டிஏபி-இன் தேர்தல் பரப்புரை வாகனம் அறிமுகம்

அடுத்த பொதுத் தேர்தல் போட்டிமிக்கதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் எங்கும் ஆவேசமான தேர்தல் பரப்புரையை எதிர்நோக்கலாம்.அதற்கு ஆயத்தமாக டிஏபி தேர்தல் பரப்புரை வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிவப்புநிற ட்ரேய்லர்(இழுவை வண்டி) வாகனமான அதனைக் கட்சி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், நேற்று சிரம்பானில் அறிமுகப்படுத்தினார். அதில் டிஏபி-இன் அதிர்ஷ்ட பறவையான இறவாட்சியின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.  ‘Ubah! Bersihkan Malaysia (மாற்றம் தேவை! மலேசியாவைத் தூய்மைப்படுத்துவோம்’ என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது.

“அடிப்படையில் அது, ஒரு நடமாடும் சொற்பொழிவு மேடை”, என்று நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லொக் கூறினார்.

‘கனவு இயந்திரம்’ என்று அழைக்கப்படும் அவ்வாகனம் சாலைகளில் செல்லும்போதும் பரப்புரை செய்யும்போதும் கண்ணைக்கவரும் என்றாரவர்.

ஏன் அதற்கு அப்படி ஒரு பெயர் என்று வினவியதற்கு, “அது தலைமைச் செயலாளர் இட்ட பெயர்”, என்றுரைத்த லொக், “ அது நம்பிக்கையை ஊட்டுகிறது. மலேசியர்கள் விரும்புவதுபோல் அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்றும் நம்புகிறோம்”, என்றார்.

பிகேஆர், தேர்தல் பரப்புரை இழுவை வண்டியையும் பேருந்து ஒன்றையும் அறிமுகப்படுத்தி இரண்டு மாதங்கள் ஆகும் வேளையில் டிஏபி அதன் தேர்தல் பரப்புரை வாகனத்தைக் கொண்டு வந்துள்ளது.

‘நடமாடும் கடை, அலுவலகம்’ 

இந்தக் கனவு இயந்திரத்துக்குத் துணையாக இரு சிறிய ஊர்திகளும் உள்ளன.

“அவற்றில் ஒன்று உபா பொம்மைகள் போன்ற பொருள்களை விற்பனை செய்யும் கடைபோல் செயல்படும்.

“மற்றது நடமாடும் அலுவலகமாகவும் செய்தியாளர் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தவும் பயன்படும்”, என்று லொக் கூறினார்.

இந்த ஊர்திகள் டிஏபி ஆதரவாளர்களிடமிருந்து இரவலாகப் பெறப்பட்டவை என்றும்  தேர்தல் முடியும்வரையில் அவற்றை டிஏபி பயன்படுத்திக்கொள்ளும் என்றும் சொன்னார்.

“அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. நாங்கள் அவற்றில் முதலீடு செய்யவில்லை. ஆதரவாளர்கள்தான் அவற்றை இரவலாக வழங்கி எங்களின் தேவைக்கேற்ப திருத்தியும் அமைத்துக்கொடுத்தார்கள்”, என்று ராசா எம்பியும் லொபாக் சட்டமன்ற உறுப்பினருமான லொக் குறிப்பிட்டார்.

அவ்வூர்திகள் நவம்பர் 3-இல் சிரம்பான் ஜெயாவில் நடைபெறும் பக்காத்தான் பேரணியில் முதன்முதலாக பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

 

 

TAGS: