பத்து மலை ‘கொண்டோ’: சுயேச்சை பணிக் குழு அமைக்கப்பட்டது

பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்துக்கு அருகில் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படுவதைச் சூழ்ந்துள்ள பிரச்னைகளை சுயேச்சை பணிக் குழு ஒன்று ஆராயும் என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

“முடிவு செய்யும் போது நாங்கள் வெளிப்படையாக நடந்து கொள்வதை மக்களுக்குக் காட்ட நாங்கள் விரும்புகிறோம். ஆகவே நாங்கள் முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் சுயேச்சைப் பணிக் குழு ஒன்றை நாங்கள் அமைக்கிறோம்,” என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.

அந்தக் குழுவில் பிரபலமான வழக்குரைஞர்களும் கட்டுமான திட்டங்களை தயாரிக்கின்றவர்களும் அந்தத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் இடம் பெற்றிருப்பர்.”

நாளை மாநில ஆட்சி மன்றக் கூட்டத்தில் விவரங்கள் விவாதிக்கப்பட்ட பின்னர் கால வரம்பு முதலான  தகவல்கள் வெளியிடப்படும் என்றார் அவர்.

அந்தக் குழு நடப்பு நிலவரம் குறித்தும் அடுத்த சிறந்த நடவடிக்கை குறித்தும் புனிதமான அந்த இடத்தைப் பாதுகாப்பது குறித்தும் சுற்றுப்புறப் பகுதிகளில் மேம்பாட்டை அனுமதிப்பது குறித்தும் மாநில அரசுக்கு ஆலோசனை கூறும்.

“ஒரு முடிவுக்கு வரும் வரையில் எல்லாம் முறையாகச் செய்யப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அடுத்து நாங்கள் பொருத்தமான முடிவை எடுப்போம்,” என்றார் அவர்.

அந்தக் கோவில் குழு உறுப்பினர்கள் பணிக் குழுவில் இடம் பெறுவார்களா என காலித்-திடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், அந்தப் பிரச்னையில் எந்த ஈடுபாடும் இல்லாத சுயேச்சையான தனிநபர்கள் மட்டுமே குழுவில் அங்கம் பெறுவர் எனச் சொன்னார்.

சில தரப்புக்களிடையே பதற்ற நிலை அதிகரித்துள்ளதை தணிக்கும் வகையில் அந்த 29 மாடித் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கடந்த வாரம் ஆணையிடப்பட்டது.

முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு உட்பட பல மஇகா மூத்த தலைவர்கள் ஆதரவுடன் கோவில் குழு சிலாங்கூர் அரசாங்கத்துக்கு எதிராக கூட்டம் நடத்திய பின்னர் சர்ச்சை மூண்டது.

ஆனால் 2007ம் ஆண்டு சிலாங்கூர் பிஎன் கட்டுப்பாட்டில் இருந்த போது அந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது என்பதைக் காட்டும் ஆவணங்களை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ பின்னர் வெளியிட்டார்.