மசீச: பத்து மலை கொண்டோவுக்கு சிலாங்கூர் மந்திரி புசாரே காரணம்

பத்து மலை கொண்டோமினியம் கட்டுவதற்கு செலாயாங் கவுன்சிலர்கள் யார் ஒப்புதல் கொடுத்திருந்தாலும் இறுதிப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்தான் என்கிறார் சிலாங்கூர் மசீச தலைவர் டோனல்ட் லிம்.

பாரிசான் நேசனலின்கீழ் இருந்த செலாயாங் நகராட்சி மன்றம்(எம்பிஎஸ்) கொண்டோவுக்குத் திட்டமிட மட்டுமே ஒப்புதல் கடிதம் வழங்கியிருந்தது. ஆனால், அங்கு 29-மாடி கொண்டோமினியம் கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கடிதம் 2008 ஜூன் 26-இல், அதாவது 2008 மார்ச் மாதம் மாநில ஆட்சி பக்காத்தான் ரக்யாட் கட்சியின் கைக்குச் சென்றபின்னரே வழங்கப்பட்டிருக்கிறது.

அப்போது அவர்கள்தான் ஆட்சியில் இருந்தார்கள். எனவே அவர்கள்தான் பொறுப்பு”.

மசீசவைப் பொறுத்தவரை, மார்ச் மாதத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து நகராட்சி மன்றத்தில் இடம்பெற்றிருந்த பிஎன் நியமன உறுப்பினர்கள்  உடனடியாகக் பதவி துறந்தனர் என்றாரவர்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய டோனல்ட், யார் ஒப்புதல் கொடுத்திருந்தாலும் காலிட் நினைத்திருந்தால் மன்றத்தின் ஒப்புதலை இரத்துச் செய்திருக்கலாம் என்று வாதிட்டார். அதற்காக நான்காண்டுகள் காத்திருந்திருக்க வேண்டியதில்லை என்றார்.

“ஆட்சியில் இருக்கும் நீங்கள் மற்றவர்கள்தான் ஒப்புதல் கொடுத்தார்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள்தானே எம்பி. எதையும் மீறும் அதிகாரம் உங்களுக்கு உண்டு.

“….மாநில ஆட்சிக்கு வந்த பின்னர் என்னென்ன திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்ர்கும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

“சில கவுன்சிலர்கள் தவறுதலாக ஒப்புதல் கொடுத்திருந்தால் அதை மாற்ற வேண்டும். இது மாநில ஆட்சிக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்று பழியைத் தூக்கி மற்றவர்கள்மீது போடக்கூடாது”.

முந்தைய பிஎன் அரசாங்கத்தைக் குறை சொல்லாதீர்

இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்காமல் அப்துல் காலிட் (இடம்) வேண்டுமென்றே முந்தைய பிஎன் அரசைக் குறைகூறுகிறார் என்றும் லிம் குற்றம்சாட்டினார்.

“அவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யவில்லை…..பழியைத் தூக்கி முந்தைய அரசின்மீது போடுகிறார்கள்.

“இப்போது கிட்டதட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அப்படி (பிஎன் ஆட்சிக்கு வந்தால் கொண்டோ திட்டத்தை நிறுத்துவதாக)ச் சொன்னதும் மக்கள் செல்வாக்கைப் பெறுவதற்காக அப்படிச் சொல்வதாக எம்பி கூறுகிறார்”.

பத்து மலைக்கருகே அமையவுள்ள இந்த கொண்டோ திட்டம், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்து கோயிலையும் பாதிக்கலாம் என்று மஇகா தொடர்புடைய ஆலய நிர்வாகக் குழு கூறியதை அடுத்து  சர்ச்சைக்கு இலக்கானது.

செனட்டரும் முன்னாள் எம்பிஎஸ் கவுன்சிலருமான ஏ.கோகிலன் பிள்ளை (வலம்) கொண்டோ திட்டத்துக்கு பக்காத்தான் அரசுதான் காரணம் என்று கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.

ஆனால், எதிர்வினையாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு, கொண்டோ திட்டத்துக்கு 2007-இலேயே ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது என்றும் அப்போது கோலிலனும் ஒரு கவுன்சிலராக இருந்தார் என்றும் உரைத்தார்.

பிஎன் கட்சிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததை அடுத்து எம்பிஎஸ், 2007 நவம்பர் 29 நடைபெற்ற மன்றத்தின் கூட்டக்குறிப்பை வெளியிட்டது. அது, கோகிலனும் பிஎன் கவுன்சிலர்கள் 19 பேரும்-அவர்களில் மூவர் மஇகாவினர்- கொண்டோ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதைக் காண்பித்தது.

ஆனாலும், அத்திட்டம் தொடர்பில் ஒரு தரப்பு மற்றொரு தரப்பைக் குறை சொல்லும் படலம் தொடர்கிறது. பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இவ்விவகாரம் இப்போது ஓயும் என்று தோன்றவில்லை.