டாட்டாரான் மெர்டேகா ‘சீரமைப்புப் பணிகளுக்காக’ மீண்டும் மூடப்பட்டது

இன்று ஹிம்புனான் ஹிஜாவ் இயக்கத்தினர் டாட்டாரான் மெர்டேகாவை நோக்கி நடைப்பயணத்தைத் தொடர்ந்துள்ள வேளையில் அது மூடப்பட்டுள்ளது. மெர்டேகா சதுக்கத்தைச்   சீரமைத்து தரமுயர்த்தும் பணிகள் நடப்பதாக கோலாலும்பூர் மாநராண்மைக் கழகம் (டிபிகேஎல்) அறிவித்துள்ளது.

இன்று காலை சுமார் 100 போலீசாரும் டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகளும் அங்கிருந்தனர்.

டாட்டாரான் மெர்டேகாவின் இரு முனைகளிலும், ஜாலான் துன் பேராக்கிலும் லெபோ பசார் புசாரிலும், ஏப்ரல் 28 பெர்சே பேரணி 3.0-இன்போது செய்யப்பட்டதைப் போலச், சாலைத் தடுப்புகள் போடப்பட்டிருந்தன,

“இங்கு எவ்வித நடவடிக்கைக்கும் இடமில்லை” என்று கூறும் கோலாலும்பூர் நகர மேயர் அஹ்மட் பீசல் தாலிப்பின் உத்தரவைக் கொண்ட  அறிவிப்பும் சாலைத்தடுப்பின் நடுவே வைக்கப்பட்டுள்ளது.

டாட்டாரான் மெர்டேகாவில் சீரமைப்புப் பணிகள் நடப்பதால் அது மூடப்பட்டதாக டிபிகேஎல் கூறியது. அங்கு தொங்க விடப்பட்டிருக்கும் பதாகை ஒன்று சீரமைப்புப் பணிகள் செப்டம்பர் 13-இல் தொடங்கியதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-வரை அது தொடரும் என்றும் தகவல் தெரிவிக்கிறது.

சீரமைப்புப் பணிகள் புல் திடலிலும் அதை அடுத்துள்ள நீரூற்றிலும்தான் நடக்கின்றன, ஆனால், டாட்டாரானுக்கு பக்கத்தில் உள்ள சாலையையும் மூடியிருக்கிறார்கள்.

என்றாலும், சுற்றுப்பயணிகள் டாட்டாரானுக்குச் செல்வதையும் அங்கு படம் எடுப்பதையும் அதிகாரிகள் தடுக்கவில்லை.

அங்கிருந்த டிபிகேஎல் அமலாக்க அதிகாரியை அணுகி சாலை மூடப்பட்டதைப்  பற்றிக் கேட்டதற்கு, வார இறுதிகளில் அச்சாலையை மூடுவது வழக்கம்தான் என்றார்.

போலீஸ் அதிகாரி ஒருவர், சீரமைப்புப் பணிகள் நடப்பதால் சாலையில் ஆணிகளும் கடினமான பொருள்களும்  விழுந்து அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களைக் கிழித்து விடலாம் என்பதால் சாலையை மூடிவிட அதிகாரிகள் தீர்மானித்தனர் என்றார்.

பசுமை இயக்கத்தினரின் நடைப்பயணத்துக்கு இதற்கும் தொடர்புண்டா என்று வினவியதற்கு அவரால் நேரடியாக பதில் அளிக்க முடியவில்லை. உத்தரவுப்படி நடந்துகொள்வதாகக் கூறினார்.

இதனிடையே, பசுமை இயக்கத்தினர் கோம்பாக்கில் பாஸின் முன்னாள் தலைமையகத்திலிருந்து தங்கள் நடைப்பயணத்தைத் தொடர்ந்துள்ளனர். மாலை மணி 4-க்கு அவர்கள் டாட்டாரான் மெர்டேகாவை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.