பரமக்குடி அருகே நடந்த தாக்குதலில் மூவர் பலி;

மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நாளான நேற்று செவ்வாய்க்கிழமை, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நிகழ்ந்த மோதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் தேவர் ஜெயந்தி அமைதியாகவே நடந்தேறியது, அங்கே நிலைமை கட்டுக்குள்ளேயே இருப்பதாக என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் இறந்த நாளான நேற்றைய தினத்தில் (அக்டோபர் 30-ம் திகதி) அவரது சொந்த கிராமமான பசும்பொன்னில் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் முக்குலத்தோர் குழுமி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவர்.

பொதுவாகவே தென் மாவட்டங்களில் தலித் மக்களுக்கும் முக்குலத்தோருக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், வெளியிடங்களிலிருந்து குருபூஜைக்காக பசும்பொன் செல்வதற்கு எந்தெந்தப் பாதை வழியாகச் செல்லலாம் என்பதை வழமையாக முன்னதாகவே காவல்துறை அறிவித்துவந்தது.

ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் விருத்தாசலத்திலிருந்து சென்ற வாகனமொன்று, தலித் கிராமங்கள் செறிந்த பகுதி வழியே சென்றபோது பாம்புவிழுந்தான் என்ற கிராமத்தில் மோதல் மூண்டிருக்கிறது,

வாகனத்தில் இருந்த பயணிகள் தப்பிவிட்டனர் ஆனால் அதன் ஓட்டுநர் கொல்லப்பட்டார். அதேபோல முதுகுளத்தூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பொன்னையாபுரம் கிராமத்தில் அடித்துக் கொல்லப்பட்டனர். இக்கொலைகள் தொடர்பாக 15 பேர் கைதாகியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பரமக்குடியில் தலித் மக்களின் தலைவராகக் கருதப்படுகிற மறைந்த இமானுவேல் சேகரனின் அஞ்சலிக்காக குழுமிய தலித்துக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

TAGS: