40 மில்லியன் ரிங்கிட் நன்கொடை: ‘அம்னோ விளக்கம் அர்த்தமற்றது’

சபா அம்னோவுக்கு கொடுக்கப்பட்ட 40 மில்லியன் ரிங்கிட் நன்கொடை மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்குமாறு அரசாங்கம் மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பெருத்த சர்ச்சைக்கு இலக்காகியுள்ள அந்த நன்கொடைக்குப் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கு ஆர்சிஐ மட்டுமே ஒரே வழி என ஏபிஎஸ் என்ற Angkatan Perubahan Sabah அமைப்புச் செயலாளர் கலாக்காவ் உந்தோல் கூறினார்.

அரசாங்கம் எடுக்கும் சரியான பொருத்தமான நடவடிக்கையாகவும் அது அமையும் என்றும் அவர் சொன்னார்.

“பொது மக்கள் மிக ஆழமாக அந்த விஷயத்தை ஆராய்ந்து வருகின்றனர். அம்னோ தலைவர்கள் கொடுக்கும் விளக்கத்தில் எந்த அர்த்தமும் இல்லை,” என்றார் அவர்.

ஹாங்காங்கில் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வணிகரான மைக்கல் சியா என்பவர் 16 மில்லியன் ரிங்கிட் சிங்கப்பூர் டாலருடன் கோலாலம்பூருக்கு விமானத்தில் புறப்படவிருந்த வேளையில் அதிகாரிகள் அவரைத் தடுத்து வைத்ததாகக் கூறப்பட்டது.

ஆனால் சியா-வை ஹாங்காங் ஊழல் தடுப்பு நிறுவனம் ஒரு போதும் கைது செய்யவில்லை என்று அக்டோபர் 22ம் தேதி பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்திருந்தார்.

என்றாலும் அந்தப் பணம் கட்சிக்கான நன்கொடை எனக் கூறப்பட்டுள்ளது ‘கொள்கை அளவில் பெரிய அமைப்பு ஒன்றின் ஊழல் அது’ என கலாக்காவ் இன்று விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.

“பல அரசியல் தலைவர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால் அவற்றுக்குப் பதில் இல்லை.’

“அந்த நிதி நன்கொடைக்குப் பின்னணியில் உள்ள உண்மைகளை அறியவும் சம்பந்தப்பட்ட நன்கொடையாளரை அறியவும் மக்கள் உண்மையில் விரும்புகின்றனர்,”என அவர் மேலும் சொன்னார்.

அம்னோ அந்நிய நிதிகளை கடத்துவதாக கூறப்படுவது மீது குறிப்பாக 40 மில்லியன் ரிங்கிட் ‘அரசியல் நன்கொடை’ தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆராய ஆர்சிஐ-ஒன்றை அமைக்குமாறு டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அரசாங்கத்தை ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளார்.

 

TAGS: