடுவதாகக் கூறிக் கொள்ளும் நீங்கள் இவற்றுக்கு எதிராக என்றாவது குரல் கொடுத்துள்ளீர்களா?

பத்துமலைத் திருத்தலத்தின் முக்கிய பொறுப்பாளராக நீங்கள்தான் நீண்ட நாட்களாக இருந்து வருகிறீர்கள். இருந்தும் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தைப்பூசத்தைக் கூட முழுக்க பக்திமயமான விழாவாக உங்களால் மாற்ற முடியவில்லையே. காவடி எடுப்போர் உள்பட பத்துமலைக்கு வரும் பக்தர்களில் சிலர் செய்யும் சமயத்திற்கு புறம்பானச் செயல்களும் சேட்டைகளும் ஒரு புறமிருக்க ராட்டினம், கலைநிகழ்ச்சி, சி.டி. வெளியீடு என வண்ணமய நிகழ்வுகள் அரங்கேற்றம் காணும் கேளிக்கை விழாவாத்தானே தைப்பூசம் விளங்குகிறது.

சமயப் பணிக்கு கேடு விளைவுக்கும் எந்த செயலையும் பக்தர்களின் துணையோடு சந்தித்து வெற்றி கண்டதாகக் கூறிக் கொள்ளும் நடராஜா அவர்களே, உங்களுக்கு 24-11-2007 நினைவிருக்கிறதா? காலாகாலமாக ஒடுக்கப்பட்டு வந்த இந்திய சமூகம் பொங்கியெழுந்து போராடத் துணிந்த ஓர் உன்னத தினம். அன்று இரவு பத்துமலை வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களை ஆலயத்தினுள் நுழைய விடாமல் கதவை பூட்டி வைத்தது யார்?

இந்து என்ற உரிமையில் ஆலயத்தினுள் நுழைந்தவர்களுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தது யார்? ஆயிரக்கணக்கான பக்தர்களை ஆலய வளாகத்தினுள் வலுக்கட்டாயமாகப் பூட்டி வைத்து  அவர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளும் இரசாயன நீரும் பாய்ச்சப்படுவதற்கு காரணமாக இருந்தது யார்?

ஆலய வளாகத்திலேயே ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். நுற்றுக்கணக்கானோர் போலீசாரால் பிடிக்கப்பட்டனர். அவர்களில் பட்டதாரிகள், உயர்கல்விக் கூட மாணவர்களும் அடங்குவர். பல வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பல வருடங்கள் நீதிமன்றமும் வீடுமாக அலைந்து கல்வி வாய்ப்பை, செய்து வந்த வேலையை இழந்தவர் பலர்.

சொந்த இனத்திற்கு இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்ததற்காக 2008 ஆண்டு  பத்துமலைத் தைப்பூசத்தை ஒட்டு மொத்த இந்துக்களும் புறக்கணித்தனர். ஆனால் சொந்த இனத்திற்கு செய்த துரோகத்திற்கு பரிசாக நீங்கள் டத்தோ பட்டம் வாங்கிக் கொண்டீர்கள். இன்று மக்களை உங்களின் பதவியை, தற்காத்துக் கொள்ள ஆலயத்திற்கு அழைத்தால் யாரும் வருவார்களா?

அதிகமான சுற்றுப்பயணிகளைக் கவரும் இடமாக பத்துமலை மாறி வருவதாக நீங்கள் புளகாங்கிதம் அடைந்துள்ளீர்கள். ஆலயம் அமைந்துள்ள இடம் என்பது புனிதமான திருத்தலம். அது தெய்வீகமும், இறைபக்தியும் சங்கமிக்கின்ற இடம். இங்கு வரவேண்டியர்கள் பக்தர்களே தவிர சுற்றுப்பயணிகள் அல்ல.

இந்துக்களின் திருத்தலம் பத்துமலை எனும் உலகமறிந்த அடையாளத்தை மாற்றி அதனை சுற்றுப்பயணிகளின் கேளிக்கை தளமாக மாற்ற நடத்தப்பட்டு வரும் சூழ்ச்சிக்கு நீங்கள் ஆதரவு வழங்குகிறீர்கள்!

ஆனால், இந்து மதத்தின் ஏகபோக பிரதிநிதி போல் பிதற்றிக் கொள்ளும் நீங்கள் கர்ப்பக்கிரகத்தில் இருந்து பக்தர்களுக்கு கனிவோடு காட்சியளிக்க வேண்டி முருகனை குகைக்கு வெளியே கொண்டு வந்து கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் வாட வைத்து விட்டீர்கள்!  பத்தர்களுக்கு ஆசி வழங்க வேண்டிய முருகன் இப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் கேமராக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!!

இடையிடையே தமிழ்நாட்டு சினிமாக்காரர்களும் இந்த முருகன் சிலை எதிரே நடிகர்களை குத்தாட்டம் போட வைத்து பக்தியை பகல் வேஷமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிலையை நிறுவுவதற்குக்கூட நீங்கள் நகராண்மைக்கழகத்திடம் முறையான அனுமதியைப் பெறவில்லை.

பத்துமலையில் கட்டப்பட்டுள்ள எந்த கட்டுமானத்திற்கும், நீங்கள் நகராட்சி மன்ற விதிகளுக்கு ஏற்ப கட்டுமானத்திற்கான விண்ணப்பத்தை செய்வதில்லை. அங்குள்ள எந்த கட்டடத்திற்கும்  தகுதி சான்றிதல்கள் இல்லை, காரணம் ஆலயத்தில் நீங்கள் நடத்தும் காட்டு தர்பார்.

எதற்கெடுத்தாலும் பத்துமலை சுற்றுப்பயணிகளைக் கவரும் இடம் என கூறிக்கொள்கிறீர்கள். பத்துலையை சுற்றுலாத் தளமாக பிரபலப்படுத்துவற்கு நீங்கள் என்ன சுற்றுலா அமைச்சரா? இந்த கட்டுமானங்களால் ஏதேனும் விவரீதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? எவருக்கும் காப்புறுதி கிடைக்குமா? முருகன் பெயரை சொல்லி, விதியைக் காரணம் காட்டி  தப்பிக்க முயற்சிப்பீர்.

நாங்கள் அரசியல் சார்பற்ற சமய இயக்கம். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று நாடகம் ஆடவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை என்றும் நீங்கள் கூறியுள்ளீர்கள். அது உண்மையானால் ஒவ்வொரு ஆண்டும்  தைப்பூசத்தின் போதும் ஆளும் கட்சிக்காரர்களை மட்டும் ஆலய வளாகத்திற்கு மாலை மரியாதையுடன் அழைத்து வந்து மைக் கொடுத்து பேச வைக்கும் நீங்கள் மக்கள் கூட்டணித் தலைவர்களை மட்டும் வேலிக்கு வெளியே நிற்க வைத்து ஏளனப்படுத்துவது ஏன்?

இறுதியாக, இந்த விவகாரத்தை வைத்து அரசியல் பிழைப்புத் தேடுவதாக அரசியல் தலைவர்களைச் சாடியுள்ளீர்கள். நீங்கள் குற்றஞ்சாட்டும் அந்த அரசியல்வாதிகள் பதவிகளை குடும்பச் சொத்தாக்கிக் கொண்டு வருடக்கணக்கில் ஆண்டு வருபவர்கள் அல்ல. அவர்கள் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எந்த ஊழலிலும் ஈடுபடாதவர்கள். அடுத்தவர் பணத்தை அபகரித்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளாதவர்கள். நீதிமன்றப்  படிகளில் ஏறாதவர்கள். இதன்படி பார்த்தால் அவர்கள் எல்லா வகையிலும் மேலானவர்கள். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களை சந்தித்தே ஆக வேண்டும். முடியுமா உங்களால்?

கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு  கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்தில் பல சொத்துகள் இருக்கின்றன. அவை 80 ஆம் ஆண்டுகள் வரை சிறப்பாக நிர்வாகிக்கப்பட்டு வளர்ச்சியும் கண்டு வந்தன. ஆனால்  உங்கள் தலைமைத்துவத்தில் என்ன நடக்கிறது?  என்ன தேய்வு, என்ன வளர்ச்சி? மலேசிய தாய் கோயிலின் நிர்வாக இலட்சணத்தை நாட்டு மக்கள் எடை போடட்டுமே. காட்டுவீர்களா கணக்கை?

ஆலயச் சொத்து மக்களுக்கு உதவ வேண்டும். எவருக்கும் தேர்தல் நிதி வழங்கவோ, வேண்டியவர் குடும்பம் பிழைக்க குத்தகை வழங்கவோ பயன்படக்கூடாது.

இன்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  வேறு மதத்தை சார்ந்தவர்  அதனால் கோயில் விசயத்தில் தலையீடக்கூடாது என்று கூறும் கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் சரவணனுக்கு ஒரு சவால்: கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் நடராஜாவை அவரின் சகல வரவு செலவு, சொத்து விவரங்களை வெளியிட சொல்ல முடியுமா? கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சகல வரவு செலவு, சொத்து விவரங்களை வெளியிடச் சொல்ல முடியுமா? அதை கோவில் நடராஜா செய்ய வேண்டும் என்று இந்த துணையமைச்சர் வலியுறுத்துவார? அதையும் ஒரு மாதத்தில் செய்யவேண்டும், சரவணன் செய்வாரா?