அம்னோவுக்கு பலம்; மற்ற இனங்களுக்குப் பலவீனம்!

கோபி: அம்னோ பேரவை பற்றி கோமாளியின் கருத்து என்ன?

கோமாளி: அம்னோ மிகவும் பலமானது. மலாய்க்காரர்களின் அரசியல் ஆணிவேர் அது. மிகவும் ஆழமாக வேரூண்றியுள்ள அதை மாற்றுவது இயலாத செயல். அம்னோ மாறும் என்றும் அல்லது மாறிவிட்டது என்பதெல்லாம் குதிரைக்கு கொம்பு முளைத்துவிட்டது என்று புலம்புவதற்கு ஒப்பாகும். அம்னோ மாறாதவரை தேசிய முன்னணி மாறாது.

எதிர்வரும்  13-வது பொதுத்தேர்தலின் போது தேசிய முன்னணியின் கீழ் சீனர் அல்லது இந்திய வேட்பாளர்கள் யாராவது வெற்றி பெற வேண்டுமானால் அது அம்னோவின் ஆதரவில்தான் முடியும். அம்னோ இல்லையென்றால் மசீச, மஇகா, பிபிபி, கெராக்கான் போன்ற கட்சிகள் தங்களது கடைகளை மூட வேண்டியதுதான்.

பலமான அம்னோதான் இந்த மசீச, மஇகா, பிபிபி, கெராக்கான் போன்றவற்றிற்கு  உயிர் நாடி. அதேவேளை, மலாய்-இஸ்லாம் என ஆழமான இனவாத ஆக்கிரமிப்பையும் அதிகாரத்தையும் அம்னோ கையாண்டால்தான் அது மலாய்காரார்களின் நம்பிக்கையைப் பெற இயலும். இதில் சிக்குண்ட மசீச, மஇகா, பிபிபி, கெரக்கான் போன்றவற்றின் நிலை புகைக்கு தப்பி அடுப்பில் விழுந்த மாதிரிதான்.

உதாரணமாக தற்போது நடைபெறும் அம்னோ பேரவையில் விவாதங்களைப் பார்க்கும் போது அதன் ஆழமான இனவாதம் தென்படும். ஒரே மலேசியா என்று பேசுவதும் பல்லின நாடு என்பதெல்லாம் நாடகம் என்பதும் புலப்படும்.

இறுதியில் சீனர்-இந்தியர்களைப் பிரதிநிதிக்க அம்னோவுக்குத்  தேவை மகுடிக்கு ஆடும் இனவாத பிரதிநிதிகள் அவ்வளவுதான். இவர்களால் மக்களின் உரிமைகளைக்  காக்க இயலாது. இவர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  வலிமையற்ற இவர்களால் சமூகம் மேலும் பலவீனமடையும். இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான் என்பதுபோல் நாம் மீண்டும் அம்னோவின் ஆட்சியில் அவதிப்படுவோம்.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை நிருபிக்கும் இதோ சில அம்னோ பேரவையின் செய்திகள்:

“தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமான மலேசியாவை விடுவிப்பதற்கும் தேர்வு செய்யப்பட்ட மலாய் இனத்தை மேம்படுத்தவும் இறைவன் தேர்வு செய்த கட்சி அம்னோ”

“நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் தேர்வு செய்யப்பட்டவர்கள்”

“மலேசியாவை விடுவித்து அம்னோ நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதும் இறைவனுடைய தேர்வாகும். இஸ்லாத்தின் கீழ் மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்தியது அம்னோவே.”

முகைதின் யாசின் –  “(பக்காத்தான்) கட்சிகளுக்கிடையில் கொள்கை மோதல்கள் உள்ளன என்பதால் குழப்பம் உருவாகும் என்றுதான் சொல்ல வந்தோம்”.

ஷரிசாட் உரையின் வாசகத்தில் – “அம்னோ அரசாங்கத்திலிருந்து அகற்றப்பட்டால் மலாய் சமூகம் ஏமாற்றமடையும். நாட்டின் அரசியல் நிலைத்தன்மையும் ஆட்டம் காணும்; அது இனப் பதற்ற நிலைக்கு வழி வகுத்து 1969 மே 13 துயரச் சம்பவம் மீண்டும் நிகழக் கூடும் என நான் கவலைப்படுகிறேன். நமது நாட்டில் வெறுப்பைத் தரும் அந்த நிகழ்வு மீண்டும் நிகழ்வதைக் காண நாம் விரும்புகிறோமா ? நிச்சயமாக இல்லை”.

முகைதின் – “அம்னோ புத்ரா ஜெயாவில் உள்ள பிடிமானத்தை இழந்தால் நாடு நிலைகுலையலாம். நாட்டைப் பாருங்கள், 60 விழுக்காட்டுக்குமேல் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்கள்தான். அவர்களுக்கு உரியதோர் இடம் இல்லை என்றால் என்ன ஆகும் என்பதை எண்ணிப் பாருங்கள்?”